தி.மு.க

“அலட்சியத்தால், அக்கறை இன்மையால் இனியும் நாட்களை வீணடிக்க வேண்டாம்” - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

அலட்சியத்தால், அக்கறை இன்மையால் இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து விடாதீர்கள்” என முதல்வர் பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“அலட்சியத்தால், அக்கறை இன்மையால் இனியும் நாட்களை வீணடிக்க வேண்டாம்” - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அலட்சியத்தால், அக்கறை இன்மையால் , தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்” என முதல்வர் பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊடரங்கு - ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 90 நாட்கள் ஆகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று நினைத்த மத்திய,மாநில அரசுகள் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிதளவும் கைகொடுக்கவில்லை. விரல்களைக் கொண்டு ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை. மூன்று மாத கால முழு முடக்கம் காரணமாக, தினக் கூலிக் காரர்களுக்கு வேலையில்லை, சிறிய - பெரிய வணிகர்களுக்கு வியாபாரம் இல்லை, தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் இல்லை; கூலி இல்லை, வருமானம் இல்லை வாழ்வாதாரம் முழுவதையும் மொத்தமாய்த் தொலைத்து இழந்து துன்பங்களால் தவிப்போர் குறித்து இரண்டு அரசுகளும் சிறிதேனும் சிந்தித்ததா என்றால் இல்லை.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களை வாழ்விப்பதற்காக, 20 லட்சம் கோடி ரூபாய்க்குத் திட்டம் தீட்டியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது தொடர்பாக நிதி அமைச்சர் விளக்குவார் என்றார். அவர், ஏதோ கீதோபதேசம் போல, நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த விளக்க உரைகளில், திட்டம் - கடன் - சலுகைகள் இருந்ததே தவிர, தேவைப்படும் நிதி இல்லை. இந்த கொரோனா காலத் துயரத்திலிருந்து அவர்கள் மீள்வதற்கு நிவாரண நிதி கொடுக்கச் சொன்னால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல, சுய சார்பு இந்தியா என்ற மெகா பெயரில், திட்டங்களைத் தீட்டியது மத்திய அரசு. வாழ்க்கை எப்படியும் கைவசப்படும் என்ற கனவோடு, அதைத் தேடி நெடும்பயணம் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடியில் உதவி என்று அறிவித்துவிட்டு, 50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலைக்கு இவர்களை பயன்படுத்தப் போவதாக, அதுவும் 6 மாநிலங்களுக்கு மட்டுமான திட்டத்தைத் தீட்டி, அவர்களையும் கை கழுவியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அனைத்துக்கும் மேலாக பெட் ரோல், டீசல் விலையை கடந்த பல நாட்களாக தினமும் உயர்த்தி, கொரோனா காலத்திலும் மக்களின் சட்டைப்பையில் மிச்சமிருக்கும் பணத்தையும் பறித்து வருகிறது.

“அலட்சியத்தால், அக்கறை இன்மையால் இனியும் நாட்களை வீணடிக்க வேண்டாம்” - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

'கொனோரா வென்றான்' என்ற பட்டத்துக்கு இப்போதே குதூகலத்துடன் தயாராகிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசைப் பற்றி எதுவும் சொல்லவே வேண்டியதில்லை. மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு சலுகை உண்டா? என்றால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று திருப்பிக் கேட்கும் முதலமைச்சர் இவர். அம்மா உணவக ஊழியர்க்கு ஊக்க ஊதியம் உண்டா என்றால், 'அவர்கள் ஏற்கனவே பார்த்த வேலையைத்தானே பார்க்கிறார்கள்' என்று சொன்னார். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் உண்டா என்றால், “ஆம்புலன்ஸ் ஊழியர்கள்னா யாரு” என்று கேட்டார் முதல்வர். இந்த கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட் ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையையும் ஏற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குங்கள் என்று தொடக்கத்திலிருந்தே நான் கோரிக்கை வைத்து வருகிறேன். இரக்கமற்ற முதலமைச்சருடைய இதயம் சற்றும் இறங்கிவரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தேன். அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அதற்கும் இந்த அரசு ஏனோ செவி சாய்க்கவில்லை. பொது முடக்கம் இருந்தால் தானே இந்தக் கோரிக்கைகள் வரும் என்று நினைத்த முதலமைச்சர், ஊரடங்கை தளர்வுக்கு மேல் தளர்வு செய்து, அந்தச் சட்டத்தின் சாரத்தையே மண்ணில் கொட்டிவிட்டார். 'ஐயா எடப்பாடி அவர்களே! எங்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களைக் கொடுங்கள்! அதன் பிறகு ஊரடங்கைப் போடுங்கள்' என்று சமூக ஊடகங்களில் பெண்கள் பலர் வீடியோக்களில் பேசி, பதிவிடுவது முதலமைச்சரின் காதில் விழவில்லை.

