
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்திய என ஐந்து மொழிகளிலும் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் வெளியான ‘ஓ சொல்றியா..' என்ற பாடல் ஆண்களைத் தரம் தாழ்த்தி சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. இருப்பினும் இப்பாடல் பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு துணை நடன இயக்குநராக பணியாற்றிய பெண் ஒருவர் தான் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது தற்போது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா பாலிவுட்டில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்றால் தன்னை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் புகாருக்கு கணேஷ் ஆச்சார்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "க்ரூப் டான்ஸ் ஆடும் பெண்களில் ஒருவர்தான் அவர். வேறு எதுவும் அவர் பற்றி தனக்குத் தெரியாது" என தெரிவித்துள்ளார்.








