சினிமா

மிதாலி ராஜ் பயோபிக் டைட்டில் அறிவிப்பு - ‘கவர் ட்ரைவ்’ ஆடத் தயாராகும் டாப்ஸி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிதாலி ராஜ் பயோபிக் டைட்டில் அறிவிப்பு - ‘கவர் ட்ரைவ்’ ஆடத் தயாராகும் டாப்ஸி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் திகழ்ந்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இவர் 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,720 ரன்களை சேர்த்த பெருமையை பெற்றுள்ளார்.

மிதாலி ராஜுக்கு என இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளையும் மிதாலி வென்றுள்ளார்.

தொடக்க காலத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி விளையாடுவதற்கு ஏகப்பட்ட தடைகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் திறம்பட எதிர்கொண்டு இன்று பலருக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார் மிதாலி ராஜ்.

மிதாலி ராஜ் பயோபிக் டைட்டில் அறிவிப்பு - ‘கவர் ட்ரைவ்’ ஆடத் தயாராகும் டாப்ஸி!

இந்த நிலையில், மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலஞ்சிங்கான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை டாப்ஸி, மிதாலியின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள டாப்ஸி, தன் வாழ்நாளில் ஒருபோதும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியதில்லை என்றும், மிதாலியின் பயோபிக்கில் நடிப்பதை மிகவும் சவாலானதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மிதாலி விளையாடிய போட்டிகளின் வீடியோக்களை பார்த்து தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

போராட்டங்கள் நிறைந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் இதர அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில், இப்படத்திற்கு ‘சபாஷ் மிது’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வயாகாம் 18 தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மிதாலியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தொடங்கியது.

மேலும், மிதாலி ராஜுக்கு வாழ்த்து கூறும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை டாப்ஸி, “பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் மிதாலி ராஜ்! பல்வேறு வகையில், பல வழிகளில் எங்கள் அனைவரையும் நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.”

“உங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்த பயோபிக்கில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்திருப்பது பெருமையடைய வைத்துள்ளது. உங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு அளிப்பது என தெரியவில்லை. ஆனால், நிச்சயம் ‘சபாஷ் மிது’வில் உங்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரதிபலிப்பேன் என உறுதியளிக்கிறேம். கவர் ட்ரைவ் கற்பதற்கு தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories