சினிமா

ஊடகவியலாளர்களின் செய்தி சார்ந்த அறம் எப்படி இருக்கவேண்டும்? - உணர்த்தும் ‘Good Night, and Good Luck’!

அமெரிக்காவில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ’Good Night, and Good Luck’ திரைப்படம் சொல்வது என்ன?

ஊடகவியலாளர்களின் செய்தி சார்ந்த அறம் எப்படி இருக்கவேண்டும்? - உணர்த்தும் ‘Good Night, and Good Luck’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஜார்ஜ் க்ளூனி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓசன்ஸ் லெவன் படங்களில் நடித்தவர். சிறந்த நடிகராக அறியப்படுபவர். அவர் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.

Good Night, and Good Luck

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கும் இப்படம் 2005ஆம் ஆண்டில் வெளியானது. அமெரிக்காவில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். படத்தை எழுதி, இயக்கியவர் ஜார்ஜ் க்ளூனி.

ஓர் ஊடகக்காரனின் அறம்தான் கதை.

1950களில் அமெரிக்காவில் ஒரு முக்கியமான விஷயம் அரசால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய வரலாற்றில் ‘மெக்கார்த்தியிசம்’ எனக் குறிப்பிடப்படும் அந்த நிகழ்ச்சிப் போக்கில், மெக்கார்த்தி என்னும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடும் நடவடிக்கையை மேற்கொண்டார். சோவியத் யூனியனின் வளர்ச்சிக்குப் பின் அமெரிக்காவில் கம்யூனிச சார்பு கொண்டவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்பதே மெக்கார்த்தியின் நிலைப்பாடு. கம்யூனிச சார்பு கொண்டவர்களாக சந்தேகம் வந்தால், அவர்கள் அழைத்து விசாரிக்கப்படுவார்கள். சார்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை. அத்தகைய வேட்டையாடலின் விளைவாகத்தான் சார்லி சாப்ளின் கூட அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

ஊடகவியலாளர்களின் செய்தி சார்ந்த அறம் எப்படி இருக்கவேண்டும்? - உணர்த்தும் ‘Good Night, and Good Luck’!

Good Night, and Good Luck என்கிற வாக்கியம், எட்வர்ட் மர்ரோ என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் தன்னுடைய நிகழ்ச்சியின் முடிவில் சொல்லும் வாக்கியம். CBS தொலைக்காட்சியில் பணிபுரிபவர் எட்வர்ட் மர்ரோ. அவருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் கம்யூனிஸ்ட் என்கிற சந்தேகத்தினால் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்ட செய்தி அது. அச்செய்தியைப் பற்றி பேசப் போவதாக தொலைக்காட்சி நிர்வாகியிடம் சொல்கிறார் மர்ரோ. நிர்வாகி தயங்குகிறார். விளைவுகள் சிக்கலாக இருக்கலாம் என்றும் விளம்பரங்கள் கிடைக்காது என்றும் யோசிக்கிறார். அரை மனதோடு மர்ரோவின் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொள்கிறார்.

மர்ரோ அச்செய்தியைப் பற்றி நிகழ்ச்சியில் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தொலைக்காட்சியின் தலைமையிலிருந்து அதிருப்தி வருகிறது. ஆனால் நிர்வாகி மர்ரோ பக்கம் நிற்கிறார். செய்தியில் அறம் இருக்க வேண்டும், மக்களின் பக்கம் இருக்க வேண்டுமென சொல்லி மர்ரோவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். மர்ரோ அடுத்த நிகழ்ச்சிக்கு முடிவெடுக்கிறார். இம்முறை நேரடியாக மெக்கார்த்தியின் கம்யூனிஸ்ட்டுகள் மீதான வேட்டையைச் சாடும் நிகழ்ச்சியை நடத்துகிறார். மீண்டும் மக்கள் கொண்டாடுகின்றனர். உள்ளேயே நிர்வாகிக்கும் மர்ரோவுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மர்ரோவும் விட்டுக் கொடுக்கவில்லை. நிர்வாகியும் விட்டுக் கொடுக்கவில்லை. அடுத்தகட்டமாக ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. மர்ரோவின் நிகழ்ச்சியில் பேச மெக்கார்த்தி விருப்பம் தெரிவிக்கிறார்.

ஊடகவியலாளர்களின் செய்தி சார்ந்த அறம் எப்படி இருக்கவேண்டும்? - உணர்த்தும் ‘Good Night, and Good Luck’!

மெக்கார்த்தியின் பேட்டி என்னவாகிறது, கம்யூனிஸ்ட் மீதான ஒடுக்குமுறை என்னவானது என்பதே மிச்சக்கதை.

ஊடகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் செய்தி சார்ந்த அறம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டும் படம் Good Night, and Good Luck.

பார்த்து விடுங்கள்!

banner

Related Stories

Related Stories