
நடிகர் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படத்தை தயாரித்திருக்கிறார்.
படம் வெளியான நாள் தொடங்கி அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் நேர்கொண்ட பார்வை படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல திரையரங்கமான லீ கிராண்ட் ரெக்ஸில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரையரங்கில் படங்கள் வெளியாகுவதே கௌரவமாக பார்க்கப்படுகிறது. இந்த திரையரங்கில் 'சர்கார்', 'பேட்ட', 'விஸ்வாசம்' என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்பட்டன.
இந்நிலையில், படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் திரையில் அஜித் தோன்றும் போது ஸ்க்ரீனில் கை வைத்து கொண்டாடியுள்ளனர். இதனால் ஸ்க்ரீன் சேதமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து திரையை மாற்ற 7000 யூரோக்களை (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈடாக வினியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. அவர்களும் அந்த அபராதத் தொகையைச் செலுத்த சம்மதித்துள்ளனர். மேலும், இனி லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் ரசிகர்களின் இந்த செயலுக்கு பிரான்ஸ் வினியோகஸ்தர்கள் அமைப்பான EOY என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளது.








