சினிமா

பூனையை வைத்து நம்முல் இருக்கும் முரண்களை பேசும் Meow படம்!

நாம் பிறருடன் கொள்ளும் சிறுசிறு முரண்கள், அந்தப் பிறருக்கு எத்தகைய பெரிய பாதிப்பை தரும் என்பதை உலக அரசியலின் உள்ளீடைக் கொண்டு படம் விளக்கியிருக்கிறது.

பூனையை வைத்து நம்முல் இருக்கும்  முரண்களை பேசும் Meow படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சினிமாக்களில் சர்வதேச தரம் எனக் கேள்விப்பட்டிருப்போம். தொழில்நுட்பம், படப்பதிவு உபகரணங்கள், திரைமொழி முதலியவற்றைக் கொண்டு அத்தரம் நிர்ணயிக்கப்படும். ஆனால் சர்வதேசத்துக்கான கதை என அதிகம் பேசுவதில்லை. அது பெரும்பாலும் உலக சினிமாக்கள், ஈரானியப் படங்கள், விருது பெரும் திரைப்படங்கள் ஆகியவற்றை ஒட்டியே பேசப்படுவதாக மாறிவிட்டன. ஆனால் இங்கு நாம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம்.

ஒரு சமூகம் கொண்டிருக்கும் புரிதலிலிருந்துதான் அது சர்வதேசத் தரத்தை மட்டும் சினிமாவில் கொண்டு வருகிறதா அல்லது சர்வதேசக் கதையையே சினிமாவில் கொண்டு வருகிறதா என தீர்மானிக்க முடியும். அடிப்படையில் சர்வதேசக் கதை சினிமாவில் வர வேண்டுமெனில், அச்சினிமா செய்யப்படும் சமூகம் சர்வதேசிய சிந்தனையைப் பெற்றிருக்க வேண்டும். இந்திய ஒன்றியத்தில் அத்தகையச் சிந்தனையைப் பெற்றிருக்கும் மிகச் சில மாநிலங்களுள் கேரளா முதன்மையானது.

தஸ்தகீரும் சுலேகாவும் கணவன் மனைவி. துபாயில் வசிக்கின்றனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். ஒரு சிறு பூசலின் காரணமாக மனைவி சுலேகா தஸ்தகீரை விட்டுப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். கேரளத்தில் படிக்கும்போது கம்யூனிச சித்தாந்தத்தின்பால் ஈர்ப்பு கொண்டவனாக இருக்கிறான் தஸ்தகீர். கல்வியை முடித்து துபாய்க்கு வேலைக்கு வந்தபிறகு கூட இயல்பான நவதாராளவாத இளைஞனாக இயங்குகிறான்.

பிறகு ஓர் அசம்பாவிதம் நேர்ந்ததும் வாழ்க்கை அவனுக்கு தலைகீழாக மாறுகிறது. மதத்துக்கு ஆட்படுகிறான். தாடியெல்லாம் வளர்த்து மதக்கட்டளைகளின்படி இயங்கும் இஸ்லாமிய வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்குகிறான். சொந்த முயற்சியில் ஒரு சிறு சூப்பர் மார்க்கெட் கடை இருக்கிறது. அங்கு சில பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சம்பளம் கொடுக்க முடியாத நிலை. பெரியளவில் வருமானம் கிடையாது. மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள நேரமில்லை. கடுமையாகத் திணறுகிறான் தஸ்தகீர்.

பூனையை வைத்து நம்முல் இருக்கும்  முரண்களை பேசும் Meow படம்!

திடுமென ஒரு நாள் புர்கா அணிந்த ஒரு பெண் எதிர்ப்படுகிறாள். பெயர் ஜமீலா. வீட்டு வேலைப் பார்க்கும் வேலையை அவளுக்கு வழங்குகிறான் தஸ்தகீர். நன்றாக சமைக்கிறாள். பிற வீட்டு வேலைகள் செய்கிறாள். குழந்தைகளுக்கு ஜமீலாவை பிடித்து விடுகிறது. அம்மா இல்லாத குறை வீட்டில் இல்லை. இதனால் கவலை அடைகிறாள் சுலேகா.

மேம்போக்காக பார்த்தால் மிகச் சாதாரணமான ஒரு குடும்பப் படம்தான் ‘மியாவ்’. ஆனால் கதையில் வரும் பாத்திரங்களும் அவற்றின் பின்னணிகளும் அவை கொள்ளும் முரண்களும் சர்வதேசப் பிரச்சினைகளை அடித்தளமாகக் கொண்டிருக்கின்றன.

வீட்டுக்குள் சுற்றும் ஒரு பூனைதான் மொத்தக் கதைக்குமான உருவகம். தஸ்தகீருக்கு பூனை என்றாலே பிடிக்காது. அது வரும்போதெல்லாம் வழியை அடைப்பான். ஒருநாள் அவனே ஒரு பிரச்சினையில் இருக்கும்போது, பூனை வீட்டுக்குள் நுழைய முயலும். இருக்கும் கோபத்தில் பூனையை உள்ளே விடாமல் தடுக்க வீட்டின் எல்லா வழிகளையும் அடைத்து வைக்கிறான். வீட்டுக்குள் நுழைய வழியின்றி பூனை அல்லாடுகிறது.

வெற்றி பெருமிதத்தில் தஸ்தகீர் திளைக்கும்போது குழந்தைகள் கத்துகின்றன. சென்று பார்த்தால், அங்கு பூனைக் குட்டிகள் இறந்து கிடக்கின்றன. பூனை தன் குட்டிகளுக்கு பாலூட்டவே வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறது. இடிந்து விழும் தஸ்தகீரை குற்றவுணர்வு உண்ணுகிறது. பூனைக் குட்டிகளை எடுத்துச் சென்று ஒரு மைதானத்தில் அவனே குழி தோண்டி முறைப்படி புதைக்கிறான். குட்டிகள் புதைந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பூனை பதறும்போது நாம் அனைவரும் அதன் கையறுநிலையை பகிர்ந்து கொள்கிறோம்.

அந்தக் கையறுநிலைதான் படம் கொண்டிருக்கும் சர்வதேசக் கதைக்களத்தின் சாரம். நாம் பிறருடன் கொள்ளும் சிறுசிறு முரண்கள், அந்தப் பிறருக்கு எத்தகைய பெரிய பாதிப்பை தரும் என்பதை உலக அரசியலின் உள்ளீடைக் கொண்டு படம் விளக்கியிருக்கிறது.

படம் ஓடிடி தளத்தில் இருக்கிறது. பார்த்துவிடுங்கள்.

banner

Related Stories

Related Stories