
பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பின்னர் நடிகர் விஜய் தனது 66வது படத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். ரொமன்டிக், ஆக்ஷன் என கலந்த மசாலா படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க, தமன் இசையமைக்கிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
படத்துக்கான பூஜைகள் போடப்பட்டு படபிடிப்பு பணிகள் ஜோராக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சரத்குமார் விஜய் 66ல் நடிப்பது உறுதியான நிலையில் தற்போது பழம்பெறும் நடிகையான ஜெயசுதா, நடிகர்கள் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா உலகின் மூத்த நட்சத்திரங்கள் பலரும் இதில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் 66 வெளியாக இருப்பதாகவும் தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தில் மூத்த நட்சத்திரங்கள் பலரும் இணைந்திருப்பது குறித்து படம் உருவாகும் முன்னரே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக விஜய் 66 இருக்கப் போகிறதா எனவும் நெட்டிசன்கள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.








