தி.மு.க

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என உள்ளாட்சிப் பிரதிகளிடம் கேட்டுக்கொண்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தி.மு.க சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தி.மு.க நிர்வாகிகள், செயல்வீரர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு தலைமையேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வது என உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “நாட்டு மக்களும், ஊர் மக்களும் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அதேபோல் கழகமும், நானும் உங்களிடம் இருந்து எதை விரும்பி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வதற்கான மாநாடு தான் இந்த மாநாடு என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் 12 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 243 பேர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் 122 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 2,113 பேர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் 4,032 பேர் என மொத்தமாக நடந்து முடிந்த ஊராட்சித்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6,522 பேர் பரந்து விரிந்த இந்த மாநாட்டு பந்தலில் மகிழ்ச்சியோடு, எழுச்சியோடு கூடியிருக்கிறீர்கள்.

6,679 பேர் இன்றைய கணக்கு. நேற்று தேர்வு செய்யப்பட்டவர்கள், சுயேட்சைகளாக நின்று வெற்றி பெற்றவர்கள், கழகத்தோடு இணைகிறோம் என்ற விருப்பத்துடன் வந்திருக்கிறீர்கள். வந்திருக்கும் உங்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் மனமாற வரவேற்கிறேன். வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழ்நாட்டின் சரிபாதிக்கு மேல் இங்கு வந்து வீற்றிருக்கிறது. திருச்சி மாநாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. தீரர்களின் கோட்டம், திருப்புமுனைகள் பலகண்ட மாவட்டம் திருச்சி. அப்படிப்பட்ட வரலாறு படைத்த மலைக்கோட்டை மாநகரில் பாடிவீடு அமைக்கப்பட்டது போல, மாபெரும் பந்தல் அமைத்து நம்மைப் பெருமைப்படுத்தி உள்ளார் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

மலைக்கோட்டையை கழகத்திற்கே உரிய கோட்டையாக மாற்றிய நேரு, இது போன்ற பல மாநாடுகள் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஆவார். நாமெல்லாம் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு இந்த மாநாட்டின் சிறப்பை உயர்த்திக் காட்டி இருக்கிறார் கே.என்.நேரு.

தலைமைக் கழகத்தின் சார்பில் அவருக்கு முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணன் துரைமுருகன் பேசும்போது சில நிகழ்வுகளைப் பற்றிச் சொன்னார். தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என ஆலோசித்தபோது, திருச்சியைத் தேர்ந்தெடுத்தோம். மாவட்டச் செயலாளராக அன்றைக்கு பொறுப்பில் இருந்த நேருவை அழைத்து அவரிடத்தில் அந்தத் தகவலைச் சொன்னோம். அவரும் ஏற்றுக்கொண்டு அந்தப் பணியைத் தொடங்கினார். இந்தக் கூட்டம் கருத்துக்களைக் கேட்கக்கூடிய கூட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால், ஒரு மாநாட்டையே நேரு இங்கு நடத்தி காட்டி இருக்கிறார்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

கே.என்.நேருவிடம் ஒரு வேலையைக் கொடுத்து 100 மடங்கு செய்யச் சொன்னால், அதை 300 மடங்கு அதிக சிறப்புடன் செயல்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்தவர். அதனால்தான், திருச்சி மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பணியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவருக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்னதான் அவர் பலமுறை சென்னை வந்து என்னிடம் வாழ்த்துப் பெற்றிருந்தாலும், இங்கே அவர் மாவட்டத்திற்கே வந்து உங்கள் முன்னிலையில் பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டின் மையப்பகுதி மட்டும் அல்ல, கழகத்தின் மையப்பகுதியும் இந்தத் திருச்சிதான். ஏன் என்றால் முதன்முதலில் தலைவர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினராக 57ம் ஆண்டு ‘குளித்தலைத் தொகுதிக்கு செல், அங்கே போய் நில்’ என்ற அண்ணா ஆணையை ஏற்று அங்கு வந்தார் நின்றார், வென்றார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திருச்சியில் இன்றைக்கு தமிழகமே கூடியிருக்கிறது. நீங்கள் எல்லாம் வெற்றி பெற்ற பெருமிதத்துடன் வந்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில் சுடர்விடும் ஒளியைப் பார்க்கும்போது நானும் பெருமிதம் அடைகிறேன். உங்களை விட பலமடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்துள்ளேன். நேற்று பெற்ற வெற்றியை மட்டுமல்ல. நாளை நாம் பெறப் போகும் வெற்றியையும் நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் பெற்றுள்ளது சாதாரண வெற்றியல்ல. அசாதாரணமான வெற்றி. மகத்தான வெற்றி. ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலம், போலிஸ் பலம் அனைத்தையும் தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

