சினிமா

உள்ளே சாமானியர்களின் அரசியல், வெளியே ரசிகர்கள் மீது தடியடி - விஜய் ‘பிகில்’ விழாவில் ரசிகர்கள் கண்ணீர் !

விஜய் சமூகத்துக்காகப் பேசிய நேரத்தில் நிகழ்வு நடைபெறும் ஹாலுக்கு வெளியே ரசிகர்கள் மீது போலிஸார் தடியடி நடத்திக்கொண்டிருந்தனர்.

உள்ளே சாமானியர்களின் அரசியல், வெளியே ரசிகர்கள் மீது தடியடி - விஜய் ‘பிகில்’ விழாவில் ரசிகர்கள் கண்ணீர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர்கள் தங்கள் படங்களில் வெளிப்படுத்தும் கருத்து ஒன்றாகவும், நிஜத்தில் வேறொன்றாகவுமே இருந்து வருகிறது. திரையில் ஒன்றை பேசி கைதட்டு வாங்கும் நடிகர்கள், களத்திற்கு ஒருபோதும் வருவதில்லை.

‘கபாலி’ திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார் ரஜினி. ஆனால், அவர் படத்தின் டிக்கெட்டுகள் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டபோது அது குறித்து அவர் குரல் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும், படத்தை சாமானியர்களே பார்க்க முடியாத நிலைதான் ஏற்பட்டது.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர்.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் சினிமா பிரபலங்கள் சிக்கித் தவித்தனர். வெளியே நின்றிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை கலைந்து செல்லுமாறு போலிசார் அறிவுறுத்தினர். ஆனால், தங்களிடம் பாஸ் இருப்பதாகக் கூறி விஜய் ரசிகர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால், போலிஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று, ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள். கைது செய்யவேண்டியவர்களை விட்டுவிட்டு பிரிண்ட் செய்தவரையும், லாரி ஓட்டுநரையும் கைது செய்துள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், அவரது ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் ரசிகர்கள் பல அடி உயர பேனர்களை அமைத்து வருகின்றனர். ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்யும் இந்தமாதிரியான சமூக சீர்கேடுகளை விஜய்யால் கண்டிப்புடன் தடுக்க இயலவில்லை.

மேலும், “என்னுடைய போஸ்டரை கிழித்தாலும் பரவாயில்லை, உடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், என் ரசிகன் மீது கை வைக்காதிங்க” எனப் பேசினார் விஜய். அதே நேரத்தில் நிகழ்வு நடைபெறும் ஹாலுக்கு வெளியே ரசிகர்கள் மீது போலிஸார் தடியடி நடத்திக்கொண்டிருந்தனர்.

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, இருக்கைகளை விட இருமடங்கு அதிகமான எண்ணிக்கையில் அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்துள்ளனர். கூட்டம் அதிகரித்ததையடுத்து கட்டுப்படுத்த முடியாததால் தடியடி நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.

சமூக பிரச்னைகள் குறித்து படங்களிலும், படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பேசும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள், அதிகமான விலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட முறைகேடாக விற்கப்பட்ட டிக்கெட்கள் குறித்தும், ரசிகர்கள் தாக்கப்பட்டது குறித்தும் ஏதாவது பேசினார்களா என்பதுதான் பொதுமக்களின் ஆதங்கம்.

banner

Related Stories

Related Stories