சினிமா

மிஸ் பண்ணிடாதீங்க... ‘Dune’ திரைப்படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

டெனிஸ் வில்லெனுவ் இயக்கியிருக்கும் 'Dune' திரைப்படம் எப்படி இருக்கிறது?

மிஸ் பண்ணிடாதீங்க... ‘Dune’ திரைப்படத்தை ஏன் பார்க்கவேண்டும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Dune புதிதாக வந்திருக்கும் ஆங்கிலத் திரைப்படம். எதிர்காலத்தில் நடக்கும் கதை. முதலில் பார்க்கும்போது சற்று புரியாதது போல் தோன்றலாம். எனவே முடிந்தவரை கதையை விளக்க முயன்றிருக்கிறோம்.

10191ஆம் ஆண்டில் கதை நடப்பதாக படம் தொடங்குகிறது.

அராகிஸ் என்கிற ஒரு பாலைவன கிரகம். அங்கு ஒரு முக்கியமான வளம் இருக்கிறது. ஸ்பைஸ் (Spice) என்கிற வளம். அதை அண்டவெளியில் இருக்கும் பேரரசர் ஷதாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

பேரரசர் ஷதாமின் பிரதிநிதியாக ஹர்கோன்னென் குழு அராகிஸ் கிரகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. பேரரசர் திடுமென ஒரு மாற்றம் கொள்கிறார். ஹர்கோன்னென் குழுவிடமிருக்கும் ஆட்சியைப் பறித்து அட்ரெய்டிஸ் என்கிற இன்னொரு குழுவிடம் ஒப்படைத்து அராகிஸ்ஸை ஆளச் சொல்கிறார்.

அரைமனதாக ஆட்சியை ஒப்படைக்கும் ஹர்கோன்னென் குழு, அட்ரெய்டிஸ் குழுவின் மீது வஞ்சம் வைக்கிறது.

அட்ரெய்டிஸ் குழுவின் தலைவர், லெடோ. அவருக்கும் அவரது காதலியான லேடி ஜெசிகாவுக்கும் ஒரு மகன் உண்டு. அவரது பெயர் பால். லேடி ஜெசிகா லெடோவின் காதலியாக இருந்தாலும் அவர் பெனி ஜெஸ்ஸரிட் என்கிற ரகசிய பெண்கள் வழிபாட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார். அக்குழுவின் பெண்கள் மனவியல் சக்திகள் படைத்தவர்கள். மனங்களை வாசித்து இயக்கும் திறன் கொண்டவர்கள்.

இவற்றுக்கிடையில் லெடோ மற்றும் லேடி ஜெசிகாவின் மகனான பாலுக்கு எல்லாவித தற்காப்பு பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. அவ்வப்போது அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய தரிசனங்கள் கனவுகளாகவும் வருகின்றன.

அராகிஸ் கிரகத்தின் விளிம்புகளில் இன்னொரு குழு வசிக்கிறது. ஃப்ரெமென் (Fremen) என ஒரு குழு. அடிப்படையில் இன்னொருவர் தங்களை ஆளுவது அக்குழுவுக்குப் பிடிக்காது. அராகிஸ் கிரகத்தின் பூர்வக்குடி அவர்கள். ஃப்ரெமென் மக்களை காப்பதற்காக வெளிக்கிரகத்திலிருந்து ஒருவர் வருவார் என்ற நம்பிக்கைக் அவர்களிடம் உண்டு.

மொத்தமாக இப்படத்தில் நான்கு குழுக்கள் இருக்கின்றன. வளத்துக்காக ஒரு கிரகத்தைக் கட்டுப்படுத்தும் பேரரசர் ஷதாமின் கீழ் அந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்காக சண்டைப் போட்டுக்கொள்ளும் இரு குழுக்கள். ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் குழு மூன்றாவது. மூன்று குழுக்களுக்கும் ஊடாக இயங்கும் பெண்கள் வழிபாட்டுக் குழு நான்காவது.

மிஸ் பண்ணிடாதீங்க... ‘Dune’ திரைப்படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

இந்த நான்கு குழுக்களையும் தாண்டி, புதிதாக ஒரு மீட்பர் (The One) வரவிருக்கிறார். யார் அந்த மீட்பர் என்பதை நோக்கி அதிகாரச் சண்டை, அரசியல், மோதல், மாந்த்ரீகம், தலைமறைவு எனக் கதை பயணித்து இறுதியில் கண்டடைகிறது.

Dune படத்தின் முதல் பாகம் கதைக்களத்தை விவரித்து விட்டு, மீட்பரை கண்டறிவதில் முடிகிறது. அடுத்தடுத்த பாகங்களில் அந்த மீட்பர் என்ன செய்கிறார், அவருக்கு நேரும் பிரச்சினைகள் என்னவென கதைகள் விரிவதை எதிர்பார்க்கலாம்.

படத்தின் இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ். Incendies, Enemy, Arrival போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர். காட்சிகளும் வரைகலையும் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் உச்சமாக இருப்பது இசைதான். இசையமைப்பாளர் வேறு யாருமல்ல, ஹான்ஸ் சிம்மர். ஏற்கனவே Christopher Nolan படங்களின் இசையில் உலகம் முழுக்க ரசிக்கப்படுபவர். இந்தப் படத்திலும் பின்னியிருக்கிறார்.

நாவலாக வந்த கதை படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சூழலை உள்ளீடாக கொண்டிருப்பதால் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது படம். வரைகலைக்கு மட்டுமல்ல, கதை பேசும் அரசியலுக்காகவும் படத்தைப் பாருங்கள்.

படத்தின் அரசியல் என்னவென தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories