சினிமா

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan

எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் யுவன் ஸ்பெஷல் எனத் தோன்றியதன் கதை இருக்கும். அந்த ஸ்பெஷல் பற்றித்தான் அவரது பிறந்தநாளான இன்று பார்க்க இருக்கிறோம். What makes YUVAN so special?

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யுவன் ஷங்கர் ராஜா, இந்த நிமிடம் ஒரு மேடையில் தோன்றினாலும், ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக, ரசிகர்கள் கூடி ஆர்ப்பரிப்பதைக் காணமுடியும். அதற்காக, அந்தக் கூட்டம் மட்டும்தான் யுவனை ரசிக்கும், மற்றவர்களுக்கு யுவன் மீது எந்த ஆர்வமும் கிடையாது என்று எடுத்துக் கொள்ளமுடியுமா என்ன? அது முடியவே முடியாது. காரணம், இது எல்லோருக்குமே பிடிக்கும் என்று யுவனின் ஒரு பாடலை, ஒரு பின்னணி இசையை, யுவன் பாடலில் மட்டும் பிரத்யேகமாக ஒலித்த ஒரு குரலை... என ஒவ்வொருவரும் சொல்வதற்கு ஒன்றாவது இருந்துவிடும்.

யுவன் பிடிக்கும் என்பது அவர்களுக்கான ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாக இல்லை, நிஜமாகவே யுவன் இசையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும், அதன் மீது அழுத்தமான பிணைப்பு இருக்கும். அதற்குப் பின், எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் யுவன் ஸ்பெஷல் எனத் தோன்றியதன் கதை இருக்கும். அந்த ஸ்பெஷல் பற்றித்தான் அவரது பிறந்தநாளான இன்று பார்க்க இருக்கிறோம். What makes YUVAN so special?

யுவனுடைய தொடக்கம் பற்றி பலருக்கும் தெரிந்ததுதான். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இளையராஜாவிடம் `அரவிந்தன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கச் சொல்லிக் கேட்க வீட்டுக்கு செல்கிறார். அங்கு 16 வயது யுவன் “அப்பாவ படத்துக்கு புக் பண்ண வந்திருக்கீங்களா?. நான் வேணா உங்க படத்துக்கு மியூசிக் பண்ணித்தரவா?” என விளையாட்டாகக் கேட்க, சிவாவுக்கு ஒரு யோசனை. இளையராஜா வந்ததும், “அரவிந்தன்னு ஒரு படம் பண்றேன். அதுக்கு உங்க பையனை மியூசிக் பண்ண வைக்கலாம்னு யோசிக்கிறேன்” எனச் சொல்ல, “அவன் மியூசிக் கத்துக்கல. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும். நீ அவன அறிமுகப்படுத்தறதுக்காக கண்டிப்பா ஒரு நாள் பெருமைப்படுவ” என வாழ்த்தியிருக்கிறார் இளையராஜா.

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan


யுவனுக்கு முதல் பட வாய்ப்பு வருகிறது. ஆல்பத்தின் முதல் பாடலே ‘ஆல் தி பெஸ்ட்’. தன்னுடைய துவக்கத்துக்காக யுவன் யுவனுக்கே சொல்லிக் கொண்ட ‘ஆல் தி பெஸ்ட்’ அது. முதல் படத்திலேயே பெரிய கவனம் கிடைக்கவில்லைதான். ஆனால், ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் ட்ரையல்ஸ் பால் போல, இது யுவனின் ட்ரையல்ஸ் ஆல்பம் என சொல்லலாம். ஆனால், அந்த அஜாக்ரதை இல்லாமல் அந்தப் படத்தின் பாடல்கள் இருந்ததுதான் ஸ்பெஷல், ஈரநிலா பாடல் ஒன்றைக் கேட்டாலே அதைப் புரிந்து கொள்ளமுடியும்.

வேலை, கல்யாண கலாட்டா படங்களுக்குப் பிறகு வந்த `பூவெல்லாம் கேட்டுப்பார்’ எல்லோரையும் கவனிக்க வைத்த ஆல்பம். முன்பு சொன்ன ட்ரையல்ஸ் எல்லாம் இங்கு கை கொடுத்து 8 பாடல்களும் கச்சிதமான வேலைப்பாடுகளுடன் உருவாகியிருக்கும். சிபிஐ எங்கேவில் இருக்கும் துள்ளல், இரவா பகலாவில் இருக்கும் உருக்கம், சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமேவின் இதம் என ஒவ்வொரு பாடலுக்குள்ளும் பலம் இருக்கும்.

ஸ்பாட்டிஃபை, ராகா, சாவன் மாதிரியான மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் நல்ல க்வாலிட்டியில் இந்த ஆல்பத்தை கேட்டுப்பாருங்கள். ஒரு பாடலில் அரேஞ்மெண்ட் எவ்வளவு முக்கியம் என்பது யுவனுக்கு அப்போதே புரிந்திருக்கிறது என்பது விளங்கும். பாடல்களுக்குத் தேர்ந்தெடுத்த குரல்கள், வாத்தியம், இடையிசை முதல்... சென்னொரிட்டா பாடல் முடிவதற்கு முன்பு வரும் pause வரை பலவற்றிலும் யுவன் தேர்ச்சியடைந்திருப்பது தெரியும். இந்த இடத்திலிருந்து யுவனை கவனிக்கத் துவங்கிய பலரும் பின்னாளில் அவரின் பெயரிட்ட அத்தனை படங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக்கத் துவங்கியிருப்பார்கள். யுவனின் ரசிகர்கள் உருவாகத் துவங்கிய புள்ளியும் இதுதான்.

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan

இதற்குப் பிறகு வந்த, உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி படங்களின் பாடல்களும் நல்ல ஹிட். ஆனால், முன்பு இல்லாத அளவுக்கான ஒரு வரவேற்பைப் பெற்றுத்தந்தது தீனா. யுவனுக்கான மாஸ் இன்ட்ரோ இங்கிருந்து துவங்கியது. பாடல்கள் எப்போதும் போல ஹிட். ஆனால், அஜித் என்ற மாஸ் ஹீரோ, பக்கா கமர்ஷியல் படம் என்பது யுவனின் பரிட்சயத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்த்தது. ஒன்று கவனித்துப் பார்த்தால் கேசட்டில் பாடல் கேட்பது குறையும் காலகட்டம் துவங்கி, சிடி, எம்.பி3 ஃபைல் இப்போது பிரபலமாகிவிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வரை யுவன் பயணித்து இன்றும் ரௌடி பேபி என ட்ரெண்டிங் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சரி, இதெல்லாம்தான் யுவன் ஸ்பெஷல் என்பதன் காரணமா? நிச்சயம் இல்லை. ஒருவர் உருவாக நிறைய கூடிவரவேண்டி இருக்கும். அதுபோன்ற எந்த ஒத்துழைப்பும் யுவனுக்கு நடக்கவில்லை. முதல் படத்திலேயே பெரிய வெளிச்சம் அமையவில்லை, மிகப்பெரிய ஹீரோ படமோ, பெரிய இயக்குநர் படமோ உடனடியாக கிடைக்கவில்லை. இதைத் தாண்டி அவர் அறிமுகமான சூழல். யுவன் இசையமைப்பாளராக அறிமுகமான வருடம் 1997.

அதாவது 90களின் இறுதியான அந்த நேரத்தில், இளையராஜா, காதலுக்கு மரியாதை, குரு என சீனியர் இயக்குநர்களுடனும்... சேது, ஹவுஸ்ஃபுல் என இளம் இயக்குநர்களுடனும் இணைந்து தன்னுடைய ராஜாங்கத்தை தொடர்ந்து கொண்டிருந்த நேரம். இன்னொரு பக்கம் ரோஜா மூலம் அறிமுகமாகி, தமிழ் மற்றும் இந்தியில் பெரிய பெரிய படங்களுக்கு இசையமைத்து மிகப்பெரிய அலையை உண்டாக்கிக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். போக, தேவா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற சீனியர்களும் ஃபார்மில் இருந்தார்கள்.

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan

இந்தச் சூழலில், இளையராஜா மகன் என்கிற ஒரே பிடிமானத்துடன் அறிமுகமாகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இத்தனை பேருக்கும் இடையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதும், அது சரியான இடத்துக்குப் போய்ச் சேர்வதும் சிரமமான காரியம். ஆனால், அது யுவனால் முடிந்தது. அதிலும் அவர் ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை ஸ்பெஷலாக எடுத்துக் கொள்ளாமல் எப்படி முடியும்?

