தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாக அறியப்படுபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், உன்னை அறிந்தால், அண்மையில் வெளியான கோட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்த சுழலில் இவர் மீது இவரது உதவியாளர் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்த சுபாஷ் என்பவர், கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் பார்வதி நாயர், ஆண் நண்பர்களுடன் மது அருந்தியதை தான் பார்த்துவிட்டதால், தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சுபாஷ் சில யூடியூப் சேனல்களுக்கு பார்வதி நாயர் குறித்து பேட்டியளித்து வருகிறார்.
இந்த நிலையில், சுபாஷ் தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும், தன் மீது போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், இந்த பொய்யான புகாரால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் பார்வதி நாயர்.
இதுகுறித்து பார்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022-ம் ஆண்டு என் வீட்டில் ரூ.18 மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலிசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர்தான் சுபாஷ். இவர் தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக இருந்தார். அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில், உதவியாளராக என் வீட்டில் பணிபுரிந்தார்.
புகாரில் அவரது பெயரும் இருப்பது தெரியவந்து புகாரை வாபஸ் வாங்குமாறு என்னை மிரட்டினார். ஆனால் நான் பயப்படவில்லை. இதையடுத்து அவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து என்னை பலமுறை பணம் கேட்டு மிரட்டினார். மேலும் எனக்கு அச்சுறுத்தல்களும் கொடுத்தார்.
அவர் எனது சில போட்டோக்களை வைத்து என்னை மிரட்டினார். ஆனால் நான், மிரட்டலுக்கு பயப்படாமல் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். பிறகு சில வாரங்கள் கழித்து, சுபாஷ் எனக்கு எதிராக ஒரு ஜோடிக்கப்பட்ட புகாரைப் பதிவுசெய்து, ஊடகங்களை என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்பினார். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார்.
மேலும், எனது சொந்த புகைப்படங்களை எனது அனுமதியின்றி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். இதை எதிர்த்து நான் அவர் மீது மற்றொரு புகார் அளித்தேன் அதன்பேரில் சுபாஷ் கைது செய்யப்பட்டார். எனினும் சுபாஷும், அவரது கூட்டாளிகளும் கடந்த 1 வருடமாக என்னை விடாமல் தொந்தரவு செய்து பணம் பறிக்க முயன்றனர்.
சுபாஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கோடி கணக்கில் பணமும் கேட்கப்பட்டது. என் மீது தவறு இல்லை என்பதால் அந்த மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை. மேலும் அவரது சமூகத்தை குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்தியதாக என்மீது போலியான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் நோட்டீஸ் அனுப்பும் வரையில், அவரது சமூகம் குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது.
இதையடுத்தே என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தற்போது சுபாஷ் பல யூடியூப் சேனல்களில், எனது நற்பெயரை கெடுத்து, என்னை வற்புறுத்துவதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். மேலும், அவர், தன்னைப் பெண்கள் மீது அக்கறை கொண்டவராக சித்தரித்துக் பொதுமக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.
சுபாஷின் இந்த செயலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நேரத்தில், வாழ்க்கை, பாதுகாப்பு, நற்பெயர், அவதூறாகப் பேச்சுகளால் பெரும் ஆபத்தில் உள்ளேன். இச்சூழ்நிலையில், என் பக்கம் இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றி. நீதி வெல்லும் என்று நம்புகிறேன” என்று குறிப்பிட்டுள்ளார்.