சினிமா

புள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்! #17YearsOfRamana

விஜயகாந்துக்கு கிடைத்த க்ளாசிக் சிக்ஸர் ‘ரமணா’. இப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகிவிட்டன.

புள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்! #17YearsOfRamana
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும். அதேவேளையில் அந்தப் படத்தின் மூலமாக சமூக பிரச்னையையும் பேசிவிட வேண்டும். அப்படியான ஒரு கமர்ஷியல் பேக்கஜ் மிகவும் குறைவு. அந்த வரிசையில் மிக முக்கியமான ஒரு படம் ‘ரமணா’.  Professer ரமணாவை அத்தனை எளிதாக சினிமா மாணவர்கள் மறந்துவிட மாட்டார்கள். கேப்டன் பிரபாகரனுக்குப் பிறகு, விஜயகாந்துக்கு கிடைத்த க்ளாசிக் சிக்ஸர் ‘ரமணா’ என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகிவிட்டன.

திரையுலகில் தொடர்ச்சியான வெற்றிகளைத் தரும் இயக்குநர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை எந்தப் படத்திலும் சோடை போகாமல் வெற்றியை மட்டும் தரும் இயக்குநர்கள் அரிதிலும் அரிது. அப்படியான ஒரு இயக்குநர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். இவருக்கு சினிமா என்ட்ரியாக அமைந்தது தினா படம். ‘தல’ பட்டத்தை அஜித்துக்கு கொடுத்து சினிமா ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தைப் பிடித்தார். இவரது இரண்டாவது ஹிட்  தான் ரமணா.

படத்தின் கதையே சுவாரஸ்யமான ஒன்று. ஊழல் உச்சாணிக்கொம்பில் இருந்த சமயம். ஊழலை ஒழிக்க புது ரூட்டை கண்டுபிடித்திருப்பார் ஹீரோ. அதாவது ஊழல்வாதிகள் 15 பேரை கடத்தி, அதில் ஒருவரைக் கொன்று மற்ற 14 பேரைத் திருத்துவது தான். ஊழலை ஒழிக்கும் ஹீரோ என டெம்ப்ளேட் கதைக்கு நடுவே இருந்த புது ட்ரீட்மென்ட் தான் படத்தின் ப்ளஸ்.

புள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்! #17YearsOfRamana

‘மன்னிப்பு.... தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை’, ‘யார்யா இவரு.. எனக்கே பார்க்கணும் போல இருக்கே’ என்பது போன்ற வசனங்கள் இன்றுமே மீம் டெம்ப்ளெட்டாக பறக்கிறது என்பதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்துக்கு யூகி சேது கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மாதவனைத்தான் அணுகினார் முருகதாஸ். பிறகு, யூகி சேது அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்தார்.

நரசிம்மா, வாஞ்சிநாதன், வல்லரசு என அதிரடியான ஹீரோவாக சமூக பிரச்னைகளை தட்டிக் கேட்பார் விஜய்காந்த். அவரை வைத்தே எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் சமூகப் பிரச்னையை ரமணாவில் பேசியிருப்பார் ஏ.ஆர்.முருகதாஸ். நிச்சயமாகவே முருகதாஸின் மாஸ்டர் பீஸ் என்றே ரமணாவை குறிப்பிடலாம்.

காட்சிக்குக் காட்சி படத்தில் வித்தியாசமான தகவல் இருக்கும். உதாரணமாக, மருத்துவமனைக் காட்சியை சொல்லலாம். சரியாகச் செயல்படாத அரசு மருத்துவமனைகளால், தனியார் மருத்துவமனைகள் எப்படியெல்லாம் பணத்தை கொள்ளையடிக்கின்றன என்பது நச்சென சொல்லப்பட்டிருக்கும். 17 வருடங்களுக்கு முன் அவர் எடுத்துச் சொன்ன இந்த நிலை இன்னும் மாறாமல் இருக்கிறது.

புள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்! #17YearsOfRamana

தன் இனம் மதம் இவற்றையெல்லாம் மறக்கும் ஒரே இடம் மருத்துவமனைதான். ஆனால் அந்த இடமே பணத்துக்காக விலை போனதாகச் சொல்லும் காட்சியை மறக்க முடியுமா..? இந்த மாதிரியான ஹாஸ்பிடல் சீட்டிங் காட்சிகள் ரமணாவிற்குப் பிறகே பல படங்களில் வந்தன.

தமிழ்நாட்டில், கல்வியை விட மதுபானத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது; அதனால் யாரெல்லாம் பாதிக்கப் படுகிறார்கள் என எளிமையாக ஆட்டோ டிரைவரை வசனம் பேசச் செய்து விளக்கியிருப்பார்.

“ஆளும் கட்சிக்காரனை அடிச்சா, ஆளும் கட்சிக்காரன் திரும்ப அடிப்பான்... எதிர்க் கட்சிக்காரனை அடிச்சா, எதிர்க்கட்சிக்காரன் திரும்ப அடிப்பான். ஸ்டூடண்ட் மேல கை வச்சா ஒட்டுமொத்த தமிழ்நாடே திரும்ப அடிக்கும்..." , "படிப்ப முடிச்சுட்டு வெளிய போற ஸ்டூடண்ட்ஸுக்கு புரொபசருங்க ஃபேர்வெல் டேல விடைகொடுத்து அனுப்புவாங்க. இப்போ முதல் தடவையா எல்லா ஸ்டூடண்ட்ன்ஸும் ஒரு புரொபசருக்கு விடை கொடுக்க வந்து இருக்குறது எனக்குப் பெருமையா இருக்கு..." இப்படியான பஞ்ச் வசனங்களும், புள்ளி விவர சீன்களும் படத்தை இன்னும் ஆச்சரியமாகப் பார்க்க வைத்திருக்கும்.

புள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்! #17YearsOfRamana

இளையராஜாவின் இசையில், “வானவில்லே...” அன்றைய காலத்தில் பலரின் இதய கீதம். விஜயகாந்தை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போராட்ட உணர்வை இசையால் ரசிகனின் நரம்பில் தெறிக்கவிட்டிருப்பார் இசைஞானி. இப்படி படத்தின் அத்தனை தரப்புமே க்ளாசிக் தான்.

'we are not sentimental ediot...' ஆனால், ஒரு படத்தை பிடித்துவிட்டால், யோசிக்காமல் கொண்டாடுவோம். கமர்ஷியல் படத்தில் சமூக கருத்தைப் பேசி, ரசிகனை கொண்டாட வைத்த படம் ‘ரமணா’. இன்னும் இந்தப் படத்தை நாம் பார்க்கலையே எனத் தோன்றினால், “யார்யா இவரு... எனக்கே பார்க்கணும் போல இருக்கே” எனப் போய் ரமணாவை பார்த்துவிடுங்கள்.

- சபரி

banner

Related Stories

Related Stories