இந்த வெற்றிக்குப் பிரதானமான காரணங்களாக இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், அவரைக் கொண்டாடும் ரசிகர்கள் எனப் பலரும் இருக்கலாம். அதைத் தாண்டி இப்படி ஒரு இணைப்பு யுவனுடன் நமக்கு ஏற்படக் காரணமெல்லாம் Soulful tunes. யுவன் தன் பாடல்களுக்குள் வைத்திருந்த ஜீவன். அவர் பாடல்களுக்குள் உயிர் இருக்கிறது எனச் சொல்வது கொஞ்சம் சினிமாத்தனமாகவோ, மிகைப்படுத்தலாகவோ கூட தோன்றலாம். ஆனால், அப்படி இருக்கிற நிஜத்தை சொல்லித்தான் தீர வேண்டும். ஒரு பாடலுக்குள் யுவன் என்னவெல்லாம் செய்துவிடுகிறார் என நமக்கு நேரும் ஆச்சர்யம்தான் makes YUVAN so special எனத் தோன்றுகிறது.

முன்பு சொன்ன அந்த soul ஒரு மெலடியிலோ, காதல் தோல்வி பாடலிலோ, அம்மா பற்றிய பாடலிலோ கொண்டு வருவதை விட, ஒரு கொண்டாட்டமான பாடலுக்குள்ளும் கொண்டுவருவது யுவனால் முடிந்ததுதான் ஸ்வீட் சர்ப்ரைஸ். ஹீரோ பில்டப், காதல், அம்மா, மரணம் போன்ற விஷயங்களுக்கு இன்பில்டாகவே ஒரு உணர்வு மேலிடும், பின்பு அதை இசை கொண்டு இன்னும் கொஞ்சம் மேலே எடுத்து வந்தால் போதும். ஆனால், ஒரு துள்ளலான பாடலுக்கான எனர்ஜியை, ஜீவனுள்ள இசையால் மட்டுமே கொடுக்க முடியும். யுவனிடமிருந்து அப்படி வந்த பாடல்களை எத்தனையோ உண்டு.

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan


துள்ளுவதோ இளமையின் நெருப்பு கூத்தடிக்குது பாடல் இப்போது கேட்டாலும் புத்தம் புதிது போல் இருப்பது எப்படி? அறிந்தும் அறியாமலும் படத்தின் சில் சில் மழையே பாடலின் அழகு குறையாமல் இருப்பது எப்படி? புதுப்பேட்டையில் எங்க ஏரியா தரும் எனர்ஜி இன்றும் இருப்பது எப்படி? பருத்திவீரனில் வரும் ஊரோரம் புளியமரம், சென்னை 28ன் ஜல்சா, கோவாவின் டைட்டில் ட்ராக், வானம் படத்தின் நோ மணி நோ ஹனி, விளையாடு மங்காத்தா, பிரியாணியின் Na Na Na Na, வை ராஜா வையில் பூக்கமழ், சென்னை 28 IIவில் வரும் பாய்ஸ் ஆர் பேக் என அத்தனை பாடல்களும் என்றுமே இளமை குறையாமல் இருக்கும்.

யுவன் + இயக்குநர்கள் காம்போ. இந்த லிஸ்டில் மிகவும் கொண்டாடப்படுவது செல்வராகவன், வெங்கட்பிரபு, ராம், விஷ்ணுவர்தன், அமீர். இந்த மாதிரி சில இயக்குநர்கள் எல்லா இசையமைப்பாளருக்கும் கிடைப்பது அவசியம். காரணம் அவர்களிடம் கிடைக்கும் சௌகர்யம், ஒரு கலைஞனின் மேட்னெஸை வெளியே எடுத்து வரும். கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு, வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி போன்ற பாடல்களை எடுத்துக் கேளுங்கள், நெஞ்சம் மறப்பதில்லையின் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா கேளுங்கள், பிரியாணியில் Run For Your Life கேளுங்கள், சர்வம் படத்தில் நீதானே கேளுங்கள், ஆதிபகவன் மொத்த ஆல்பத்தையும் கேளுங்கள். யுவனின் மேட்னஸ் புரியும்.

