சினிமா

விமர்சனங்களை ஏற்காத அரசு அழிவை சந்திக்கும்; அரசியல் தலையீடு வேண்டாம் - ஒன்றிய அரசை சாடிய ஆர்.கே.செல்வமணி

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத அரசு அழிவை சந்திக்கும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை ஏற்காத அரசு அழிவை சந்திக்கும்; அரசியல் தலையீடு வேண்டாம் - ஒன்றிய அரசை சாடிய ஆர்.கே.செல்வமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு படைப்பாளிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

"காலம் மாறும்போது சட்டமும் மாறும். அரசு சம்பந்தப்பட்ட துறைகளிடம் கலந்து ஆலோசனை செய்து வரைவு கொண்டு வர வேண்டும்.

எனது குற்றப்பத்திரிகை படத்திற்கும் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்தேன். 1993ல் சென்சார் செய்யப்பட்ட படத்தை திரைக்கு கொண்டுவர 14 வருடங்கள் ஆனது. சென்சார் தணிக்கை அளித்தபின் தணிக்கையை மாற்றி அமைக்கலாம் என்றால் திரைப்படத்துறையை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஒன்றிய அரசின் இந்த முடிவு சர்வாதிகாரத்தின் உச்சம். படைப்பு சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகும். விமர்சனம் வரக்கூடாது என்றால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத அரசு அழிவை சந்திக்கும் என்றார். மேலும் அனைத்து கலைஞர்களின் கருத்து சுதந்திரத்தை தடுப்பது யாருக்கும் நல்லதல்ல.

தமிழக பாஜகவுக்கு ஒரு வேண்டுகோள். பாஜகவின் இந்த நடவடிக்கை அக்கட்சிக்கு நல்லதல்ல. அரசுக்கெதிரான கருத்து தனிப்பட்ட கட்சிக்கு எதிரானதாக திசை திருப்ப வேண்டாம். இது அரசுக்கும் படைப்பாளிகளுக்குமான பிரச்சினை. அதில் அரசியல் தலையீடு வேண்டாம்.

ஒன்றிய அரசின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள். எங்களது குறைகளையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். சட்டதிருத்தம் வேண்டும். ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் வேண்டும்தான் ஆனால் படைப்பாளி சுதந்திரத்தை பறிப்பது போன்ற அபாயங்கள் வேண்டாம்.

மேலும் தன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் சில நபர்கள் தங்களுக்கு வேண்டிய பத்திரிகை மூலம் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதாகவும் அவை உண்மையில்லை." என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories