தி.மு.க

“செல்லும் வழியெங்கும் கலைஞரின் முத்திரைகள்...” : மங்காப் புகழ் கொண்ட தலைவா!

ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நிகழ்வு தலைவர் கலைஞரை நினைவுகூர வைத்து விடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் தன் முத்திரையைப் பதித்து வைத்திருக்கிறார் கலைஞர்.

“செல்லும் வழியெங்கும் கலைஞரின் முத்திரைகள்...” : மங்காப் புகழ் கொண்ட தலைவா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணா மேம்பாலம் வழியாக அண்ணா சாலையில் பயணித்து, அண்ணா சிலையை அடைந்தோம். அண்ணா மேம்பாலம் சென்னையில் கட்டப்பட்டபோது, அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பே சென்னையில் கிடையாது. இரண்டு சாலைகள் சந்திக்கிற இடத்தில் ஒரு மேம்பாலம் கட்டி, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது என்பதே கலைஞர் சிந்தனையில் உதித்தது தான். 1971 - 1976 ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

தலைவர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு பேரணியில் கலந்து கொள்ளச் சென்றபோது தான் இந்த நினைவலைகள். அவர் நினைவுடனேயே பயணம் துவங்கியது. நினைவஞ்சலி என்பது மறைந்தவர்களை நினைவு கூர்வதற்கு நடத்தப்படும் நிகழ்வு. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நிகழ்வு தலைவர் கலைஞரை நினைவுகூர வைத்து விடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் தன் முத்திரையைப் பதித்து வைத்திருக்கிறார்.

மவுண்ட் சாலை என்று ஆங்கிலேயர் பெயரில் இருந்த சாலையை, தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணா பெயரால் அழைக்க வைத்தவரும் தலைவர் கலைஞர் தான். அண்ணா சிலை அருகே சென்றோம். காலை ஏழு மணியில் இருந்தே கழகத் தோழர்கள் குழுமத் துவங்கி இருந்தனர். அண்ணா சிலை பீடத்தின் அருகே நின்ற அரியலூர் மாவட்டக் கழகத் தோழர்களோடு இணைந்தோம்.

“செல்லும் வழியெங்கும் கலைஞரின் முத்திரைகள்...” : மங்காப் புகழ் கொண்ட தலைவா!

இடதுபுறம், நிமிர்ந்து பார்க்க வைத்தது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகம். இந்திய இராணுவத்திற்குச் சொந்தமான கோட்டையில் தான் தற்போதைய தலைமைச் செயலகமும், சட்டசபையும் செயல்பட்டு வருகின்றன. இன்னொரு அமைப்பிடம் வாடகைக்கு இடம் எடுக்க வேண்டாம் என்ற எண்ணமும், இட நெருக்கடியைப் போக்கவேண்டும் என்ற எண்ணமும் தலைவர் கலைஞருக்கு ஏற்பட்டதால் தான் உதித்தது 'புதிய தலைமைச் செயலகம்'.

தலைவர் கலைஞர் "புகழ்" அடைந்து விடக்கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான், அதை மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், கலைஞர் கட்டிய அந்த புதிய கட்டிடங்களால் தான் அந்த பல்நோக்கு மருத்துவமனை அமைந்தது. புதிய மருத்துவக் கல்லூரியும் அமைந்தது. தரமில்லாமல் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கட்டிடங்களில் தான் இன்றைக்கு மருத்துவமனை மற்றும் கல்லூரி 'தரமாக' அமைந்துள்ளன.

கழகத் தலைவர் தளபதி அவர்கள் வர, நினைவுப் பேரணி நகர ஆரம்பித்தது. நாங்களும் நடை போட்டோம். மருத்துவக் கல்லூரி கடந்தால், கலைவாணர் அரங்கம். அதுவும் தலைவரைத் தான் நினைவூட்டியது. 1971ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் பழைய சட்டமன்றக் கட்டிடத்தை புனரமைத்து கலைவாணர் பெயர் சூட்டினார். இப்போது புதிய நவீன அரங்கை 'கலைவாணர்' பெயரில் அமைத்தார். வழக்கம்போல், திறப்பு விழாவை மட்டும் ஜெயலலிதா செய்தார்.

“செல்லும் வழியெங்கும் கலைஞரின் முத்திரைகள்...” : மங்காப் புகழ் கொண்ட தலைவா!

அடுத்து இருக்கும் கட்டிடம், அரசு விருந்தினர் மாளிகை. வெளி மாநிலத்தில் இருந்து வரும் அரசு முறை விருந்தினர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டது. இதையும் நவீனமயமாக, புதிய கட்டிடம் கட்டித் தந்தவர் தலைவர் கலைஞர்.

அதைத் தாண்டி நடந்தால், ஒரு பாதை வடக்கு நோக்கி செல்லும். அது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி நோக்கி செல்லும் பாதை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி போல், இந்த நவீன விடுதியை 1996 - 2001ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டிக் கொடுத்தார் கலைஞர்.

அதைத் தாண்டி நடந்தால், தலைக்கு மேல் ‘தடக்... தடக்...’ என்ற சத்தம். அது பறக்கும் ரயில் ஓடும் சத்தம். தலைக்கு மேல் தண்டவாளம். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல், இதனையும் அமைத்தவர் தலைவர் கலைஞர் தான். சென்னையின் போக்குவரத்து எளிதாக, நெருக்கடி இல்லாமல் இயங்க, தொடர்ந்து திட்டம் தீட்டி செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர் தான்.

தொடர்ந்து நடந்து, கடற்கரைச் சாலையை அடைந்தோம். மெரினா கடற்கரையின் நீண்ட சாலை. அதன் பெயர் இப்போது காமராஜர் சாலை. பெயர் மாற்றம் செய்தவர் தலைவர் கலைஞர் தான். எதிரெதிர் அரசியல் முகாமில் இருந்து அரசியல் செய்திருந்தாலும், பெருந்தலைவர் காமராஜர் மீது பெருமதிப்பு கொண்டவர் தலைவர் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பெயர் மாற்றம்.

“செல்லும் வழியெங்கும் கலைஞரின் முத்திரைகள்...” : மங்காப் புகழ் கொண்ட தலைவா!

அடுத்து கண்ணில் படுவது மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவகம். தலைவர் கலைஞரது நெஞ்சம் நிறைந்த நண்பர். பிற்காலத்தில் எதிர் நிலையில் நின்று அரசியல் செய்தாலும், துவக்க காலத்தில் நெருங்கிய நண்பர்கள். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அங்கு அமைந்த எம்.ஜி.ஆர் நினைவகத்தை அழகு படுத்தினார் தலைவர் கலைஞர். அதையும் பின்னர் மாற்றியமைத்தார் ஜெயலலிதா.

அடுத்து அமைந்திருப்பது தான் மிக முக்கிய இடம். திராவிட இயக்கத்தின் திருத்தலம். ஆம், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம். இன்றைய இந்திய அரசியலுக்கு, வழிகாட்டியாக விளங்கும், விளங்கப் போகும் தத்துவம், "திராவிடம்". அதை வடிவமைத்த பிதாமகன் அண்ணாவின் நினைவிடத்தை இந்த இடத்தில் அமைத்தவர் தலைவர் தான். மெரினா கடற்கரையை அழகுபடுத்தியவரும் தலைவர் கலைஞர் தான்.

இப்படி இன்றைய பயணத்தின் துவக்கம் முதல், இறுதி வரை தன் முத்திரையைப் பதித்து வைத்திருக்கிறார் தலைவர் கலைஞர்.

இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர் முத்திரை தான். ஒவ்வொரு நாளும் கடக்கும் ஏதாவதொரு நொடியில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு தமிழக குடிமகன் வாழ்விலும், அவர்கள் அறியாமல் எங்காவது அவர் உறைந்திருக்கிறார்.

மறந்தால் தானே நினைப்பதற்கு, மங்காப் புகழ் கொண்ட தலைவா! #Thankyouகலைஞர்

- சிவசங்கர் எஸ்.எஸ், தி.மு.க மாவட்ட செயலாளர்.

banner

Related Stories

Related Stories