சினிமா

இங்கிலாந்து வீரர், டிக்டாக் பிரபலத்திடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களால் குழப்பமடைந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலி.

இங்கிலாந்து வீரர், டிக்டாக் பிரபலத்திடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் வலிமை படத்துக்காக அஜித் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வலிமை படத்தின் படபிடிப்புகள் தொடங்கப்பட்டது.

அதன்பிறகு வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு பின் தளர்வுகள் விடுத்ததும் இந்தியாவில் படமாக்க வேண்டியவை அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் வெளிநாட்டு படபிடிப்புகள் எஞ்சியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறாராம்.

படம் அறிவித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இதுவரையில் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட படக்குழு வெளியிடாததால் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என படக்குழுவினரிடம் அப்டேட் கேட்டு கேட்டு ஓய்ந்து போன அஜித் ரசிகர்கள் அண்மைக்காலங்களாக சமூக வலைதளங்களில் உள்ள சினிமா, விளையாட்டு என பல்துறை பிரபலங்களிடம் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வகையில், அண்மையில் சென்னையில் நடந்த இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் நட்சத்திர வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரனிடம் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நேரலையின் போதே வலிமை அப்டேட் கேட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று, ஃபீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடமும் வலிமை அப்டேட் கேட்டிருக்கிறார்கள். அது குறித்த வீடியோவை அஸ்வினே தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவிடம் சமூக வலைதள லைவில் வலிமை அப்டேட் கேட்டதோடு, சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடமும், முதலமைச்சர் பழனிசாமி என பலரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்கள்.

இவை அனைத்தும் அஜித் படத்தின் மீதான ஆர்வமாக ஒரு புறம் பார்க்கப்பட்டாலும் காணுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்பது நெட்டிசன்களையே முகம் சுழிக்க வைத்துள்ளது. இதனையடுத்து சினிமாவை தாண்டி பொது வெளியில் அதிகம் சங்கமிக்காத, தன் படங்கள் குறித்து பேச விரும்பாத நடிகர் அஜித்தே வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்த ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் ரசிகர்கள் தாழ்மையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories