சினிமா

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

2001 முதல் 2020 வரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருந்தது என்பதின் தொகுப்பு.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் எத்தனை பண்டிகைகள் கொண்டாடினாலும் பொங்கலுக்கு இணையான ஒரு திருநாள் தமிழனுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் இன்றைய தினத்தை மட்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்று அழைக்கின்றனர். விவசாயம் விவசாயி என மனிதனின் வாழ்வாதாரத்தின் முக்கியமான விஷயங்களை கொண்டாடும் நாளான இந்த பொங்கல் திருநாளில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்கள் இருக்கும். அதில் திரையரங்க கொண்டாட்டங்களுக்கும் ஒரு முக்கிய பங்கிருக்கிறது. அப்படி கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல், சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

2001-ல் தீனா, ப்ரெண்ட்ஸ், வாஞ்சிநாதன் என மூன்று பெரிய படங்கள் வெளியானது. கோலிவுட் ரசிகர்களுக்கு அந்த பொங்கல் உண்மையில் தித்தித்தே இருக்கும். காராணம் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அஜித்தின் தீனா முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் நிறைந்திருந்தது. விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்த ப்ரெண்ட்ஸ் நண்பர்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருந்தது. விஜய்காந்த நடிப்பில் வெளியான வாஞ்சிநாதன் தமிழர் திருநாளில் தேசப்பற்றையும் நெஞ்சில் விதைத்திருந்தது. இந்த மூன்று படங்களுமே மக்களின் மனதில் நின்றதால் அந்த ஆண்டின் பொங்கல் பெரும்பாலான குடும்பத்தினரை திரையரங்கை நோக்கி பயணிக்க செய்திருந்தது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

அடுத்த ஆண்டான 2002ல் ரெட், பம்மல் கே சம்பந்தம், அழகி, அல்லி அர்ஜூனா, புன்னகை தேசம் என ஐந்து படங்கள் வந்திறங்கியது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அஜித்துக்கு ஒரு பொங்கல் ரிலீஸ் இருந்தது ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மாட்டுமே இருந்தது. ஆனால் அஜித் தவரவிட்டதை மற்ற படங்கள் பயன்படுத்திக் கொண்டன. கமலின் பம்மல் கே சம்மந்தம், பார்த்திபனின் அழகி ஆகிய படங்களின் வெற்றிக்கு பரிசாக அதை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற இரு படங்களுக்கும் அஜித்தின் ரெட் படத்துக்கு ஏற்பட்ட அதே நிலை தான். ரசிகர்களின் கவனம் சற்றும் செல்லவில்லை. கமலின் பம்மல் கே சம்மந்தம் படம் நகைச்சுவை நிறைந்த குடும்ப படமாக வெளியானது அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்திருந்தது. அந்த படத்தின் காட்சிகளை இன்றும் கூட வைத்த கண் வாங்காமல் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொங்கல் திருநாளில் வெளியாகும் படங்களுக்கு வசூலில் குறைந்தபட்சமாவது வரும் எனும் நிலை கோலிவுட்டில் உண்டாகிவிட்டது. இதனை உணர்ந்த கோலிவுட் திரையுலகம் 2003ஆம் ஆண்டு தூள், அன்பே சிவம், அன்னை காளிகாம்பாள், சொக்கத்தங்கம், ராமச்சந்திரா, வசீகரா என 6 படங்கள் வெளியிட்டது. சத்யராஜின் ராமசந்திரா மற்றும் விஜய்யின் வசீகரா மட்டுமே தோல்வியடைந்தன. விக்ரமின் தூள், கமலின் அன்பே சிவம், விஜய்காந்தின் சொக்கத்தங்கம் ஆகிய படங்கள் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்தது. ஆரம்பத்தில் அன்பே சிவம் படத்திற்கும் எதிர்மறையான விமர்சனங்களே பெற்றிருந்தாலும் ஊடகங்களின் நல்ல விமர்சனத்தால் படத்தை ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்தது. இன்றைய தலைமுறை இளைஞர்களும் கூட இந்த படத்தின் காட்சிகளை தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த படங்களுக்கு இடையில் வெளியான பக்திப் படமான ‘அன்னை காளிகாம்பாள்’ கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலையும் முதலுக்கு மோசமில்லாமல் பார்த்துக் கொண்டது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

தொடர்ந்து 2004ல் எங்கள் அண்ணா, ஜெய், கோவில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விருமாண்டி ஆகிய படங்கள் வெளியானது. இதில் சிம்புவின் கோவில் மற்றும் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் கோவில் பட தயாரிப்பாளரே அதிக லாபம் பார்த்திருந்தார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் பாடிய நாட்டுச்சரக்கு பாடல் மட்டுமே ரசிகர்களிடத்தில் அதிகமாக சென்று சேர்ந்திருந்தது. இந்த போட்டியில் தனித்து காலூன்ற நினைத்த கமலின் விருமாண்டி படத்துக்கு இரு வேறு விதமான விமர்சனங்களே அப்போது கிடைத்திருந்தது. விஜய்காந்தின் எங்கள் அண்ணா படம் வடிவேலு, பிரபுதேவா, பாண்டிராஜ் ஆகியோரின் கலக்கல் காமெடியினால் தப்பித்து நல்ல வசூல் செய்தது.

2005ம் ஆண்டு பொங்கலின் போது பிரசாந்தின் ஆயுதம் , சரத்குமாரின் ஐயா, தனுஷின் தேவதையைக் கண்டேன், விஜயின் திருப்பாச்சி என நான்கு படங்கள் வெளியானது. இதில் பிரசாந்தின் ஆயுதம் மட்டுமே தோல்வி படமாக அமைந்தது. சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருந்த ஐயா படத்துக்கு ஏகபோக வரவேற்பு இருந்து. அதே போல விஜய் மாஸ் ஹீரோவாக உருவெடுத்த திருப்பாச்சி படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. கோலிவுட் ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் வசூலில் இரண்டு படங்களுமே சக்கைப்போடு போட்டது. இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களுக்கு மத்தியில் தனுஷின் தேவதையை கண்டேன் படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. காமெடி காதல் செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்திருந்த இந்த படம் காதலில் ஏமாற்றப்படும் ஆண்களுக்கு இன்றும் ஒரு பொக்கிஷம் தான்.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

பொங்கல் ரிலீஸில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நல்ல படங்களை ரசித்து கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு 2006ஆம் ஆண்டு பெரும் ஏமாற்றமாக தான் இருந்திருக்கும். அந்த ஆண்டு பரமசிவன், சரவணா, ஆதி, பாசக்கிளிகள் என நான்கு படங்கள் வெளியான போதிலும் எந்த படமும் பெரியளவில் ஈர்க்கப்படவில்லை. குடும்ப ரசிகர்களால் சிம்புவின் சரவணா படம் மட்டும் தப்பியது. அஜித்தின் பரமசிவன், விஜய்யின் ஆதி என ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த இரண்டு படங்களுமே ஏமாற்றம் அளித்திருந்தது. ஆக்‌ஷன், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து நல்ல கதையோடு வெளியான சரவணா மட்டும் தான் அந்த ஆண்டின் வெற்றி படமாக அமைந்திருந்து.

ஆதியில் விட்டதை 2007ல் போக்கிரியில் மொத்தமாக பிடித்தார் விஜய். அந்த ஆண்டும் விஜய், அஜித் படங்கள் மோதிக்கொண்ட பொங்கலாவே இருந்தது. ஆழ்வார், போக்கிரி, தாமிரபரணி என மூன்று படங்கள் வெளியாகின. இந்த முறை விஜய் தப்பித்தார். கூடவே விஷாலின் தாமிரபரணி படமும் ஹிட்டடித்தது. 2006ஐ போல அஜித்துக்கு இந்த பொங்கலும் தோல்வியாகவே முடிந்தது. அடுத்த 2008ல் பீமா,காளை, பழனி, பிரிவோம் சந்திப்போம், வாழ்த்துகள் (மாதவன்) , பிடிச்சிருக்கு என மீண்டும் 6 படங்கள் வெளியானது. விக்ரமின் பீமாவும் சிம்புவின் காளையும் மட்டுமே சற்று போட்ட முதலீட்டை அள்ளியது. ஆனால் இந்த படங்களுக்கும் கிடைத்தது கலவையான விமர்சனங்களே. மற்ற 4 படங்களும் வந்த தடம் தெரியாமலே போனது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

கொஞ்சம் கொஞ்சமாக பொங்கல் தின படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்தது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகள் அதிகமானதை உணர்ந்த கோலிவுட், படங்களின் எண்ணிக்கையை குறைத்து லாபம் பார்க்க திட்டம் தீட்டியது. 2009ல் வில்லு, காதல்னா சும்மா இல்ல, படிக்காதவன் என மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தன. கதையில் போதுமான வலுவில்லாததால் இந்த ஆண்டும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தனுஷின் படிக்காதவன் படம் மட்டும் போட்ட முதலில் பாதிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

2010ல் ஆயிரத்தில் ஒருவன், குட்டி, நாணயம், போர்க்களம் என நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அப்போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது இந்த படத்தை கொண்டாடாதவர்களே இல்லை. செல்வாவிடம் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் கூட விடுக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் அன்றைய தேதிக்கு படத்தின் நிலை கவலையாகவே இருந்தது. தனுஷின் குட்டி மற்றும் பிரசன்னாவின் நாணயம் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றன.

கோலிவுட் ஒரு ஆண்டுக்கு 200ல் இருந்து 250 படங்கள் வரை வெளியிட்டு வந்தாலும், விழா காலங்களில் வெளியாகும் படங்கள் தான் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கும். விடுமுறையை குறிவைத்தே இயக்கப்படும் படங்கள் ரசிகர்களை பெரிதும் கவருவதில் தவறிவந்த நிலையில் 2011ல் வந்திரங்கின ஆடுகளம், சிறுத்தை, இளைஞன், காவலன், சொல்லித்தரவா உட்பட 5 படங்கள். இதில் ஆடுகளமும் சிறுத்தையும் கொண்டாடப்பட்டது. தனுஷ் - வெற்றிமாறன் காம்போவில் வெளியான ஆடுகளம் தனுஷை தேசிய விருது வரை கொண்டு சென்றது. கார்த்தியின் சிறுத்தை ரீமேக் படமாக இருந்தாலும் வயிறு வலிக்கும் நகைச்சுவை காட்சிகளின் மூலம் நல்ல லாபம் பார்த்தது. அதே தேதியில் வெளியான விஜய்யின் காவலன் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருப்பினும் விஜய்யின் நடிப்பு இதில் பெரிதாக பேசப்பட்டது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

இதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு பொங்கல் தின ஸ்பெஷலாக நண்பன், வேட்டை, மேதை-ராமராஜன் ஆகிய படங்கள் வந்திரங்கின. விஜய் - ஷங்கர் காம்போவில் முதல் படமாக வந்த நண்பன் பாலிவுட் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் கோலிவுட் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாகவே இருந்தது. இதனால் படத்தின் வசூலுக்கு எந்த பாதகமும் வரவில்லை. தொடர் தோல்விகளில் இருந்த விஜய் இந்த படம் மூலமாக மீண்டு வந்தார். கூடவே வெளியான வேட்டை மாதவன் - ஆர்யா காம்போவில் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளை காட்டி வசூலிலும் வேட்டையாடியது. தொடர்ந்து பொங்கலுக்கு எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றாத படங்களாகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சற்று ஆறுதலாக இருந்தது.

2013ல் அலெக்ஸ் பாண்டியன், கன்னா லட்டு தின்ன ஆசையா, சமர், புத்தகம், விஜயநகரம் ஆகிய படங்கள் வெளியாகின இதில் விஷாலின் சமரும் சந்தானத்தின் கன்னா லட்டு தின்ன ஆசையா படமும் லாபம் பார்த்தது. கார்தியின் அலெக்ஸ் பாண்டியன் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவியது. ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பயணித்து வந்த கோலிவுட்டின் பொங்கல் ரிலீஸ் படங்களின் பாதையை மாற்றியது 2014ல் வெளியான வீரம், ஜில்லா ஆகிய படங்கள். நீண்ட நாள் கழித்து விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக வெளியானது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதனால் குடும்ப ரசிகர்கள் திரைக்கு சென்று படம் பார்ப்பதற்கே கடும் சிரமம் நிலவியது. டிக்கெட் முன்பதிவிலேயே கடும் போட்டி நிலவியது. இந்த கலவரத்தில் இந்த படங்களோடு வெளியான கலவரம், விடியும் வரை பேசு ஆகிய படங்கள் வந்த இடம் தெரியாமல் போனது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

வீரம், ஜில்லா ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டன. விமர்சன ரீதியாக வீரம் படமே வெற்றிப் பெற்றது. ஜில்லா படம் ஆரம்பத்தில் நல்ல வசூலை ஈட்டியிருந்தாலும் நீண்ட நாட்கள் திரையில் நிலைத்திருக்கவில்லை. பின்னர் 2015ல் ஐ, ஆம்பள, டார்லிங் ஆகிய படங்கள் வெளியானது. மூன்று படங்களுக்குமே நல்ல வரவேற்பு இருந்தது. பிரம்மாண்ட செலவில் உருவான விக்ரமின் ஐ படம் பல கோடிகளை அள்ளியது. விஷாலின் ஆம்பள மற்றும் ஜி.வியின் டார்லிங் படங்கள் நல்ல கமர்ஷியல் படங்களாக வெளியாகி கமர்ஷியல் ரீதியாக வெற்றியும் பெற்றன.

2016ல் கெத்து, கதகளி, ரஜினி முருகன், தாரை தப்பட்டை என வெவ்வேறு விதமான படங்கள் வெளியான போதிலும் விஷாலின் கதகளியும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனுமே வசூல் பார்த்தது. பாலாவின் தாரை தப்பட்டை கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. இருப்பினும் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு கோலிவுட்டில் விழாக் காலங்களில் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை எனும் வழக்கம் தானாகவே உருவானதை உணர்ந்த திரையுலகினர், படங்களின் எண்ணிக்கையும் இன்னும் குறைத்து 2 அல்லது 3 படங்களாக மாற்றிக் கொண்டனர். அதன்படி 2017ல் பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக என இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது. வழக்கம் போல விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு பைரவா முதல் இரண்டு மூன்று நாட்கள் கலைக்கட்டியது. பின்னர் எப்போதும் போல அமைதியானது. அந்த சமயம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டமும் நடந்து வந்ததால் அந்த பொங்கல் தமிழக மக்களுக்கு திரையரங்கில் மட்டுமல்ல நிஜத்திலும் பெரிதும் தித்திக்கவில்லை.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

அடுத்த பொங்கலில் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி என மூன்று படங்கள் வெளியாகின. இதிலும் எந்த படமும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. 2018ஆம் ஆண்டும் ரசிகர்களுக்கு பொங்கல் ஏமாற்றமாகவே இருந்தது. பொங்கலுக்கு ஒரு நல்ல படம் அதுவும் குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட படம் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்ட விரக்தியில் இருந்த ரசிகர்களுக்கு 2019ல் ரஜினியும் அஜித்தும் சேர்த்து வந்து விருந்து படைத்திருந்தனர். பேட்ட - விஸ்வாசம் என இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. ரஜினி ரசிகர்கள் பேட்டை படத்தை ஒரு பக்கம் கொண்டாட அஜித் ரசிகர்கள் விஸ்வாசத்தை விழாக்கோலமாக மாற்றினர். இரண்டுமே வசூலிலும் குறைவில்லாத போட்டியாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலுக்கு இப்படி ஒரு ஹிட் கிடைத்தது கோலிவுட் திரையுலகினருக்குமே நல்ல மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த மகிழ்ச்சியை உணர்ந்துக் கொண்ட சினிமாக்காரர்கள் இந்த 2020லும் அதே ஃபார்முலாவை கையாள திட்டமிட்டனர். சென்ற ஆண்டு பேட்டையாக வந்த ரஜினி இந்த ஆண்டு தர்பாரில் போலிஸாக களமிறங்கியுள்ளார். இந்த 2K பொங்கல் ஸ்பெஷலை தீனா படம் மூலமாக துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியின் தர்பார் மூலமாக முடித்து வைத்துள்ளார். தர்பார் இன்று அனைவரும் குடும்பம் குடும்பமாக கொண்டாடிவரும் படமாக வெற்றிநடைப் போட்டு வருகிறது. திரையரங்கம் நிறைந்த காட்சிகள் அனைவரையும் மகிழ்வித்து வருகிறது. இந்த தர்பார் பொங்கலோடு தனுஷின் பட்டாஸும் இணைந்து இரட்டை திருவிழாவாக விருந்து படைக்க வருகிறது. தமிழர்களின் பாரம்பரியங்கள் பற்றி பேசும் இந்த பட்டாஸ் படமும் நல்ல லாபம் பார்த்து வெற்றிப்பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

”ஹிட் v ஃபிலாப், அஜித் v விஜய்” கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பொங்கல் ரிலீஸ் ட்ரெண்ட்!

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமா ரசிகர்களின் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் பாரம்பரியங்களை விட்டுவிடவோ மறந்துவிடவோ மட்டும் சொல்லித்தரவில்லை. இந்த பொங்கலை மட்டுமல்ல இனிவரும் பொங்கலையும் தித்திப்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுங்கள். தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

எழுத்து - சுரேஷ்

banner

Related Stories

Related Stories