
தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே கொண்டாட்டமாக இருக்கிறது. தொடர்ச்சியாகத் திரையில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியில் நல்லப் படம் என்ற பெயரையும் பெற்று வருகிறது. நடிகர் கார்த்தியின் 'சர்தார்', பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் நவம்பர் 25ம் தேதி ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

ஏஜண்ட் கண்ணாயிரம்
'குலுகுல' திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுக்காத நிலையில் நடிகர் சந்தானத்தின் அடுத்த படமாக ஏஜண்ட் கண்ணாயிரம் நவ 25ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்புதான் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

காரி
இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் 'உடன்பிறப்பே' படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. பிறகு ஒரு வருடம் கழித்து இந்த வாரம் இவர் நடிப்பில் 'காரி' படம் வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். மேலும் பார்வதி அருண், மலையாள நடிகை அம்மு அபிராமி, பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பட்டத்து அரசன்
இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பட்டத்து அரசன்'. கபடி விளையாட்டை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் காரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். அதேபோல், தான் தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ-யின் பவுடர், இந்த படமான 'ஓநாய்', 'ஓட்டம்', 'AutoIsMyLife' போன்ற படங்களும் திரையில் இந்த வாரம் நவ.25ம் தேதி வெளியாகிறது.








