சினிமா

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் !

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய திரைப்படமான ‘ஊமை விழிகள்’ திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உலகத் தரத்தில், தமிழில் ஒரு மர்ம சினிமா - ஊமை விழிகள். ஆம், இந்திய சினிமா உலகத்தை திரும்பி பார்க்க வைத்த கலைப்புரட்சி 1986 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ந் தேதி தமிழ்நாட்டில் நடந்தது. ‘ஊமை விழிகள்’ எனும் சினிமா தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் திரையிடப்பட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அதிசயம் நடந்தது.

அதுவரை தமிழ் சினிமா பேசிய காதல், பழி வாங்கல், குடும்ப செண்டிமெண்ட்களை தாண்டி இந்தப் படம் ஒரு புதிய தளத்தை ரசிகர்களுக்கு அமைத்துக் கொடுத்தது. மிகப்பெரிய வெற்றி அடைந்த, இந்த திரைப்படத்தை எடுத்தவர்கள் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள். புதிய சிந்தனையோடும், புதிய வேகத்தோடு, புதிய கதைக் களத்தோடும் ரசிகர்களின் உள்ளங்களை களவாடியது ‘ஊமை விழிகள்’.

ஆபாவாணன், அரவிந்தராஜ், ரமேஷ் உள்ளிட்ட சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சினிமாஸ்கோப் சித்திரமாக வெளிவந்து , முதல்நாள் காட்சியிலேயே இந்த படம் , நிச்சயம் வெள்ளிவிழா காணும் என்று அடித்து சொல்லப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊமை விழிகள், ஊமை விழிகள் என்ற வார்த்தைகள் எதிரொலிக்க தொடங்கி வெள்ளிவிழாவை அட்டகாசமாக கொண்டாடியது இந்தப்படம்.

‘ஊமை விழிகள்’ செய்தித்தாள் விளம்பரம்
‘ஊமை விழிகள்’ செய்தித்தாள் விளம்பரம்

ஊமை விழிகள் எத்தகைய உணர்வுகளை ரசிகர்களிடம் தோற்றுவித்தது? இந்த படம் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன? என்று பார்த்தால் ஊமை விழிகளில் அத்தனை அம்சங்களும் முத்திரை பதிப்பவைதான்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சோழா பிக்னிக் வில்லேஜ் என்கிற ரிசார்ட். ( இதன் உரிமையாளர் பி.ஆர்.கே என்ற கதாபாத்திரத்தில் அந்தக்கால கதாநாயகன் - நடிகர் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்) இங்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் பத்திரிகையாளர் ராஜா (நடிகர் சந்திரசேகர்) அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க தொடங்குகிறார். ஆனால், அவர் கொல்லப்படுகிறார்.

'தினமுரசு' பத்திரிகை உரிமையாளர் சந்திரன் (ஜெய்சங்கர்), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளன் (விஜயகாந்த்), பத்திரிகையாளர் விஜய் (நடிகர் அருண்பாண்டியன்) ஆகியோர் சோழா பிக்னிக் வில்லேஜ் மர்மங்களையும், இங்கு நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் இவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பதே கதை.

ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் ‘திக்..திக்’ என ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கு வரவேண்டிய நிலையை படத்தின் இயக்குநர் ஏற்படுத்தியிருப்பார். படத்தின் பின்னணி இசையும் ( ஆபாவாணன், மனோஜ் கியான்), பாடல்களும் (ஆபாவாணன்) படத்தை நகர்த்திக் கொண்டே செல்லும் ஒரு பறவை வானில் வட்டமிட்டு பறப்பது போல.. அவ்வளவு அற்புதம். ராத்திரி நேரத்து பூஜையில்... மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று...தோல்வி நிலையென நினைத்தால்... போன்ற பாடல்கள் புதிய இசையோடு புதுவித உணர்வை ரசிகர்களுக்கு அளித்தன.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் !

படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு கூடுதல் சிறப்பு. ஒரு காட்சியில் கார்கள் அணிவகுத்து வரும் போது, விளக்குகள் மட்டும் மின்மினிப் பூச்சிகளைப் போல காண்பிக்கும் போது... ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க சிலமணித்துளிகள் பிடிக்கும்.

லைட்டிங் என்பதை எப்படி எல்லாம் புதுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதைவிட சிறப்பு. கதை மாந்தர்களை அறிமுகப்படுத்துவதிலும், திரையில் உலவவிடுவதிலும், வசன உச்சரிப்பிலும் இயக்குநர் கண்ட வெற்றிக்கு இப்படம் ஓர் சாட்சி.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் !

படத்தில் வரும் ஒரு மர்ம கிழவியை காட்டும் காட்சிகளில், திக்..திக்..திகில் என ஆல்பிரட் இட்ச்காக் படங்களை பார்ப்பது போன்ற ஒருவித பீதி மனதை தொற்றிக் கொள்வதை தவிர்க்கவே முடியாது.

விஜயகாந்த், சரிதா, கார்த்திக், சசிகலா, அருண்பாண்டியன், விசு, சந்திரசேகர், இளவரசி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், செந்தில், ஸ்ரீவித்யா, மலேசியா வாசுதேவன், மீசை முருகேஷ் என நட்சத்திர பட்டாளமே தங்கள் திறமைகளை கொட்டித் தீர்த்திருக்கும் படம் தான்‘ஊமை விழிகள்’.

இந்த படம் வெளிவந்த சமயத்தில் மிகப் பிரபலமான ஹீரோவாக இருந்த விஜயகாந்த், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு உதவுவதற்காக சம்பளமே இல்லாமல் நடித்துக்கொடுத்தார். அருண்பாண்டியன் அறிமுகம் , ரவிச்சந்திரனின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கம் எல்லாவற்றிற்கும் வித்திட்டது இந்த ‘ஊமை விழிகள்’.

ஊமை விழிகள் வில்லனாக ரவிச்சந்திரன்...
ஊமை விழிகள் வில்லனாக ரவிச்சந்திரன்...

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் சாதனை திரைப்படம், ‘ஊமை விழிகள்’ ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமல்லாமல் இசையிலும், ஒலி-ஒளிப்பதிவிலும் ஒரு முன்மாதிரி காவியமான இந்த திரைப்படத்திற்கு தற்போது வயது 33 ஆனாலும், தமிழ் தொலைகாட்சிகளில் திரையிடும் போது, ஊமை விழிகள் படத்திற்கு ‘டி.ஆர்.பி.ரேட்டிங் நெம்பர் 1’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தேடித்தந்த ஊமை விழிகள் ரீமேக் ஆகிறது... ஆம், சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் வெற்றியை அளித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ஊமை விழிகள் படத்தினை 33 வருடங்கள் கழித்து தமிழிலேயே ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாட்டாக்குடி இரணியன் படத்தை எடுத்த இயக்குநர் வின்செண்ட் செல்வா புதிய ‘ஊமை விழிகள்’ படத்தினை இயக்கக் போவதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories