தி.மு.க

முன்னாள் நெல்லை மேயர் உமாமகேஸ்வரி மரணத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் - சட்ட ஒழுங்கு சீர்கேடு என கண்டனம்

நெல்லையில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி இன்று மாலை படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நெல்லையில் இன்று மாலை தி.மு.கவின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்தது யார் என்ன காரணம் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கழக முன்னோடியான மகேஸ்வரியின் மரணத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் அறிக்கையில், ” தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உமா மகேஸ்வரி - நெல்லை முன்னாள் மேயர்
உமா மகேஸ்வரி - நெல்லை முன்னாள் மேயர்

கழகம் பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல - ஆண்களுக்கு நிகராக, சமமாகப் பொறுப்புகளை வழங்கும் இயக்கும் என்பதற்கிணங்க, 1996ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கழக பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற அவர், எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர். 2011-ல் நடைபெற்ற கழக கழக முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் அவர்களால் “பாவேந்தர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டவர். கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணித் தலைவர், மற்றும் மாவட்ட துணை செயலாளராக இருந்த அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories