சினிமா

கணவரை அடுத்து டோலிவுட்டுக்கு சென்ற நஸ்ரியா; தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் சன்னி லியோன் - சினி பைட்ஸ்!

கணவரை அடுத்து டோலிவுட்டுக்கு சென்ற நஸ்ரியா; தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் சன்னி லியோன் - சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் 'நேரம்' படம் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். அதற்குப் பிறகு, 'ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' படங்களில் நடித்தார். மலையாளத்தில் எக்கச்சக்கப் படங்கள் நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகினார் நஸ்ரியா.

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு `கூடே' படம் மூலம் மறுபடியும் மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து `ட்ரான்ஸ்' படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். `மென்டல் மதிலோ', `ப்ரேச்சேவாரெவருரா' படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'அன்டே சுந்தரானிக்கி' (Ante Sundaraniki) படத்தில் தான் தெலுங்கு சினிமா என்ட்ரி நிகழ இருக்கிறது.

“எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். 'அன்டே சுந்தரானிக்கி'யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு கணவர் பகத் பாசிலோடு சென்றிருக்கிறார் நஸ்ரியா. ஃபகத் பாசிலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடைய 'புஷ்பா' படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இதனுடைய படப்பிடிப்பில் ஃபகத் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கவர்ச்சி நடிகை என்ற பெயரை மாற்ற தற்போது தீவிரமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாளத்தில் கூட சமீபத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் `ஷூரோ' படம் அறிவிக்கப்பட்டது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் `வீரமாதேவி' என்ற ஒரு வரலாற்றுப் படத்தில் நடிப்பது அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

கணவரை அடுத்து டோலிவுட்டுக்கு சென்ற நஸ்ரியா; தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் சன்னி லியோன் - சினி பைட்ஸ்!

இப்போது மீண்டும் சன்னி லியோன் நடிப்பில் ஒரு ஹிஸ்டாரிகல் படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2009ல் வெளியான `சிந்தனை செய்' என்ற படத்தை இயக்கிய யுவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஹிஸ்டாரிகல் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படம், நிகழ்காலம் மற்றும் 1000 வருடங்களுக்கு முந்தைய காலம் என இரண்டு காலகட்டங்களில் சொல்லப்படும் கதையாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் சென்னையிலும், ஹிஸ்டாரிகல் பகுதிகள் மும்பையில் உருவாகி வரும் செட்டிலும் நடக்க இருக்கிறது.

ஹிஸ்டாரிகல் போர்ஷனில் ராணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் சன்னி லியோன். மேலும் இந்தப் படத்தில் சதிஷ், மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வேளச்சேரியில் நேற்று துவங்கியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories