தி.மு.க

வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து தி.மு.க தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தி.மு.க மீது வீண்பழி சுமத்துவதா என அமைச்சர் ஜெயகுமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து தி.மு.க தலைவர் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கோ, டெல்லிக்கு தாம் கொண்டு சென்ற கடிதம் குறித்த விவரங்கள் குறித்தோ பதில் சொல்ல துப்பின்றி, தி.மு.க மீது வீண்பழி சுமத்துவதற்கு வெட்கமாக இல்லையா?” என அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக எங்கள் கழகத் தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்”என்று அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமி 9.2.2020 அன்று வெளியிட்ட “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” அறிவிப்பில் சந்தேகங்கள் பல உள்ளன என்பதை முதன்முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டிருப்பது எங்கள் கழகத் தலைவரின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், விவசாயிகளுக்காக அவர் எழுப்பிய உரிமைக்குரலையும் நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

ஆனாலும் வழக்கம்போல் தி.மு.கவையும் எங்கள் கழகத் தலைவரையும் வம்பிழுக்கும் நோக்கில் சில வீண் பழிகளை தனது அறிக்கையில் சுமத்தியுள்ளார். பாவம்! டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐயிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில், எங்கள் கழகத் தலைவர் மீது “மீத்தேன் திட்டம் குறித்து”ஏதோ உளறிக் கொட்டியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவர் மட்டுமின்றி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டுவிட்டது.

இதை ஏதோ அ.தி.மு.க எதிர்த்தது போல் ஜெயக்குமார் கூறியிருந்தாலும், அ.தி.மு.கவின் இணையதளத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும், குறிப்பாக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வத்துடன் பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியையும் வசதியாக மறந்துவிட்டார். அதுமட்டுமின்றி இத்திட்டம் குறித்த தினமணி பத்திரிகையின் பொய்ச் செய்திக்கு எங்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையைக் கூட அமைச்சர் ஜெயக்குமார் படித்துப் பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்ற எங்கள் கழகத் தலைவர், முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமா் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக அவரே மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல அவரால் முடியவில்லை. அந்தக் கடிதம் வேளாண் மண்டலம் தொடர்புடையதா? அல்லது “சொந்த விஷயங்களுக்காக ”கொடுக்கப்பட்ட கடிதமா? பொதுப் பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் வெளியிடத் தயங்குவது ஏன்? மாநில அரசே இதற்குச் சட்டம் இயற்ற முடியும் என்றால் எதற்காக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது?

வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டல திட்டம் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்கும் அளவிற்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு அந்த அனுமதியை நிறைவேற்ற காவல்துறையை விட்டு பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க அரசா இல்லையா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது அ.தி.மு.க அரசா இல்லையா?

கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை எதிர்த்து போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேச துரோக வழக்குப் போட்டு கைது செய்து, அவரது தந்தையின் மரணத்திற்கு கூட ஜாமின் கொடுக்க மறுத்தது அ.தி.மு.க அரசா இல்லையா? ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக இவ்வளவு அராஜகங்களையும் நிகழ்த்திவிட்டு, பசுத்தோல் போர்த்திய புலி போல் இப்போது புதிய வேஷம் கட்டி வந்து நிற்பது ஏன்? உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.கவிற்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே? அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே மரண அடி தொடரப் போகிறது என்பதற்குத்தானே இப்போது புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

இதற்கெல்லாம் பதில் சொல்ல துப்பு இல்லாத அமைச்சர் ஜெயக்குமார் கூச்சமே இல்லாமல் “எங்கள் தலைவர் ஏதோ ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காகவே முதலமைச்சரின் அறிவிப்பை எதிர்க்கிறார்” என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா?. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. சட்டம், உதய் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் ஆகிய அனைத்திலும் மக்களை குழப்பி- குழம்பிய குட்டையில் மீன் பிடித்து- மாநில அரசின் உரிமைகளைக் மத்திய பா.ஜ.க. அரசிடம் தாரைவார்த்திருக்கும் அடிமை அரசின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றி சுட்டிக்காட்ட என்ன அருகதை இருக்கிறது? ஒரு கடிதத்தில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாமல், அந்தக் கடிதத்தை சுமந்து கொண்டு சென்று மத்திய பா.ஜ.க அமைச்சர்களிடம் கொடுத்து- பவ்யமாக, பணிந்து, நடுங்கி நின்று விட்டு திரும்பியுள்ள ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி மிக முக்கியமாக இருக்கலாம். அதனால் கடித விவரங்களை வெளியிடும் துணிச்சலே இல்லாமல், சுயமரியாதையை இழந்து அடிபணிந்து கிடக்கலாம்.

ஆனால் விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக எங்கள் கழகத் தலைவராகத்தான் இருப்பார். அதே நேரத்தில், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் தற்கொலை – ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எல்லாம் அனுமதித்தது- எல்லா துரோகங்களுக்கும் ஆதரவாகவும், காரணமாகவும் இருந்துவிட்டு “இனி புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை மட்டும் அனுமதிக்கமாட்டோம்” என்று விவசாயிகளை ஏமாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்தால் அதை முதலில் துணிச்சலுடனும் சுயமரியாதையுடனும் எதிர்ப்பதும் எங்கள் கழகத் தலைவரராகத்தான் இருப்பார் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் “அடிவருடிகள்” உணர்ந்து கொள்வது நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories