தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் தான் ரிச்சர்டு M நாதன். மறைந்த பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக இருந்த இவர், 2010-ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த 'கோ' படத்திலும் இவர் கேமராமேனாக பணியாற்றினார்.
பின்னர் வணக்கம் சென்னை, திரிஷா இல்லனா நயன்தாரா, அப்பா, கோமாளி, மாநாடு, கட்டா குஸ்தி என பல ஹிட் படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போதும் சில படங்களில் பணியாற்றி வரும் இவர், நீண்ட நாட்களாக கார் ஒன்று வாங்க ஆவலுடன் இருந்துள்ளார்.
அதன்படி கடந்த 15 மாதங்களாக காத்திருந்து மஹிந்திரா Xuv 700 ரக காரை கடந்த ஜூன் 1-ம் தேதி வாங்கியுள்ளார். ஆனால் வாங்கி 4 நாட்கள் கூட ஆகாத நிலையில், சாலையில் பழுதாகி நின்றதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானர். தொடர்ந்து சர்வீஸ் சென்டருக்கு கால் செய்து அழைத்த போதும், அதில் யாரும் வராமல் இருந்துள்ளனர்.
இதனால் எரிச்சலடைந்த அவர், தனக்கு இந்த கார் வேண்டாம் என்றும், தனது பணத்தை திருப்பி தருமாறும் தனது ட்விட்டர் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "15 மாதக் காத்திருப்புக்குப் பிறகு ஜூன் 1, 2023 அன்று புதிய xuv700ஐப் பெற்றேன். கார் ஜூன் 2, 2023 அன்று பதிவு செய்யப்பட்டது. இன்று ஜூன் 5, 2023 அன்று எனது காரை வெளியே எடுத்தேன்.
என்னிடம் இன்னும் நம்பர் பிளேட் கூட இல்லை. ஆனால் மதியம் 2:50 மணிக்கு லஸ் கார்னர் சிக்னலில் கார் திடீரென பழுது காரணமாக நின்றது. நீண்ட நேரமாக மஹிந்திரா உதவியை அழைக்க முயற்சித்தேன். ஆனால் அவர்கள் யாரும் கார் நின்ற இடத்திற்கு உதவ வர விரும்பவில்லை. எனக்கு இந்த கார் வேண்டாம், முழு பணத்தையும் திரும்பப் பெற விரும்புகிறேன்.
இந்த கார் முழுவதுமாக ஷட் டவுன் ஆகிவிட்டால் 3 நாட்கள் ஆகும். அது வேலை செய்யும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது மஹிந்திராவின் பரிதாபகரமான மற்றும் கேவலமான சேவையாக இருந்தால், நீண்ட காலத்திற்கு என்ன நடக்கப் போகிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து பதிவிட்ட அவர், "சென்னை லஸ் கார்னர் சிக்னலில் 3 நாட்களே ஆன புதிய கார் நின்றுவிட்டது. மதியம் 2.50 மணி முதல் காத்திருந்தும், உதவியாளர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இந்த காருக்காக 15 மாதங்கள் காத்திருந்தேன்! இது போன்ற சம்பவத்திற்கு பிறகு எனக்கு இந்த கார் வேண்டாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா மீது திரைத்துறையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் புகார் கூறியிருப்பது பலரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. மேலும் பலரும் கேமராமேன் ரிச்சர்டுக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.