பொதுமக்களுக்கு மின்கட்டணம் செலுத்த ஜூலை 31 வரை காலஅவகாசம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு அளித்துள்ள பதிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 15 ஆம் தேதி வரை கால அவகாசம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதும் இந்த நான்கு மாவட்டங்கள் மட்டும் தானா? மற்ற மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லையா? மொத்த மாநிலமே முடங்கிக் கிடக்கும் போது, நான்கு மாவட்டத்தை மட்டும் பிரித்து சலுகைகள் அறிவிப்பது எதற்காக?

“அலட்சியத்தால், அக்கறை இன்மையால் இனியும் நாட்களை வீணடிக்க வேண்டாம்” - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

ஒரு ஜனநாயக அரசு, பேரிடர் காலத்தில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் செய்யவில்லை,தர வேண்டிய சலுகைகளையும் வழங்கவில்லை, கொரோனாவையும் தடுக்கவில்லை, அதன் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை, மரணம் அடைகின்றவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த நிலையில் பெட் ரோல், டீசல் விலையையும் நாளுக்கு நாள் அதிகரிப்பேன், மின்கட்டணத்தையும் செலுத்தக் கட்டாயப் படுத்துவேன் என்று, மக்கள் மீது நிதிநெருக்கடித் தாக்குதலை எடப்பாடி பழனிசாமி தொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், அவருக்கு உள்ளம் இருக்கவேண்டிய இடத்தில், அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போல, ஒரு பள்ளம் இருக்கிறதா?

தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை வீடுவிடாகச் சென்று தர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆயிரம் ரூபாயை வீடுவீடாகச் சென்று வழங்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். ஒரு தெருவுக்குச் சென்று பொதுவான இடத்தில் நின்று கொண்டு, மக்களை அங்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். இதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், தனிமனித இடைவெளியில்லாமல் போனதும், இதன் மூலமாகவும் கொரோனா பரவலும் நடக்கிறது. அரசாங்கம் ஒரு உத்தரவு போடுகிறது என்றால், அந்த உத்தரவை அரசு அதிகாரிகளே மதிக்கவில்லை என்றால், தட்டிக் கேட்க வேண்டியது அரசாங்கம் தானே? அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?

'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்று பெயர் பெற்ற மாநகரத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனம் வெந்து நொந்து, தங்கள் ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள் என்றால், அதற்கு கொரோனா பீதி மட்டுமே காரணமல்ல; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் எதையும் செய்ய முன்வரவில்லை, அநியாயமாகக் கைவிட்டுவிட்டதே என்ற சோகத்திலும் விரக்தியிலும் தான் புறப்பட்டுச் செல்கிறார்கள். இந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையா இல்லையா? வாழ்க்கை விரட்டுகிறது, அத்தோடு சேர்ந்து அரசாங்கமும் மேலும் விரட்டுகிறது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? முதல்வர் நாற்காலி, அமைச்சரவை, அரசாங்கம், நிதிக்கருவூலம், கோட்டை என அத்தனையையும் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதானே இம்மக்களைக் காக்க வேண்டும்? வேறு யாரையாவது அவர் கைகாட்டிவிட்டு, கண் காணாத இடத்திற்குப் போய் ஒளிந்து கொள்ள முடியுமா?

கொரோனா பரவி தினமும் 2,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்; தினமும் 50 பேருக்கு மேல் இறந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் அதிகம் பரவி வந்த தொற்று, கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு வழியற்ற எடப்பாடி பழனிசாமி, கோவைக்கும் திருச்சிக்கும் பயணமாகிறார். குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிடவும், இதர கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் எதேச்சதிகாரம் பெருகி வருவதையே இது காட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே! தமிழ்நாட்டு மக்கள் இப்போது இருப்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 'கோல்டன் பீரியட்' ஆகும்; இதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால் , தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் .

கொரோனா பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்; வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள்! காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து எப்படியாவது தப்பித்து நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories