சினிமா

“ஒரு பெமினிஸ்ட்டை, ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்?”: கதைக்களம் மூலம் காதல் சொல்லும் சேதி தெரியுமா?

ஒரு பெமினிஸ்ட்டை ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்? 'அவள் அப்படித்தான்’ படத்தின் கதைக்களம் அதுதான்.

“ஒரு பெமினிஸ்ட்டை, ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்?”: கதைக்களம் மூலம் காதல் சொல்லும் சேதி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு பெமினிஸ்ட்டை ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்? 'அவள் அப்படித்தான்’ படத்தின் கதைக்களம் அதுதான்.

மஞ்சு ஒரு முள்செடியாக இருக்கிறாள். அவள் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தியாகு ஒரு பச்சையான ஆணாதிக்கவாதி. பெண்பித்து பிடித்தவன். மஞ்சுவை தரக்குறைவாகவே பேசி திரிபவன். உள்ளுக்குள் மஞ்சுவை புணர விரும்பவன். மறுபக்கத்தில் ஆவணப்பட இயக்குநர் அருண்! பச்சை பெண்ணியவாதி. பட வேலைகளுக்கு உதவும் பொருட்டு தியாகுவால் மஞ்சு அருணுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

ஆணாதிக்கவாதிகளை சுலபமாக கையாளும் பெண்ணியவாதி பெண், ஒரு பெண்ணியவாதி ஆணை எப்படி அணுகுகிறாள்? ஆணாதிக்கத்தை மறுக்கும் பெண்ணியவாதி ஆண், ஒரு பெண்ணியவாதி பெண்ணை எப்படி அணுகுகிறான்?

மிக சுவாரஸ்யமான முடிச்சு. விளையாடி இருப்பார் ருத்ரய்யா.

அறிமுகத்திலிருந்தே அருணை மஞ்சு அவமதித்து கொண்டிருப்பாள். ஆண்களால் சீரழிக்கப்பட்ட அவளின் கடந்தகாலத்தை தியாகு மூலம் தெரிந்து கொள்ளும் அருண், அவளின் அந்த போக்கை பெரிதாய் பொருட்படுத்தி கொள்ள மாட்டான். சொல்லப்போனால், மற்றவர்களையும் மஞ்சு அவமதிக்கும்போது, அருண் அவளுக்காக defend செய்வான். அதை மஞ்சுவும் ரசிப்பாள். ஆனால் காட்டி கொள்ள மாட்டாள்.

ஒருமுறை அருணை பெரிய அளவில் அவமதித்துவிட்ட குற்றவுணர்ச்சியில், அவனிடம் பேச வேண்டும் என தொலைபேசியில் நள்ளிரவு வேளையில் அழைப்பாள். அவனும் செல்வான். அப்போதுதான் அவள் தன் கதையை முழுமையாக சொல்வாள். அத்தனை வலிக்கு பின்னும் தனக்கு என நேசிக்கும் ஒரு ஜீவன் இல்லையே என்ற கழிவிரக்கமும் 'அருணும் ஒரு ஆண்தானே' என்ற பதைபதைப்பும் ஒன்று சேர்ந்து மஞ்சு hysterical ஆகி, அழுது அரற்றுவாள். அருணை கத்தி எடுத்து கொல்லவே வருவாள். ஆனால் அவனுக்கு அவளின் ஆற்றாமை புரியும். கத்தியை பிடுங்கி எறிவான். கீழே சரியும் அவள், தாங்கி பிடிக்கும் அருணை முத்தமிட்டுவிட்டு மயங்குவாள்.

“ஒரு பெமினிஸ்ட்டை, ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்?”: கதைக்களம் மூலம் காதல் சொல்லும் சேதி தெரியுமா?

அருணுக்கு மஞ்சுவை பிடிக்கிறது. அவளின் அடாவடியை ரசிக்கிறான். அதே நேரம் மஞ்சுவிடம் காதலை வெளிப்படுத்த தயங்குகிறான். எல்லாவற்றிலும் அவமதிக்கும் அவள் இதிலும் அவமதித்துவிட்டால்? அவள் மீது உருவாகி இருக்கும் நேசத்தை சொல்வற்கு கூட அருணுக்கு ஒரு comfort space-ஐ அவள் உருவாக்கவில்லை. அருணும் அதை வலிந்து அடைய விரும்பவில்லை. ஏனெனில் அது மஞ்சுவின் சுதந்திரத்துக்குள் தலையிட்டதாகி விடுமே?

மஞ்சுவும் அருணை விரும்புகிறாள். ஆனால் தன் விருப்பத்தை சொன்ன பிறகு, அவனும் வழக்கமான ஆணாக தன்னை வெளிப்படுத்தி, மஞ்சு கொண்டிருக்கும் மதிப்பை சரித்து விடுவானோ என பயம். இருவரின் இந்த பயங்களுக்குள் வழக்கமாக காதலர்களுக்குள் ஏற்படும் அகங்கார, அடையாள ஆட்டங்களும் சேர்ந்து கொள்கின்றன.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க மாட்டாமல் அருண், மஞ்சுவை ஒரு ரோட்டில் வைத்து கேட்டே விடுகிறான். 'ஏன் அவள் இப்படி முரண்பட்டு நடக்கிறாள், அடுத்தவர் வேறு மாதிரி பேசுகிறார்கள்' என்றெல்லாம் அக்கறையுடன் சொல்லும் அருணுக்கு, முகத்தில் அறைவது போல் விட்டேத்தியான பதில்களை மஞ்சு கொடுக்கிறாள்.

அருணை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவன் அப்பா பணிக்கிறார். வேறு வழியின்றி ஊருக்கு கிளம்பும் அருண், அதற்கு முன் மஞ்சுவின் தோழியை சந்திக்கிறான். ஊருக்கு போவதாக சொல்கிறான். 'மஞ்சுவுக்கு தெரியுமா' என தோழி கேட்கிறாள்.

அருண்: சொல்ல விரும்பல..

தோழி: ஏன்..

அருண்: என்கிட்ட மிச்சம் இருக்குற தன்மானம் இடம் கொடுக்க மாட்டேங்குதுங்க. அவங்க கூட இத்தனை நாளா பழகுறேன், அவங்கள இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியல.

சிரித்தபடி தோழி: அஞ்சு வருஷம் நானும் பழகுறேன்.. என்னாலேயே புரிஞ்சுக்க முடியல...

அருண்: புரிஞ்சுக்க முடியாத புதிரா இருக்கறது அவங்களுக்கு பெருமையா இருக்கலாம். ஆனா, எனக்கு பொறுமை இல்லீங்க.

தோழி: அவ நல்லவங்க.

அருண்: சரி, அதை நான் ஒத்துக்குறேன்...

தோழி: அவ... உங்கள.. ம்... (காதலிப்பதாக சொல்ல முற்படுவது)

அருண்: அதை நான் நம்ப தயாரா இல்ல... ஆனா சத்தியமா சொல்றேன், அவங்கள நான் விரும்புறேன்...

தோழி: அத, அவகிட்ட வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே!

(உதடு பிதுக்கியபடி) அருண்: பிரயோஜனம் இல்லீங்க. அவங்களுக்கு குடும்பம், உறவு, கல்யாணம்.. இதுல எல்லாம் நம்பிக்கை இருக்கறதாவே தெரியல. கட்டாயத்துனாலேயோ கோமாளித்தனமாவோ அவங்க என் அன்பை ஏத்துக்கணும்னு நான் நெனைக்கல. ஆனா, மஞ்சு மேல எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்ல. I still like her.

என்று கூறி கிளம்பி செல்கிறான்.

இது எதுவும் தெரியாமல் வரும் மஞ்சு அதே தோழியிடம் பேசுகிறாள்.

“ஒரு பெமினிஸ்ட்டை, ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்?”: கதைக்களம் மூலம் காதல் சொல்லும் சேதி தெரியுமா?

மஞ்சு: விளக்கம் கேட்க வந்த அருணை எதாலயோ அடிச்சா மாதிரி பதில் சொல்லி அனுப்பிட்டேன். எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுட்டு, இவ்ளோ நாளும் நான் சொன்ன விரும்புனத சொல்ல போறேன் என்கிறாள். அசிரத்தையாய் அமர்ந்திருக்கும் தோழியை 'ஏன் பதிலே பேச மாட்டேங்கிற' என மஞ்சு கேட்க,

தோழி: என்னத்தடி பேசுறது.. வயிறு எரியுது... நல்ல மனுஷனோட ப்ரண்ட்ஷிப் உனக்கு கிடைச்சதேன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா நீயோ, ஒண்ணுமே புரிஞ்சிக்காத ஜடமா, அருணை எவ்ளோ புண்படுத்தி இருக்கே தெரியுமா? அருண் உன் மேல எவ்ளோ ஆசை வச்சிருந்தாருன்னு அவர் நடந்துக்கிட்ட விதத்துல தெரியல? உனக்கு ஒரு புது வாழ்க்கை கொடுக்கணும்னு, அவரு துடிச்ச துடிப்ப நீ புரிஞ்சுக்கல!

என சொல்லி அருண் ஊரைவிட்டு போய்விட்டதாகவும் சொல்லி முடிக்கிறாள்.

சில நாட்களுக்கு பின் அருண் வருகிறான். கல்யாணம் முடிந்துவிட்டது. அருண், அவன் மனைவி, மஞ்சு, தியாகு அனைவரும் காரில் வருகிறார்கள். அருண் மனைவியிடம் மஞ்சு, 'அருண் எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரு கேள்வி கேட்பாரே, நான் அதை உங்கக்கிட்ட கேக்குறேன்' என சொல்லி நக்கலாக "women's liberation பத்தி என்ன நினைக்கறீங்க?" என கேட்கிறாள். கொஞ்ச நேரத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி கொள்கிறாள்.

தோழியிடம் சொன்னதை நேராக மஞ்சுவிடமே அருண் சொல்லி இருக்கலாம். சொல்லியிருக்க முடியுமா? அருண் பயந்ததை போல், அதையும் மஞ்சு எள்ளி நகையாடியிருந்தால்?

மஞ்சு முன்னமே தன் காதலை அருணிடம் சொல்லி இருந்திருக்கலாம். அவனை அவமதிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்து, ஒருவேளை அருணும் வழக்கமான ஆணாக வெளிப்பட்டிருந்தால்?

மஞ்சுவின் வாழ்க்கையில் கடந்து சென்ற ஆண்கள், அவள் விரும்பும் ஆணை இழக்க செய்யும் அளவுக்கு அவளை முள்ளாக்கி வைத்திருக்கின்றனர். பெண்களின் துயருக்கு இரங்கி இரங்கி, மஞ்சு தன்னை நேசிக்கிறாள் என புரிந்தும் அவளின் நிராகரிப்பு தன்னை காயப்படுத்தி விடும் என நினைக்கும் அளவுக்கு அருண் மெல்மனம் கொண்டிருக்கிறான்.

இதில் யார் செய்தது நியாயம்? தெரியவில்லை.

அதனாலேயே, அவள் அப்படித்தான்!

அவன்: ஆமா.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. அது என்ன மத்தவங்களுக்கு முன்னாடி எல்லாம் பூனை மாதிரி பம்முற.. என்ன பார்த்தா மட்டும் எகிறு எகிறுன்னு எகிறுற.. ஏன்?

அவள்: உன்னை பார்த்தா பயம் வரலை?

அவன்: பயப்பட மாட்டீங்க?

அவள்: நான் ஏன் பயப்படணும்?

அவன்: அடிச்சு மூஞ்சிய பேத்துடுவேன் என்ன?

என பாசாங்காக கையை ஓங்குவது. அவள் கொஞ்சம் கூட பதறவில்லை. அவனை கட்டியணைக்கிறாள். அணைத்ததும் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்படும்.

அது மிக மெல்லிய அதிர்ச்சியை உள்ளடக்கிய பெருமூச்சு. அதில் ஆச்சரியமும் கலந்து இருக்கும்.

அந்த காட்சியும் உரையாடலுமே அழகு என்றாலும், அவள் அணைத்ததும் அவனை அறியாமல் வெளிப்படும் அந்த 'ஹ' என்னும் பெருமூச்சு துண்டுதான் என்னை ஈர்த்தது.

அந்த பெருமூச்சுக்கு பின் எத்தனை கால தனிமை, ஏக்கம், கழிவிரக்கம் இருந்திருக்கும்?

அந்த எதிர்பார்ப்பை சிறந்த நடிப்பாக கடந்துவிடலாம். விஜய் சேதுபதி கூட இவ்வளவு யோசித்திருக்க மாட்டார் என நீங்கள் கேலி பின்னூட்டம் கூட இடலாம். ஆனால் கலையின் அழகே அதுதானே. கலைந்து போகும் மேகக்கூட்டம் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப கொடுக்கும் உருவம் போல, ஒவ்வொரு படைப்பும் உங்களுக்குள் இருக்கும் ஓர் அடைப்பை திறக்கும்.

அந்த ரவுடியின் வாழ்க்கையில் இழந்த பல சுவாரஸ்ய நிமிடங்களை திரும்ப எடுத்துவிடும் ஒரு நம்பிக்கையை அந்த 'ஹ' வெளிப்படுத்தியிருக்கும். இந்த மாதிரி நம்பிக்கைகளின் சோகமே என்னவெனில், அவற்றின் வாலாக ஒரு அவநம்பிக்கை தொற்றி அலையும். உடைந்துவிடுமோ என தோன்றும் ஒரு தருணம் வாய்க்கும் பாருங்கள், அந்த தருணத்தில் அவநம்பிக்கை பரபரவென மேலேறி குதித்து, உடைத்தே விடும்.

அந்த அவநம்பிக்கை மொத்த வாழ்க்கை கொண்ட அவநம்பிக்கைகளின் நீட்சி. இதுவுமே எதிர்முடிவாக மட்டுமே இருக்க முடியும் என அபரிமிதமாக நம்பிக்கை கொள்ளும் அவநம்பிக்கை.

“ஒரு பெமினிஸ்ட்டை, ஒரு பெமினிஸ்ட் காதலித்தால் என்ன ஆகும்?”: கதைக்களம் மூலம் காதல் சொல்லும் சேதி தெரியுமா?

அந்த அற்புதமான தருணத்தை தொடர்ந்து எதிர்பாராத ஒரு சண்டை காட்சி நடக்கும். அவனின் ரவுடித்தனம் வெளிப்படும். அதை அவளும் அவள் பெற்றோரும் பார்த்துவிடுவார்கள். அவர்கள் தன்னை பார்ப்பதை கண்டதும், அவன் நெக்குறுகி, கண் கலங்கி, அவளை பார்த்து லேசாக தலையாட்டுவான். லேசாகத்தான். 'இவ்ளோதான் நான். இதெல்லாம் நமக்கு செட் ஆகாது' என பொருள் பேசும் இடம். அப்படியே திரும்பி அந்த அற்புத தருணம் தந்த அவளிடம் இருந்து விலகி, அவன் கட்டி வைத்திருக்கும் அவநம்பிக்கை கோட்டையை நோக்கி நடப்பான்.

நம்பிக்கை என்னும் காந்தபுலம் தாண்டிய எல்லைக்கும் அவநம்பிக்கை என்னும் பெரும் காந்தத்துக்கும் இடையேயான போராட்டம்தான் காதல் என்னும் இந்த விந்தையான உறவு.

அந்த விந்தை பற்றிய புரிதல்தான் படத்தின் கடைசியில், காருக்குள் அமர்ந்திருக்கும் அவளை பெட்ரோல் பங்க்கில் பணி புரியும் அவன் பார்த்ததும் இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகைகளின் அர்த்தம்.

banner

Related Stories

Related Stories