
வெளி மாநிலங்களில் தமிழ் திரைப்படங்களுக்கான படபிடிப்பு நடத்தப்படுவதால் இங்குள்ள பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இதுவரையில் இருந்து வந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (மே 2) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ் சினிமா ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர் உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து பணிகளை மேற்கொள்வோம் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஃபெப்சிக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வருகின்ற 8ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு நடைபெற உள்ளது. எனவே படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர். அதன் அடிப்படையில் வருகின்ற 8ஆம் தேதி எந்த ஒரு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறாது.

5 வருடங்களாக எந்த பிரச்சினை வந்தாலும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களில் படபடிப்பு நடத்தி வருவது தவறு. வருமானம் இங்கு வருகிறது, செலவு அங்கு பொய் செய்கின்றனர். இதனை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே இந்த கோரிக்கையை நடிகர் அஜித் குமார் ஏற்றுகொள்ள வேண்டும்.
நடிகர் அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் அனைவரும் இந்த கோரிக்கையை ஏற்றுகொள்ள வேண்டும். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது எனக் கூறி ஆர்.கே.செல்வமணி சுட்டிக்காட்டியுள்ளார்.