அதுமட்டுமின்றி மாநில அரசின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அக்கிரமம் அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளீர்கள். மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது பெயர்தான். ஆனால், அது அ.தி.மு.கவின் தலைமைக் கழகமாக இருக்கிறது. அதுதான் உண்மை. அதனால்தான் சொன்னேன் உங்களது வெற்றி சாதாரண வெற்றி அல்ல. மகத்தான வெற்றி.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் வரலாற்றைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது வாடிக்கையாக இருந்துள்ளது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இதுதான் புதிய வரலாறு. இதற்குக் காரணம் ஆளும் கட்சி மீதான கோபம் மட்டுமல்ல; மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கை.

பொதுமக்களின் துன்பங்களை நீக்குவதற்கு, துயரங்களை துடைப்பதற்கு, திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, கஷ்டங்களைக் களைவதற்கு, கவலைகளைச் சொல்வதற்கு, நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்கு திமுக மட்டுமே பொருத்தமான அமைப்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பெயரை நாம் காப்பாற்றியாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி எனும்போது, அதில் இருந்து வந்தவன் நான் என்பதால், எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதேபோல் உள்ளாட்சி அமைப்பு என்றால், அதில் இருந்து வந்தவன் நான் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

உள்ளாட்சித் துறையில் சென்னை மாநகரத்தின் மேயராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1996ஆம் ஆண்டு முதல் முறையாக மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற சிறப்பையும் பெற்று, 1996 ம் ஆண்டு முதல் முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான் தேர்வானேன். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2வது முறையாக மேயராகத் தேர்வு செய்யப்பட்டேன்.

1996ம் ஆண்டு மேயராகப் பதவி ஏற்ற போது, ‘எனக்கு வாக்களித்த மக்கள் வருந்தாத அளவுக்கும், வாக்களிக்காத மக்கள் இவனுக்கு வாக்களிக்கத் தவறி விட்டோமே என்று நினைக்கும் அளவுக்கும் என் பணி இருக்கும்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் பதவி ஏற்றேன். அதைத்தான் உங்களுக்கு தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

தலைவர் கலைஞர் அவர்கள் ராஜரத்தினம் அரங்கில் ஒன்றிய தலைவர்களுக்கு ஜீப் வழங்கிய நிகழ்ச்சியை வேலு நினைவுகூர்ந்தார். அந்த விழாவில் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞரே பங்கேற்று ஜீப் வழங்கிப் பேசினார். அப்போது, ‘நான் என்னதான் முதலமைச்சராக இருந்தாலும், ஸ்டாலினைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கக் கூடாதா என்ற பொறாமை வந்துவிட்டது’ என்று கலைஞர் சொன்னார். கலைஞரே பொறாமைப் படக்கூடிய அளவுக்கு என்னுடைய பணி இருந்தது என்பதை ஏன் இங்கு நினைவுபடுத்துகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அதற்கேற்பப் பணி புரியவேண்டும் என்று கூற விரும்புகிறேன். இன்று வருகை தந்துள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இதனைத்தான்.

உங்களை தேர்ந்தெடுத்துள்ள மக்கள் தாங்கள் தவறு செய்து விட்டோம் என்று நினைத்துவிடக்கூடாது. வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு உங்கள் பணி அமையவேண்டும். அப்படி அமைந்தால் தான் உங்களுக்கும், எங்களுக்கும், திமுக வுக்கும், கலைஞருக்கும், அண்ணாவுக்கும் பெருமை.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் முதன்முதலாக மேயராக நின்று 1996ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு வந்தேன். சென்னையை எனது கால்களால் நடந்து நடந்து அளந்தேன். தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை சென்னையை சுற்றிச் சுற்றி சுழன்றேன். சென்னையில் 10 பாலங்கள் மதிப்பிட்டுத் தொகையைவிட குறைவாக கட்டி மாநகராட்சியின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிச்சப்படுத்தி, அந்தப் பணியைச் செய்து முடித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் என்னை பயிற்றுவித்து அந்த பொறுப்பில் அமரவைத்து அழகு பார்த்தார்கள். ஊரைப்பார் ஊரிலே உள்ள மக்களைப் பார், அவர்களது தேவை என்னென்ன என்று அறிந்து கொள். அதை காலம் தாழ்த்தாமல் செய்து முடி என்பதையே கலைஞர் எனக்குக் கற்றுக் கொடுத்த பயிற்சியாக இன்றைக்கும் கருதிக்கொண்டிருக்கிறேன்.

மக்கள் தொண்டின் அடிப்படை அரிச்சுவடியே அவர்களது குறைகளைத் தீர்க்கிறோமோ இல்லையோ, அவற்றைக் காது கொடுத்து கேட்டாலே, பாதி அளவு சுமை குறைந்து அவர்களது மனம் நிறைந்து விடும். குறைகளைக் கேட்டு அவற்றை நிறைவு செய்யும் பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

சென்னையே மழையில் மிதந்தது. வீட்டை விட்டு மக்கள் வெளியில் வரமுடியவில்லை. அப்போது அவர்களோடு இருந்து, அவர்களது துன்பங்களைக் களையும் பணியில் ஈடுபட்டேன். கடும் மழை காரணமாக நகர்ப் பகுதிகள் தண்ணீரில் மிதப்பதை முடிந்த அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். தூய்மை, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி ஆகியவைதான் மக்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் அடிப்படையான கோரிக்கைகள். அவைதான் உள்ளாட்சி அமைப்பின் பணிகள். அதை அடிப்படையாக வைத்துத்தான் சிங்காரச் சென்னைத் திட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.

அதன்மூலம் மக்களிடம் நற்பெயர் எடுத்தோம். தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்திக் காட்டினோம். சென்னை மக்களின் போக்குவரத்துப் பிரச்சனையை முடிந்தவரை போக்கினோம். நம்மவர்கள் பாராட்டுவதை விட வெளியில் இருப்பவர்களின் பாராட்டை அதிகம் பெற்றேன்.

தமிழகத்தில் மூத்த தேசியவாதி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், ‘மாநகராட்சி பள்ளியில் படிப்பது கேவலம் என நினைப்பார்கள். மேயராக இருந்தபோது அதை மாற்றிக் காட்டியவர் ஸ்டாலின் தான்’ என வெளிப்படையாகச் சொன்னார். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு என்ன சொன்னார் தெரியுமா? மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனநாயகத்தை கொண்டுவந்து, நேரம் இல்லா நேரம், கேள்வி நேரம், விவாதம் என்ற நிலையை ஏற்படுத்தியது ஸ்டாலின்தான் என்று பாராட்டினார்.

மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளைப் பொறுத்தவரை செயல்திறன் மிக்க தலைவராக ஸ்டாலின் விளங்குகிறார் என பிரபல ஆங்கில பத்திரிகையான இந்து பாராட்டி இருந்தது. இவற்றையெல்லாம் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியுமா?

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

நான் மேயராக இருந்த போதே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 2001ல் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக வந்து அமர்கிறார். அவர் வந்த பிறகு பல இடையூறுகள். பல குடைச்சல்கள். எந்தப் பணியும் செய்யமுடியவில்லை. முறையாக நிதி ஒதுக்கவில்லை. அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதை ஓரளவு சரி செய்தோம். பின்னர் 2001ல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல். தி.மு.க தலைவர்கள் மட்டும் இன்றி கூட்டணிக்கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து 2வது முறையாக மேயர் பதவி வேட்பாளராக என்னைத்தான் நிற்க வைத்தார்கள். என்னுடய வெற்றியைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தது. தற்போது நடந்ததைவிட பலமடங்கு அக்கிரமங்கள் நடைபெற்றன. ஓட்டுப் போடும் இடத்தில் கலவரம். ஏஜெண்டுகளை விரட்டிவிட்டு அவர்களே ஓட்டுப் போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கும் சென்று அதில் மாற்றம் செய்யும் அக்கிரமங்களும் நடைபெற்றன.

வாக்கு எண்ணிக்கை முறையாக நடந்திருந்தாலே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், இவ்வளவு அக்கிரமங்களையும் தாண்டி 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

என்னுடைய வெற்றியை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தேன். ஒருவருக்கு இரு பதவிகள் இருக்கக்கூடாது என்ற சட்டத்தை எனக்காகவே அம்மையார் ஜெயலலிதா அப்போது கொண்டுவந்தார். எனவே 2 பதவிகளில் எதில் இருந்து விலகலாம் என யோசித்தபோது, ‘அ.தி.மு.க ஆட்சியில் மேயராக இருந்து மக்கள் நலப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியாது; எதையும் யோசிக்க முடியாது; எனவே மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாக மட்டும் இரு’ என தலைவர் கலைஞர் சொன்னார். அதன்படியே மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

அதற்குப் பிறகு நடைபெற்ற 2006 தேர்தலில் சென்னையில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் நான் மேயராக இருந்து செய்த பணிகளுக்கு மக்கள் தந்த அங்கீகாரம். அதைத்தான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எந்த ஊரில் எந்தப் பகுதியில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்களோ, அந்தப் பகுதிக்கு, மக்களுக்கு நன்மைகள் செய்கிற, அவர்களது குறைகளைப் போக்குகிற பணிகளைத் தொடர்ந்து செய்தீர்கள் என்றால் அந்தப் பகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றிட முடியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பது குறித்து உங்களிடம் கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக உள்ளது.

அவ்வப்போது வெளியிடப்படும் அரசு ஆணைகளைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதைப் பயன்படுத்தி, மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள். கிராமசபைக் கூட்டங்களின் மூலமாக மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து கொள்ளலாம். அரசு குறிப்பிட்டுள்ளதை விட அதிக அளவில் அந்தக் கூட்டங்களை நடத்துங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. அதில் அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக இளைஞர்களை, பெண்களை அதிக அளவில் பேச வையுங்கள். அதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் ஊராட்சி சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. அதை உடனே நீங்கள் எடுத்தாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுங்கள்.

தற்போது கூட செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் குறித்து ஒரு அமைச்சர் கூறியதை பொருளாளர் இங்கே சுட்டிக்காட்டினார். இதுகுறித்து கவர்னரிடத்திலும் எடுத்து உரைத்துள்ளோம். சட்டப்படி அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருக்கிறோம் என்ற நிலையில் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இப்போதும் சொல்கிறேன். சட்டமன்றம் மட்டும் அல்ல, இந்த பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கும் எடுத்து செல்வோம். நீதிமன்றம் வரை நாங்கள் செல்வோம். கவலைப்படவேண்டாம்.

ஊராட்சிகளில், ஒன்றியங்களில், மாவட்ட பஞ்சாயத்துகளில் மக்களோடு மக்களாக இணைந்து நீங்கள் பணியாற்றுங்கள். மக்கள் குறைகளை தெரிவித்தால், அந்த இடத்திற்கு நீங்கள் நேரடியாகச் செல்லுங்கள். 2 நாட்களுக்கு முன்னர் கொளத்தூர் தொகுதியில் நான் வலம் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடிக்கடி கொளத்தூர் செல்கிறீர்களே என அண்ணன் துரைமுருகன், பொன்முடி இருவரும் கூட அவ்வப்போது கேட்பார்கள். வெளியூர் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை வந்தால் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்கவேண்டும். இல்லையென்றால் கோபம் வரும். என்னை மட்டும் அல்ல கட்சி முன்னோடிகள் யார் சென்னை வந்தாலும் அவரைச் சந்திக்காமல் சென்றால் கோபப்படுவார். அந்த ஊரின் பிரச்னைகள் குறித்து அவரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி இருந்த காரணத்தால்தான் இன்றைக்கும் இந்தக் கட்சி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அதுதான் தலைவர் கலைஞர். வெளியூரில் இருந்து வந்தால் உடனே தொகுதிக்குச் செல்வேன். பின்னர்தான் தலைவரைச் சந்திப்பேன். அப்போது, ‘எங்கே சென்றாய். கொளத்தூரில் அப்படி என்னதான் வைத்திருக்கிறாய்? நிரந்தரமாக அங்கேயே நிற்க போகிறாயா’ எனக் கேட்பார். ‘நான் நிற்கிறேனோ இல்லையோ உதயசூரியன் நிச்சயம் அங்கு நிற்கும்’ என்று சொல்வேன்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக கலந்து பழகி அவற்றை அறியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குறைகள் பற்றி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துங்கள். அந்த ஊரில் உள்ள குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசுங்கள். எந்தக் கட்சியும் செய்யாத சாதனையாக நாம் ஏற்கனவே ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினோம். 12,500 ஊராட்சி சபைகளில் கூட்டத்தைக் கூட்டினோம். மக்களின் பிரச்சனைகளைப் பேசவைத்தோம். அந்தக் கோரிக்கைகளைத்தான் தேர்தல் அறிக்கையிலும் சொன்னோம். பல பிரச்சனைகளை அதிகாரிகளிடம் மனுக்களாகக் கொடுத்துளோம். அதனால்தான் மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தார்கள். அந்த முறையை நீங்களும் பின்பற்றவேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நதிகள், நீர்நிலைகள், ஏரிகள், கண்மாய்கள், வாய்க்கால்கள் போன்றவற்றைப் பராமரிக்க தவறாமல் நடவடிக்கை எடுங்கள். ஏற்கனவே அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலமாக கிராமங்களில் நூலகங்கள் அமைத்தோம். அது முழுமையாக செயல்படவில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு நூலகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெருவிளக்குகள், பொதுக் கழிப்பிடங்கள், வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டுதல் போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். முக்கிய சாலை சந்திப்புகளில், மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். டெண்டர் விடும் பிரச்னையில்தான் அதிகம் கெட்ட பெயர் வரும். அந்த டெண்டர்களில் முழுக்க முழுக்க கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்குள் நடைபெறும் குற்ற நிகழ்வுகளை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். சட்ட விரோத செயல்களுக்கோ, ஊழல்களுக்கோ, முறைகேடுகளுக்கோ இடம் கொடுத்து விடாதீர்கள். வெளிப்படைத் தன்மை மூலம் தி.மு.கவினர் பதவியில் இருக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், ஒன்றியத்திலும், மாவட்ட பஞ்சாயத்திலும் நாம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அப்படி இருந்தால்தான், நீங்கள் ஆற்றுகிற பணிகள் மூலம்தான் 2021ல் நாம் ஆட்சியில் அமர முடியும்.

அதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிநிதிகளின் பிரச்சாரம்தான் முக்கியமாக அமையப்போகிறது. ஒரு அமைதிப் பிரச்சாரமாகவே அது அமையப் போகிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு இப்போதே அந்தப் பணியை தொடங்குங்கள். திமுகழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தாருங்கள். நீங்கள் ஈட்டித்தரும் நல்ல பெயர்தான் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெறும். இன்றைய சூழ்நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சில அதிகாரிகள் நம்மை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள் என்பதை நானும் அறிவேன். அதற்காக ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். இது எனது முக்கியமான வேண்டுகோள். காரணம் சதி செய்து உங்களுக்கு பங்கு தருகிறேன் என்று சொல்லி அவர்களுக்கு வரவேண்டிய கெட்டபெயரை உங்களுக்கு வரவைத்து விடுவார்கள் என்பதை மனதில் பதியவைய்யுங்கள்.

“மக்களிடம் செல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்”- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு, உங்களை நம்பி இருக்கும் மக்களுக்கு, உங்களை நம்பியிருக்கும் தலைமைக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓராண்டில் தி.மு.க ஆட்சிதான். அப்போது மக்களது தேவைகள் அனைத்தையும் நாம் முழுமையாக நிறைவேற்றுவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுபவம் வாய்ந்தவர்கள், இந்தப் பொறுப்பிற்கு வந்திருப்பீர்கள். அதே சமயத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்தவர்களும் இருப்பீர்கள். அவர்களிடம் கேட்டுக்கொள்வது, உங்களுக்கு சம்பந்தப்பட்டுள்ள கழக நிர்வாகிகள். மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து பேசுங்கள். என்னென்ன பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என கேட்டு அவர்களின் வழிகாட்டுதலோடு செயல்படுங்கள். அவர்கள் உங்களுக்கு முறையாக நேர்மையாக பயிற்றுவிப்பார்கள். அவர்கள் பயிற்றுவிக்க வேண்டும் என நான் அவர்களை இந்த மாநாட்டில் கேட்டுக்கொள்கிறேன். நாளை மலர இருக்கும் ஆட்சி உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் பற்றிய நல்ல தகவல்கள் மட்டுமே என் செவிக்கு வரவேண்டும். எனது விருப்பத்தை, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றி தருவீர்களா?

