சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் பகுதியில் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., ''பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய விதமாக 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு, குழந்தைகளின் மனநிலையை அறியாமல் அவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வகையில் தவறாக செயல்படுகிறது.
ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று ஒற்றை பரிணாமத்திற்குள் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றிபெறாது. இந்தி மொழி திணிப்பை திராவிட முன்னேற்ற கழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மத்திய அரசு மீண்டும் இந்தி திணிப்பை எந்த வழியில் மேற்கொண்டாலும் அதை தி.மு.க எதிர்க்கும்'' எனத் தெரிவித்தார்.
பின்னர் இலங்கை பயணம் குறித்து பேசிய கனிமொழி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவது குறித்தும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். அதற்கு அவர்கள் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.