சினிமா

“மணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் என்ன குற்றம்?” - போலிஸுக்கு ஐகோர்ட் கேள்வி!

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் எந்தக் குற்றமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

“மணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் என்ன குற்றம்?” - போலிஸுக்கு ஐகோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அண்மையில் மூடப்பட்டது. இந்த தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கியதாலும், மற்றொரு அறையில் மது பாட்டில்கள் இருந்ததாலும் அந்த விடுதிக்கு போலிஸாரும் , வருவாய் துறையினரும் சீல் வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து விடுதி நிர்வாகம் சார்பில் அரியானாவைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு விடுதி நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல் சீல் வைத்தது நீதிக்கு எதிரானது என கருத்து தெரிவித்தார்.

இந்த விடுதியில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும், மது விற்பனைக்கான உரிமம் பெறாத நிலையில் வேறொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாலுமே சீல் வைத்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

“மணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் என்ன குற்றம்?” - போலிஸுக்கு ஐகோர்ட் கேள்வி!

காவல்துறையினரின் இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் சட்டரீதியாக என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

மேலும், திருமணமாகாத ஆணும் பெண்ணும் 'Living Together" முறையில் சேர்ந்து வாழ்வதை எப்படி குற்றமாக கருதமுடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது எனத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் அந்த விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும், தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- 4.5 லிட்டர், வெளிநாட்டு மதுபானம்- 4.5 லிட்டர், பீர் -7.8 லிட்டர், 9 -லிட்டர் ஒயின்' என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி விடுதியில் மதுபான பாட்டில்கள் இருந்தது குற்றமில்லை எனவும் நீதிபதி விளக்கினார்.

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories