சினிமா

“குழப்பங்களைக் கொடுக்கும் பதின் வயது.. உளவியல் பிரச்னையை பேசும் ‘The Tender Bar’ படம்” : சிறப்பு பார்வை!

தெளிவான coming of age ரக குடும்பப் படத்தை பார்க்க விரும்புவோருக்கு The Tender Bar படம் நல்ல தேர்வு.

“குழப்பங்களைக் கொடுக்கும் பதின் வயது.. உளவியல் பிரச்னையை பேசும் ‘The Tender Bar’ படம்” : சிறப்பு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பதின்வயது தரும் குழப்பங்கள் அதிகம். பதின்வயதை எட்டுகையில் ஒவ்வொரு குழந்தையும் தன்முனைப்பு பெறும். புதிதாக சிந்திப்பதாக எண்ணும். பழையவை வீண் என நம்பும். ஆனால் பதின்வயதுகள் முடிகையில் அப்படியே தலைகீழான சிந்தனைக்கு வாழ்க்கை அந்த பதின்வயதினரைக் கொண்டு போய் நிறுத்தும். எனவேதான் பதின்வயதினர் வளரும் படங்கள் உலகளவில் எப்போதும் ஈர்ப்பு கொண்டவையாக இருக்கின்றன. அத்தகையவொரு படம்தான் The Tender Bar.

1970களில் நடக்கும் கதை. தாயும் தந்தையும் பிரிந்து தாயுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசிக்கிறான் 9 வயது ஜேஆர். அவனது பெயரே பெரும் குழப்பத்தை அனைவருக்கும் கொடுக்கிறது. அவனது முழுப்பெயர் ஜேஆர் மெக்வொயர்.

JR என்பது Junior என்கிற வார்த்தையின் சுருக்கமான வடிவம். மெக்வொயர் என்பது தந்தையின் பெயர். எனவே அப்பாவின் மகன் என்ற அர்த்தம் தொனிக்கும் பெயர்தான் ஜேஆர் மெக்வொயர். அதாவது ஜூனியர் மெக்வொயர். அப்பா பிரிந்துவிட்டதால், அப்பாவின் அடையாளத்தை விரும்பாத மகன் வெறும் ஜேஆர் என்கிற எழுத்துகளையே தன் பெயராக எங்கும் கொடுக்கிறான். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என ஒவ்வொரு இடத்திலும் அந்த எழுத்துகளை இனிஷியலெனவோ, பெயரின் சுருக்கம் எனவோ, குடும்பப் பெயர் எனவோ தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அவரவரின் புரிதலுக்கேற்ப பெயரை பயன்படுத்துகின்றனர். தந்தையின் பெயர் வராத வரை சரிதான் என எல்லா வகை பெயர்களையும் ஜேஆர் ஏற்றுக்கொள்கிறான்.

இயல்பாகவே பதின்வயதுகள் குழப்பத்தைக் கொடுக்கவல்லது என்றால், தந்தையும் தாயும் பிரிந்து வளரும் மகனின் பதின்வயது எத்தகைய குழப்பங்களைக் கொடுக்கும்?

ஆனால் எல்லா குழப்பங்களையும் பெரும் முதிர்ச்சியோடு அணுகி நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ் க்ளூனி. இயக்குநர் வேறு யாருமல்ல, அமெரிக்காவின் புகழ்பெற்ற படமான ‘Oceans Eleven' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனிதான். நம்மூர் அஜித்தெல்லாம் சால்ட் & பெப்பர் ஸ்டைலை பின்பற்றுவதற்கு காரணமாக இருந்தவர்.

மகனை பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்து வழக்கறிஞராக்கி விட வேண்டும் என்பதுதான் தாயின் கனவு. மகனும் தாய் சொல்லைத் தட்டாமல் படிக்கிறான். இடையில் பதின்வயதுக்கே உரிய காதல் அரும்புகிறது. ஆனால் அந்தக் காதலுறவில் ஒரு சிக்கல். படிப்பில் கவனம் இழந்துவிடக் கூடாது, நன்றாக படிக்க வேண்டும், உயிரியல் தேவையான காதலையும் மறுத்துவிட முடியாது என்கிற ஊசலாட்டத்தில் பயணிக்கிறான் ஜேஆர்.

படத்தின் பெரிய பலமாக இருப்பது ஜேஆரின் மாமாதான். நடிகர் பென் அஃப்லெக் மாமா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஜார்ஜ் க்ளூனிக்குப் பிடித்த கதாபாத்திரம் போல. பென் அஃப்லெக்கின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் கூட ஜார்ஜ் க்ளூனி தெரிகிறார். நமக்கும் அந்தக் கதாபாத்திரம் பிடித்து விடுகிறது.

ஒரு மதுவிடுதியில் பணிபுரிபவராக மாமா கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அவர் எப்போதுமே ஒரு புத்த நிலையில் இருக்கிறார். தாத்தா-பாட்டி மற்றும் மாமாவின் வாழ்க்கைச் சூழல்கள் முழுக்க முழுக்கப் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பின்னணியில் நிகழ்கிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் வழக்கமான அமெரிக்க சினிமா பாணியில் முரடனாகவோ குற்றம் செய்பவராகவோ காண்பிக்கப்படவில்லை. சகோதரியின் பிரிவு, சகோதரி மகனின் குழப்பம், அப்பா-அம்மாவின் வயோதிகம், புரிந்து கொள்ளாத காதலி என எல்லா வித உறவுகளையும் மாமா கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமான மனநிலையுடன் கையாளுகிறார். அதுவே படத்தின் பலமும் கூட.

அழுகாச்சி காட்சிகள் இல்லாத ஓர் அருமையான, தெளிவான coming of age ரக குடும்பப் படத்தை பார்க்க விரும்புவோருக்கு The Tender Bar படம் நல்ல தேர்வு. படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories