சினிமா

'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும் 'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!

காலா படத்தில் வரும் 'கண்ணம்மா' பாடல் பலரின் பழைய காதலை அசைபோட வைக்கிறது.

'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும்  'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காலா படத்தில் வரும் பழைய காதலை நினைவுகூரும் காட்சிகள், பலருக்கு ஒளித்து வைத்திருந்த நினைவுகள்.

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கண்ணம்மா இருக்கிறார். ஒரு கண்ணப்பன் இருக்கிறார்.

மீட்டாத வீணை

தருகின்ற ராகம்

கேட்காது பூங்காந்தளே!

எல்லாருடைய வாழ்க்கையில் இருக்கும் கண்ணம்மாக்களும் கண்ணப்பன்களும் மீட்டாத வீணை தருகின்ற ராகங்கள்தான். கேட்காத ராகங்களுக்குதான் மனம் அலைபாயும். ராகம் கேட்டுவிட்டால், நமக்கு பிடிக்குமா என தெரியாது.

காலா, காதலித்து மணம் முடிக்கும் நிலை வரை வந்து காதலியை பிரிகிறான். பிறகு வேறொரு பெண். திருமணம். அதில் ஒரு ஆத்மார்த்த காதல். முற்றிலும் அரசியல் நிறைந்த ஒரு வாழ்க்கை காலப்போக்கில் காலாவுக்கு நேர்கிறது. பல வருடங்கள் கழித்து, காலாவின் காதலி சரீனா வருகிறாள்.

ரஞ்சித் அந்த காட்சியை அவ்வளவு ரசனையாக எடுத்திருப்பார். பல படிமங்கள் காட்சியில் கிடக்கும். ஒரு நீள சோபா. ஒரு முனையில் காலா அமர்ந்திருப்பான். மறுமுனையில் சரீனா அமர்ந்திருப்பாள். இடையில் உள்ள வெளியில் நிகழ்காலம் அமர்ந்திருக்கும்.

'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும்  'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!

காலா, சரீனாவை பார்க்கும் போதெல்லாம் பழைய ராகத்தை மீட்ட முயலுவான். சரீனாவுக்கும் பழைய காலாவாகவே அவன் தெரிவான். இடையே இருக்கும் நிகழ்காலம் இருவரையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கும்.

சரீனா மற்றும் காலாவின் பிரிவு ஒரு முறையான பிரிவாகவே இருந்திருக்காது. மிகவும் அவசரகதியில் காணாமல் போக வேண்டிய பிரிவாக நேர்ந்திருக்கும். காதலை இழப்பதைவிட, முறைப்படி அதை இழக்காமல் இருப்பது அதிக காயத்தை கொடுக்கும். அந்த முடிவுறாதன்மை தொடர்கதையாக முயலும் சிறுகதையின் யத்தனத்தையே வாழ்க்கை முழுக்க கொடுத்து அழுத்தும்.

காலாவும் சரீனாவும் சந்திக்கிறார்கள். சிறிய அளவில் பழைய ஞாபகத்தை அசை போட்டு சிரித்து கொள்கிறார்கள். 'திரும்ப உன்னை பார்க்க வச்சு இந்த வாழ்க்கை எப்படி வேடிக்கை பார்க்குது பார்!' என்கிறாள் சரீனா. 'உன் பக்கத்துலயே என் மனைவியும் தெரியுறா!' என்கிறான் காலா. 'நீ நினைக்கிற சரீனா இப்போ இல்ல... உன் ஞாபகத்துல இருக்கற சரீனாவையே நினைச்சுக்கோ!' என்கிறாள். முன்னாள் காதலியான அவளை பார்க்க இந்நாள் காதலியான மனைவிதான் அனுப்பி வைத்தாள் என்கிறான் காலா. இருவரும் புன்னைகைத்து முறைப்படி பிரிந்து செல்கிறார்கள்.

'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும்  'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!

இருவரும் சேராமல் இருப்பதற்கு காலா மனைவியுடன் இருப்பதுதான் காரணமா என்றால் அது மட்டுமே காரணம் இல்லை. காலாவை பிரியும்போது இருந்த சரீனா இப்போது இல்லை. அதற்கு அவள் மணம் முடித்து குழந்தையுடன் இருக்கிறாள் என்பது மட்டுமே காரணமும் இல்லை. காலாவின் மனைவியும் சரீனாவின் குழந்தையும் சமூகம் கொடுத்திருக்கும் காரணங்கள். அகரீதியாகவும் அவர்கள் இருவருக்கானவர்களாகவும் இல்லை என்பதுதான் முக்கியமான காரணம்.

அடுத்த காட்சியில் முரண் ஏற்பட்டு மீண்டும் சரீனாவை சந்திக்க அவள் வீட்டுக்கு செல்கிறான் காலா. இப்போதும் ஒரு சோபா. அதன் ஒருமுனையில் காலா. மறுமுனையில் சரீனா. நிச்சயமாக நிகழ்காலம் இடையில் இருக்கிறது. அது என்ன என்பது தெளிவாக இரண்டு பேருக்கும் தெரிகிறது. இருவருமே சிந்தனையிலும் நடைமுறையிலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கிறார்கள். சந்திப்பு சண்டையில் முடிகிறது.

கண்ணம்மாக்களும் கண்ணப்பன்களும் நிலவை போல. தூர இருக்கும்வரைதான் அழகு. நெருங்குகையில் உண்மை தெரிந்துவிடும். அவை பெரும்பாலும் கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் கண்ணம்மாக்களை பாரதிகள் கவிதை பாடுகின்றனர்.மனங்களுக்குள் ஒரு ஞாபகச்சின்னமாக ப்ரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்கிறோம்.

'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும்  'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!

கண்ணம்மாக்களுக்கும் கண்ணப்பன்களுக்கும் இடையில் அவர்களை தங்கள் வாழ்க்கைகளில் அனுமதிக்கும் செல்விகளும் செல்வன்களும் இருக்கின்றனர் என்பதுதான் யதார்த்தம் படைக்கும் காவிய அழகு. மோனலிசாவை மனம் விரும்பும் வகையில் வரைய அனுமதிக்கும் தூரிகை போல்!

காயங்கள் ஆற்றும்

தலைகோதி தேற்றும்

காலங்கள் கைகூடுதே!

என கண்ணம்மாக்களையும் கண்ணப்பன்களையும் நினைத்து, விரும்பி பாடினாலும் அவை நேராமல் நாம் நொந்து போகையில், நம் காயங்களை ஆற்றுவதும் தலைகோதி தேற்றுவதும் செல்விகளும் செல்வன்களும்தான்.

எல்லாவற்றையும் நமக்கு பின்னால் நின்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் செல்வியும் இருக்கிறாள். இடையில் தூரமாகி போன நிகழ்காலமும் இருக்கிறது. அதிகபட்சம் நம்மால் செய்ய முடிவதென்னவென்றால், நாம் வரையும் கண்ணம்மா ஓவியத்துக்கு இனி அவள் அணிந்திருக்கும் காதணியையும் உடையையும் சேர்த்து வரைவது மட்டுமே!

முடிவாக நாம் அனைவரும் யாருடைய வாழ்விலோ, கண்ணம்மாவாகவும் கண்ணப்பனாகவும் வரையப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்!

banner

Related Stories

Related Stories