சினிமா

‘3% இருக்குப் பார்த்துக்கோங்கோ..’ : பரபரப்பாக பேசப்படும் ‘குத்துக்கு பத்து’ - எப்படி இருக்கிறது?

Hyperlink திரைக்கதை வடிவத்தைக் கொண்டிருக்கும் கதை குத்துக்குப் பத்து. மொத்தமாக 7 எபிசோடுகள். ஒவ்வொன்றும் சம்பந்தமில்லாத கதையாக விரிந்து முடிவை நோக்கி செல்கையில் ஒன்றிணைகிறது.

‘3% இருக்குப் பார்த்துக்கோங்கோ..’ : பரபரப்பாக பேசப்படும் ‘குத்துக்கு பத்து’ - எப்படி இருக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சமீபத்தில் வெளியாகி, பரபரப்பாக சமூகதளங்களில் பேசப்பட்டு வரும் இணையத் தொடர், ‘குத்துக்குப் பத்து’. K10 என சுருக்கமாக அழைக்கப்படும் இத்தொடரை இயக்கியிருப்பது Temple Monkeys விஜய் வரதராஜ்.

பொதுவாகவே விஜய் வரதராஜின் ஆக்கங்கள் மீது பலதரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. அதிகம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார், கொச்சையான வசனங்கள் பேசுகிறார், பிராமண சமூகத்தின் மீது வன்மத்தைக் கொட்டுகிறார், ஆண்கள் பாத்திரங்களே அதிகம் இருக்கின்றன, அரசியலற்ற லிபரல் ஆக்கங்களைதான் தருகிறார் என்பன ஒரு பக்கத்துப் பார்வைகள். இன்றைய தலைமுறைக்கு உவப்பான வடிவத்தில் ஆக்கங்கள் தருகிறார், satire என்கிற கதையாடல் பாணியை வெற்றிகரமாகக் கைகொண்டிருக்கிறார், முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை இன்றைய இளைஞர்களிடம் பேசுபொருள் ஆக்குகிறார் என மறுபுறமும் விஜய் வரதராஜின் ஆக்கங்களைப் பற்றி பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட எல்லா பார்வைகளும் பொருந்தும் வகையாகதான் ‘குத்துக்கு பத்து’ தொடரும் வந்திருக்கிறது. எனவே சமூகவலைதள விவாதங்கள் நேர்வதில் ஆச்சரியமில்லை.

படம் எப்படி இருக்கிறது?

இதுதான் கதை என சுலபத்தில் சொல்லிவிட முடியாதக் கதை. Hyperlink திரைக்கதை வடிவத்தைக் கொண்டிருக்கும் கதை. மொத்தமாக 7 எபிசோடுகள். ஒவ்வொன்றும் சம்பந்தமில்லாத கதையாக விரிந்து முடிவை நோக்கி செல்கையில் ஒன்றிணைகிறது.

ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. பெண்ணின் அண்ணனுக்கும் கடிதம் கொடுத்தவனின் நண்பர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இன்னொருவன் காதலி அன்பளிப்பாகக் கொடுத்த செல்பேசியில் காதலியுடன் பேசுகிறான். அப்போது ஒருவன் எதிர்பட்டு தடுமாறி செல்பேசி கீழே விழுந்து உடைகிறது. எதிர்பட்டவனை எதிர்க்கப் போக, அவன் ஒரு குழுவைக் கூட்டி வருகிறான். குழுவின் பெயர் ரிசர்வாயர் டாக்ஸ். செல்பேசிக்காரனுக்கு ஆதரவாக ஒருவன் வர, அவனுடன் ரிசர்வாயர் டாக்ஸ் குழு சண்டை போட, போலீஸ் ரிசர்வாயர் டாக்ஸ்ஸைத் தூக்கிச் செல்கிறது.

இன்னொரு பக்கத்தில் புரோபசர் ரங்கபாஷ்யம் அறிமுகமாகிறான். அவனது இரு சக்கர வாகனம் ரிப்பேர் ஆகிறது. ஒரு மெக்கானிக் ஷெட்டில் வண்டியை விடுகிறான். அங்கிருக்கும் மெக்கானிக் ஃபகீர், ஓர் இஸ்லாமியர். ஆசை ஆசையாய் ஒரு புல்லட் பைக்கை வைத்திருக்கிறான் ஃபகீர். வேண்டுமென்றே ஃபகீரை வம்பிழுக்கிறான் ரங்கபாஷ்யம். ஒரு கட்டத்தில் கடுப்பாகி ஃபகீர் ரங்கபாஷ்யத்தை அடித்து விடுகிறான். ரங்கபாஷ்யம் அவனது சகோதரன் சாமானிடம் புகார் கொடுக்க, சாமான் தன் நண்பர்களுடன் சென்று ஃபகீரை அடிக்கிறான்.

தகவலைக் கேள்விப்படும் ஃபகீரின் நண்பனான சரவணன், சாமான் & கோவை விரட்டிச் செல்ல, அங்கு எம்.எல்.ஏ மழுவாழ் நெடியோனின் மகனுடன் பிரச்சினை ஆகிறது. அந்த மகன் சென்று எம்.எல்.ஏ-விடம் புகார் கொடுக்க, எம்எல்ஏவின் ஆட்கள் சரவணனை போட்டு அடிக்கின்றனர். மருத்துவமனையில் சரவணன் சேர்க்கப்படுகிறான். சரவணனின் சகோதரனான முருகேசன் எம்எல்ஏவை எதிர்க்கும் கட்டத்துக்குச் செல்கிறான். அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஃபகீருக்கு என்ன ஆனது, முருகேசன் என்ன ஆனான் ஆகியவை ஒரு முக்கியமான திருப்பத்தை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது.

சினிமாவைப் பார்த்து பழகிய ரசிகனுக்கு அது ஓர் அற்புதம். அவன் கண்டிராத மாய உலகம். அவன் வாழ்க்கையில் காணும் தோல்விகளிலிருந்து தப்பிக்கக் கூடிய கற்பனையான வழி. சினிமா கொண்டிருந்த இத்தகைய அர்த்தத்தை எதிர்க்கும் போக்குகள் உருவாகின. சாமானியனையும் அவனது துயரத்தையும் அவனது வாழ்க்கைக் கொண்டிருக்கும் நிச்சயமிற்ற தன்மையையும் அச்சு அசலாக படைப்பாக்கும் சினிமா மொழி அறிமுகமாகியது. அது பிரமாண்டமாக இருந்ததில்லை. சிறியதாக இருந்தபோதிலும் அதில் நீங்கள் இருந்தீர்கள். ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும் உங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது.

மேற்குறிப்பிட்ட இரு வகைமைகளை வெவ்வேறு விகிதங்களில் கலந்தும் பிரித்தும் உருவாக்கியே உலகின் வெகுஜன சினிமா, யதார்த்த சினிமா, மிகை யதார்த்த சினிமா எனப் பல போக்குகள் உருவாகின்றன. அதில் ஒரு வகையைத்தான் விஜய் வரதராஜ் உருவாக்கியிருக்கிறார்.

நம்மைச் சூழ்ந்திருக்கும் அரசியல் சூழல், சமூகச் சூழல், சிந்தனை முறை, கருத்தியல் தாக்கங்கள் என எல்லாவற்றையும் கொண்டு திரைமொழியை அணுகுகிறார் விஜய் வரதராஜ். அதனால்தான் கெட்ட வார்த்தைகள் பிரச்சினையாகாத பரப்பாக விஜய் வரதராஜின் கதைப் பரப்பு அமைகிறது. ஓர் இஸ்லாமியரை அடிக்கக் கிளம்பும் பார்ப்பனக் கதாபாத்திரம் தன் குழுவிடம் அம்பேத்கரின் ‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’ கோஷத்தைப் பேச வைக்கிறது. தங்கைக்குக் காதல் கடிதம் கொடுத்த இளைஞனை அடிக்க வரும் அண்ணன் ஒரு ‘பனியா’ இளைஞனாக காண்பிக்க முடிகிறது. அவனை எதிர்ப்பவன், ‘உனக்குல்லாம் ஏண்டா நீட்டு’ எனக் கேட்க முடிகிறது. வண்டியை ரிப்பேர் செய்யும் இளைஞன் இஸ்லாமியன் எனத் தெரிந்ததும் பார்ப்பனப் பாத்திரமான ரங்கபாஷ்யம் ‘பாம் வச்சிருக்கியாடா’ எனக் கேட்டு நக்கல் அடிக்க முடிகிறது. ’இலுமினாட்டியா இருந்தாலும் இங்கயும் நம்மதான் லீடரு.. 3% இருக்குப் பார்த்துக்கோங்கோ..’ எனப் பேச முடிகிறது.

கதை என்னவோ நாம் பார்த்துப் பழகிய ‘தொண்டனை மதிக்காத அரசியல்வாதி’, ‘பசுத்தோல் போர்த்திய புலி’ பாணிக் கதைதான் என்றாலும் நம்மை ஈர்ப்பது கதைகள் அல்ல, அவை அமைக்கப்படும் களங்களும், அவற்றைச் சொல்ல பயன்படுத்தப்படும் கதையாடலும்தான். விஜய் வரதராஜின் பிரத்தியேகதையும் அதுதான்.

எனினும் ஒரு கேள்வி தொக்கி நிற்கலாம். விஜய் வரதராஜின் கொச்சையானக் கதையாடலை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி. பின்நவீனத்துவத்தையே ஏற்றுக் கொண்டு விட்டோம். கொச்சைத்தன்மை மட்டும்தான் நம் பிரச்சினையா, என்ன?

banner

Related Stories

Related Stories