பின்னணி இசையில் யுவன் செய்துவைத்திருப்பதை எல்லாம் தொகுத்து தனியாகப் பேசலாம். பில்லா, மங்காத்தா எல்லாம் எதற்கு, சாதாரண AAA படத்தின், சிம்பு இன்ட்ரோவுக்கே வெறித்தனமாக ஸ்கோர் கொடுத்தவர். அதுபற்றிப் பேச ஒரு அரைமணிநேரம் போதுமானதாக இருக்காது. எனவே இக்கட்டுரையின் சாரமான ஸ்பெஷலைப் பற்றியே தொடரலாம்.

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan

சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்வதை தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது யுவன்தான் என்ற ஒரு தகவல் உண்டு. புதிதாக யுவன் அறிமுகப்படுத்தியதை விட, எடுத்த வேலையை மிக பக்காவாக செய்த விதத்தில் யுவனை நினைத்து நாம் பெருமைப்படலாம். உதாரணமாக யுவன் மாதிரி வேறு யாராலும் ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்யவே முடிந்ததில்லை. கண்டநாள் முதல் படத்தில் கர்நாடக சங்கீத பாடலான கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடியை ரீமேக் செய்தது ஒரு பக்கம் என்றால், தாமிரபரணியில் கற்பூரநாயகியே பாடலை காதல் பாடலாக உருவாக்கியிருந்தது இன்னொரு வகை.

தவிர ஏற்கெனவே ஹிட்டான மை நேம் இஸ் பில்லா, நலம்தானா, வெச்சுக்கவா உன்ன மட்டும், தில்லு முல்லு போன்ற பாடல்களை யுவன் ரீமிக்ஸ் செய்திருந்த விதம் மீண்டும் ஒருமுறை அவற்றை எல்லாம் சார்ட்பஸ்டர் பாடல்களாக மாற்றியது. கூடவே படங்களுக்கு என பக்காவான தீம் ட்ராக் உருவாக்கியதிலும் யுவனின் தனித்தன்மை இருக்கிறது. பில்லா, மங்காத்தா, புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வித்தியாசமான குரல்களைப் பயன்படுத்துவதிலும் யுவன் மாஸ் காட்டுவார். புதிது என்றால் அது மிக ரம்மியமான குரல் என்ற மாதிரி கிடையாது. அந்தப் பாடலுக்கு அந்தக் குரல் பயன்படுத்தியது மிக வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும். உதாரணமாக தனுஷ் பாடகராக அறிமுகமான நாட்டுச் சரக்கு சொல்லலாம். இன்னொன்றும் இருக்கிறது, வேலை படத்தில் நடிகர் விஜய், பிரேம்ஜியுடன் சேர்ந்து நாசரின் குரலையும் பயன்படுத்தி உருவாக்கிய காலத்துக்கேத்த ஒரு கானா பாடல். நாசர் குரலில் ஒரு பாடலை யோசிக்க முடிகிறதா?

“அவன் மியூசிக் கத்துக்கல.. ஆனா, அவனால மியூசிக் பண்ண முடியும்!” - யுவன் ஏன் இத்தனை ஸ்பெஷல்? #HBDYuvan

இத்தனை கொண்டாட்டத்தையும், காதலையும், நட்பையும், அமைதியையும்... இசையையும் தந்த யுவன், நமக்கு ஸ்பெஷல் இல்லாமல் வேறென்ன? காய்ச்சலுக்கு மாத்திரை மாதிரி, காதலியின் நினைவுகளை மீட்டெடுக்க ஒரு பறவையே எங்கு இருக்கிறாய் உதவத்தான் செய்கிறது, `ஒருநாளில் வாழ்க்கை இங்கே' துளி நம்பிக்கையை வீசத்தான் செய்கிறது... எப்போது சேர்வுற்றாலும் I'll be there for you என்ற யுவனின் குரல் கேட்டேதான் தீருகிறது.

தொடர்ந்து அடுத்தும் இரும்புத்திரை 2, குருதி ஆட்டம், ஹீரோ என யுவன் கையில் எடுத்திருக்கும் படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது. கூடவே விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கும் Shershaah படத்துக்கு யுவன் இசையமைக்கலாம் என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. இனி தொடர இருக்கும் யுவனின் இசைப்பயணமும் நமக்கு நிறைய ஆச்சர்யங்களையும், நல்ல இசையையும் கொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!

banner

Related Stories

Related Stories