நம்முடைய வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆளும் ஆட்சியினர் இடையூறுகள், நெருக்கடிகள், தொல்லைகள் நிறையக் கொடுப்பார்கள். கவலைப்படவேண்டாம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ‘குறைவாகத்தான் நிதி தருவோம். அதிகமாக தரமாட்டோம்’ என மிரட்டியுள்ளார். அதைப் பற்றி அண்ணன் துரைமுருகன் இங்கே விளக்கமாக எடுத்துச் சொன்னார். அதற்குள் நான் அதிகம் போக விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் 23 நாட்கள்தான் உள்ளன. இடையில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீதிமன்றம் இருக்கிறது.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தலையீடு இல்லை என்றால் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்குமா? தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாகத் தொடர்ந்து சொன்னார்கள். நாம் மேற்கொண்டது நிறுத்துவதற்கான முயற்சி அல்ல. முறையாக நடத்த வேண்டும் என்ற முயற்சிதான். அதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் இந்த அளவுக்கு நாம் வெற்றி பெற்றிருப்போமோ? நீதிமன்றம் தலையிட்டாலும் நம்முடைய தோழர்களின், தைரியம், திராணி, தெம்பு ஆகியவற்றின் காரணத்தால்தான் இந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இந்த மாநாட்டை நடத்துவதற்குக் கூட கல்லூரியில் நடப்பதாக கூறி நேற்று நீதிமன்றம் சென்று தடை கேட்டார்கள். விசாரித்த நீதிபதி எத்தனை பள்ளிக்கூடங்களில் உள்ளாட்சித் தேர்தலே நடைபெறுகிறது. ஏன் உள்ளாட்சி மாநாட்டை நடத்தக்கூடாது எனக் கூறி தடை விதிக்க முடியாது எனக் கூறி அனுமதி தந்துவிட்டார்.

இங்கு, மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக, மாவட்ட வார்டு உறுப்பினர்களாக, ஊராட்சி ஒன்றியத் தலைவர்களாக, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக, ஊராட்சி மன்றத் தலைவர்களாக வந்திருக்கும் உங்களுக்கு எல்லாம் ஒரு அன்பான, கண்டிப்பான வேண்டுகோள். நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று அந்தப் பதவிகளுக்கான பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். உறுதிமொழி எடுத்துகொண்டுதான் அந்தப் பதவியை ஏற்றீர்கள். அதே போல் இந்த மாநாட்டில் ஒரு உறுதி மொழி எடுக்க வேண்டும். அந்த உறுதிமொழியை நம்மை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது ஆணையிட்டு எடுக்க வேண்டும். நம்மை வழிநடத்திய தலைவர் கலைஞர் மீது ஆணையிட்டு எடுக்க வேண்டும். நான் அந்த உறுதிமொழியயைப் படிக்கிறேன்.

"இந்த நாட்டுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை இறுதி வரை போற்றி பாதுகாப்பேன் என்று உறுதியேற்கிறேன். ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அரசியல் சட்ட மாண்புகளுக்கும் ஒழுக்க வழிகளுக்கும் கட்டுப்பாடு, கண்ணியம் காத்து உண்மையாக செயலாற்றுவேன். சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - சம நீதி அடிப்படையில் எனது செயல்பாடுகள் எப்போதும் அமையும். பொதுவாழ்வில் நியாயமும், அணுகுமுறையில் நேர்மையும் -தூய்மையும் கொண்டவர் எனப் பெயர் ஈட்டுவேன். வாக்களித்தவர் - வாக்களிக்காதவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாடுபடுவேன். நான் சார்ந்திருக்கும் இயக்கமும், எனது நாடும் முன்னேற கடமை உணர்வுடன் என்றும் காரியம் ஆற்றுவேன். மக்களிடம் செல்வேன் ! என்றும் மக்களோடு இருப்பேன் ! மக்கள் மனங்களை நிச்சயமாக வெல்வேன்.

உறுதி. உறுதி. உறுதி.” என்றார்.

தி.மு.க தலைவர் உறுதிமொழியைச் சொல்லச் சொல்ல உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எழுந்து நின்று நெஞ்சில் கைவைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories