சினிமா

பவுத்தத்தின் அரசியலைக் காட்டிய இந்தோ-சீன திரைப்படம் ‘யுவான் சுவாங்’!

சீனாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய படமான ‘Xuan Zang' பற்றி...

பவுத்தத்தின் அரசியலைக் காட்டிய இந்தோ-சீன திரைப்படம் ‘யுவான் சுவாங்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

யுவான் சுவாங் - பள்ளி வரலாற்று புத்தகங்களில் தென்படக்கூடிய பெயர். பொதுவாக சீனப் பயணி அல்லது யாத்ரீகர் என குறிப்பிடப்படுபவர் யுவான் சுவாங். சீன நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து இங்கிருக்கும் வாழ்க்கையை, சூழலை அறிந்து கொண்டு சென்றதாக சொல்லப்படும் நபர் இவர். கி.பி 600 களின் பிற்பகுதியில் இந்தியாவுக்குள் சுற்றிய நபர். 'சம்பந்தமில்லா நிலத்தில் ஏன் இந்த நபர் சுற்றித் திரிந்தார்' என ஒரு சுவாரஸ்யம் இயல்பாகவே தோன்றும். கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் இந்தியாவை பற்றிய வரலாற்று பாடத்தை சங்கிகள் எல்லாம் எடுக்கத் தொடங்கிய பிறகு, இவரை தேடிப் பிடித்து படிக்க நேர்ந்தது. பல உண்மைகள் புலப்பட்டன. இவரை பற்றி தேடும் படலத்தில் சிக்கிய படம்தான் Xuan Zang. சீனாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய படம்!

'இந்தியாவுடன் கூட்டு தயாரிப்பு' என்ற பெயரில் ஆரியத்தை பாதாளத்துக்குள் தள்ளி விட்டிருக்கிறது சீனா. சீனாவில் பவுத்த துறவியாக இருப்பவர் யுவான் சுவாங். புத்தரை பற்றிய செய்திகளையும் தரவுகளையும் சேகரிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு. அவர் கனவு மெய்ப்பட வேண்டுமெனில் புத்தர் பிறந்த இடமான இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வாய்ப்பும் கிட்டுகிறது. சீனப் பகுதியில் பஞ்சம் ஏற்படுவதால் பஞ்சம் பிழைக்க பரதேசம் செல்லும் மக்களை வழியனுப்பி வைக்கிறது சீனாவின் நாடு ஒன்று. அதில் யுவான் சுவாங்கும் வெளியே வருகிறார். அவர் மட்டும் இந்தியா செல்லும் திசையை நோக்கி நடக்கிறார். பல அரசுகளையும் ஊர்களையும் பாலைவனத்தையும் கடக்கிறார். பவுத்த நெறிக்கு உரிய அர்ப்பணிப்பு, பற்றறுத்தல் முதலிய கட்டங்களை கடக்கும் காலமாக அது அவருக்கு அமைகிறது.

ஒருவழியாக இந்தியா சென்று சேர்கிறார். பவுத்தத்துக்கு பெயர் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். பல்கலைக்கழகம் அந்த காலகட்டத்தில் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதமே பேசப்படுகிறது. மஹாயானம், தர்மம், பவுத்தம் முதலியவற்றை முழுமையாக கற்று தேறி பின் இந்தியா முழுக்க பவுத்த தடம் தேடிச் சுற்றுகிறார் யுவான் சுவாங். இறுதியில் ஒரு பவுத்த சபையில் 'மதங்களை பற்றிய விவாதம்' ஒன்றை ஹர்ஷ மன்னன் நடத்த, அதில் மஹாயானத்தை ஆதரித்து பேச ஆளின்றி யுவான் சுவாங் செல்கிறார். விவாதிக்கிறார். ஜெயிக்கிறார். மீண்டும் சீனா செல்கிறார். மிகவும் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். ஆன்ம உணர்வுக்கும் சரியாக தீனி போடுகிற படம். பல இடங்களில் சுட்டிக் காட்டல் இருக்கிறது.

பவுத்தத்தின் அரசியலைக் காட்டிய இந்தோ-சீன திரைப்படம் ‘யுவான் சுவாங்’!

குறிப்பாக ஒரு காட்சி! மடாலயங்கள், கோவில்கள், சிற்பங்கள் என சுற்றித் திரியும் யுவான் சுவாங் இயல்பான மனிதர்களை சந்திக்கிறார். எல்லாரும் நடந்து கொண்டிருக்கும் பாதையில் சிலர் மட்டும் ஓரமாக ஒதுங்கி பதுங்கியபடி நடக்கும் காட்சியை பார்க்கிறார் யுவான் சுவாங். ஏன் அவர்கள் ஒதுங்கி நடக்கிறார்கள் எனக் கேட்டதும் விசுவாமித்திரனை ஒத்த தோற்றம் கொண்ட நபர் ஒருவர் சொல்கிறார், "பாலியல் தொழிலாளர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் போன்றோர் ஊர்ப்பாதையில் நடக்கக் கூடாது. நடந்தாலும் ஓரமாகத்தான் செல்ல வேண்டும்" என. யுவான் சுவாங்குக்கு குழப்பம்! "இது புத்தரின் நிலம் அல்லவா? சமத்துவம் பேசிய புத்தரின் நிலத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாதே?" எனக் கேட்கிறார். அதற்கு நாமம் போன்ற ஒன்றை இட்டிருக்கும் விசுவாமித்திர நபர், "இது புத்தர் பிறந்த நிலம்தான். ஆனால் இங்கு இருக்கும் அனைவரும் புத்தர்கள் இல்லை!" எனப் புன்னகைக்கிறார். பிராமண ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட நபர் ஒருவருக்கு புத்தர் எப்படி விடியலாகிறார் என்பதை கவித்துவமாக சொல்லும் காட்சி ஒன்றும் இருக்கிறது.

பொதுவாக பவுத்தம் என பேசினால் Spring , Summer... படம் போல் ஒரேயடியாக நெறியையும் வாழ்வையும் மட்டும் பேசுவார்கள். அல்லது பவுத்த பெருமையை மட்டும் செல்வார்கள். இப்படத்தில் பவுத்தம் ஏன் முதலில் இந்தியாவில் பிறந்தது என்பதை யுவான் சுவாங்கின் வழி நடந்து பிராமண ஆதிக்கத்தை சுட்டிக் காட்டி விடை அறிகிறார்கள். அறிவிக்கிறார்கள். பவுத்தத்தை நெறி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அது கொண்டிருந்த அரசியல், உருவாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றையும் சமூக பின்புலத்துடன் கோர்த்து காண்பித்திருக்கிறார்கள். ஓர் அற்புத பயணமாக, ஆன்ம அனுபவமாக, அரசியல் புரிதலாக அழகாக மலர்ந்திருக்கிறது இப்படம். மொத்தத்தில் சீனாக்காரன் இந்தியாக்காரனை கூப்பிட்டு இந்தியாவுக்கே விபூதி அடிக்க வைத்திருக்கிறான். தவறாமல் கண்டு களியுங்கள்!

banner

Related Stories

Related Stories