சினிமா

உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர் மீது விழுந்த விமர்சனம் - எதிர்வினை என்ன தெரியுமா?

Once upon a time in hollywood படத்தின் கதையில், ஹாலிவுட்டின் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டும் ஒரு ஸ்டண்ட் நடிகரும்தான் கதை மாந்தர்கள்.

உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர் மீது விழுந்த விமர்சனம் - எதிர்வினை என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சினிமா மொழியின் சூட்சுமமும் பரப்பும் எல்லையற்றவை. உலகளவில் பல இயக்குநர்கள் பல வகைகளில் இரண்டையும் கையாண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஓர் இயக்குநராக இருப்பவர் குவெண்டின் டாரண்டினோ. பல்ப் ஃபிக்‌ஷன், ஜாங்கோ அன்செயிண்ட், ஹேட்ஃபுல் எய்ட், கில் பில் என பல படங்கள் எடுத்திருக்கும் குவெண்டின் டாரண்டினோ திரைப்பட வடிவத்துடன் பரீட்சார்த்த முயற்சிகள் பலவற்றை செய்தவர். அம்முயற்சிகள் வெற்றி பெறவும் வைத்தவர். ஆனால் அவரது படமான Once upon a time in hollywood என்ற படத்தைப் பற்றி அவரது ரசிகர்களுக்கே நல்ல விதமான விமர்சனம் இல்லை. டிகாப்ரியோ, பிராட் பிட் முதற்கொண்ட முன்னணி நடிகர்கள் நடித்தும் நல்ல கதை இல்லாததால் அப்படம் நன்றாக இல்லை என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

ரசிகர்களின் எண்ணம் சரியா?

Once upon a time in hollywood படத்தின் கதையில், ஹாலிவுட்டின் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டும் ஒரு ஸ்டண்ட் நடிகரும்தான் கதை மாந்தர்கள். சினிமா விருப்பில் இருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக டிகாப்ரியோவும் புரூஸ் லீயின் வரவுக்குப் பின் அமெரிக்க ஸ்டண்ட் நடிகர்களுக்கான டிமாண்ட் குறைந்ததால் வாய்ப்புகள் குறைந்த ஸ்டண்ட் நடிகராக பிராட் பிட்டும் கதையில் இயங்குகின்றனர். வாழ்க்கை, லட்சியம் முதலிய சிக்கல்களுக்குள் இரு பாத்திரங்களும் தவிக்க, பிராட் பிட்டுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் பெண் வசிக்கும் இடத்துக்கு ஒருநாள் அவர் செல்ல நேரிடுகிறது. அது ஒரு வழிபாட்டுக் குழுவின் தளம். வழிபாட்டுக் குழு என்றால் cult. அக்குழுவின் தலைவனாக சார்லஸ் மேன்சன் என்பவன் இருக்கிறான். அவன் பல பெண்கள் மற்றும் ஆண்கள் கொண்ட குழுவில் இருக்கிறான். திருமணம் இல்லை, எவருடனும் கலவி, போதை மருந்து, பொருளாதாரத்துக்கு திருட்டு மற்றும் கொள்ளை என தான்தோன்றித்தனமான வாழ்க்கையை போதிக்கும் குழு அது.

இப்படிப் போகும் கதையில் அமெரிக்காவின் பிரபல இயக்குநரான ரோமன் பொலான்ஸ்கியை கொல்வதற்கு சார்லஸ் மேன்சன் உத்தரவிட, ஒருநாள் இரவு மொத்தக் குழுவும் சார்லஸ் மேன்சன் வீட்டுக்குச் செல்லத் திட்டமிடுகிறது. ரோமன் பொலான்ஸ்கியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அந்த நாள் இரவில், நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ரோமன் பொலான்ஸ்கியைக் கொல்ல குழு செல்கிறது. இறுதிக்கட்டத்தில் ஒரு தவறு நேர்கிறது. ரோமன் பொலான்ஸ்கியின் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் குழு நுழைந்து விடுகிறது. அது டிகாப்ரியோவும் பிராட் பிட்டும் வசிக்கும் வீடு. இருவரும் சேர்ந்து மொத்தக் குழுவையும் அடித்து துவம்சம் செய்கின்றனர்.

இதுதான் கதை. இது ஏன் இப்படி விறுவிறுப்பின்றி இருக்கிறது என்பதுதான் குவெண்டின் டாரண்டினா ரசிகர்களுக்கு இருக்கும் கேள்வி. அதற்குக் காரணம், Once upon a time in hollywood படம் குவெண்டின் டாரண்டினோவின் படம் மட்டுமல்ல, அது கலைரீதியிலானவொரு பழிவாங்கல்!

சார்லஸ் மேன்சன் பாத்திரம் நிஜத்தில் வாழ்ந்த பாத்திரம். அவன் ஒரு வழிபாட்டுக் குழு நடத்தி போதை அடிமைகளான சீடர்களை குழுவில் வைத்திருந்தான். அவன் ஒருநாள் அவர்களை ரோமன் பொலான்ஸ்கியைக் கொல்ல ஏவி விட்டான். அவர்களும் சென்றனர். அப்போது ரோமன் பொலான்ஸ்கி வீட்டில் இல்லை. அவரின் மனைவி இருந்தார். மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரின் நண்பர்களுடன் இருந்தார். குழு இரக்கம் காட்டவில்லை. கர்ப்பம் தரித்திருந்த மனைவி உட்பட அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் கொடூரமாகக் கொன்று வீசினர். அச்சம்பவம் ஹாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம். ரோமன் பொலான்ஸ்கி என்கிற ஓர் அற்புதமான இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த துயரத்தை சரியாக்க முனைந்து கொலைகாரன் மீதான் தன் கோபத்தை குவெண்டின் டாரண்டினா வெளிப்படுத்தியப் படமே Once upon a time in hollywood ஆகும்.

குவெண்டின் டாரண்டினோவின் இத்தகைய பாணி கதையாடல் புதிதும் இல்லை. அவர் இயக்கிய Inglourious Basterds படத்தில் யூதர்களை வேட்டையாடி மானுட விரோதியாக இருந்த ஹிட்லர் கொல்லப்படுவதுதான் கதை. ஆம். ஹிட்லர் கொல்லப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டான். ஆனால் அத்தனை சுலபமான மரணம் அவனுக்கு வாய்த்திருக்கக் கூடாது என ஒரு புனைவை எழுதி திரைப்படமாக்கி, ஒரு சினிமா அரங்கில் ஹிட்லர் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது குண்டை வெடிக்க வைத்து, அரங்கில் தீப்பற்ற வைத்து ஹிட்லர் சல்லடையாக சுடப்பட்டு தீயில் விழுந்து சாவதாக தன் கலைரீதியிலான பழிவாங்கலை செய்திருப்பார் குவெண்டின் டாரண்டினோ.

ஹிட்லர் என்பதால் அவனின் மரணம் பற்றிய உண்மை நமக்குத் தெரியும். அதனால் அதைப் பற்றியப் புனைவு நம்மை ரசிக்க வைத்தது. ரோமன் பொலான்ஸ்கியின் மனைவிக்கு நேர்ந்த துயரமோ சார்லஸ் மேன்சனோ நமக்குத் தெரியாது. அதனால் Once upon a time in hollywood படம் நம்மை நெருங்கவில்லை.

மற்றபடி நியாயம் தீர்க்கும் ஆயுதமாகவே கலை பல நேரங்களில் செயல்படுகிறது.

banner

Related Stories

Related Stories