சினிமா

“ஆமா.. இந்தப் படத்துக்கு எதுக்கு விக்ரம்?” : ‘கடாரம் கொண்டான்’ விமர்சனம்!

ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம், அபிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்திருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படம் எப்படி இருக்கிறது?

“ஆமா.. இந்தப் படத்துக்கு எதுக்கு விக்ரம்?” : ‘கடாரம் கொண்டான்’ விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிணையாக வைக்கப்பட்டிருக்கும் நாயகியைக் காப்பாற்றச் செல்லும் நாயகனின் கதையை, பரபப்பான ஆக்‌ஷனுடன் சொல்லியிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. விக்ரம், அபிஹாசன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் ராஜேஷ் செல்வா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மலேசியாவில் நடக்கும் கதை. உடலில் காயங்களுடன் பில்டிங்கிருந்து குதித்து தப்பிக்கும் விக்ரமை, டிராஃபிக் போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கிறது. காவல்துறை அதிகாரியாக இருந்து, குற்றச்செயலில் ஈடுபடுபவர் விக்ரம் என்பது பின்னர் தெரிகிறது. மருத்துவமனையில் விக்ரமை கொலை செய்ய ஒரு டீம் இறங்குகிறது. அதை மருத்துவரான அபிஹாசன் தடுக்கிறார். விளைவு, மனைவி அக்‌ஷரா ஹாசனை ஒரு டீம் கடத்திச் சென்றுவிடுகிறது. மனைவியை விடுவிப்பதற்காக விக்ரமை தப்பிக்கவிடுகிறார் அபி. போலீஸால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவே மாறுகிறார்கள் அபியும், விக்ரமும். ஏன் விக்ரமை போலீஸ் தேடுகிறது, அக்‌ஷராவை அபிஹாசன் மீட்டாரா என்பது மீதிக்கதை.

படத்தின் லீட் ரோல் அபிஹாசனுக்கும், அக்‌ஷரா ஹாசனுக்கும் தான். விக்ரமுடனான ஆக்‌ஷன் டிராவல், அக்‌ஷராவுடனான காதல் காட்சிகள் என படம் முழுக்க வரும் அபிஹாசன் நடிப்பில் கச்சிதமாக நிறைகிறார். எந்தக் குறையும் இல்லை. நிறைமாத கர்ப்பிணியாக அக்‌ஷராவின் நடிப்பும் ஓகே.

“ஆமா.. இந்தப் படத்துக்கு எதுக்கு விக்ரம்?” : ‘கடாரம் கொண்டான்’ விமர்சனம்!

படத்தின் ஓட்ட நேரமும் குறைவு, அதிலும் குறைவான காட்சிகளிலேயே வந்துபோகிறார் விக்ரம். படத்தில் இவருக்கு வசனமும் குறைவு என்பது மற்றுமொறு கொசுறு தகவல். ஆனால் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. நச் நடிப்புடன் மனதில் நிறைகிறார் விக்ரம். விக்ரமின் பின்கதை என்ன, ஏன் போலீஸ் தேடுகிறது, விக்ரமை ஏன் பிரச்னையில் சிக்கவைக்க வேண்டும் என்பவை குறித்துப் படத்தில் தெளிவாக சொல்லவில்லை.

படத்தில் விக்ரம் கேரக்டரில் எந்த நடிகரையும் நடிக்க வைத்திருக்கலாம். இதற்கு ஏன் விக்ரம், என்கிற கேள்வி எழாமல் இல்லை. விக்ரம் நல்ல நடிகர் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்கிறார். ஆனால் கதைத் தேர்விலும் கில்லி என்பதை இனி விக்ரம் நிரூபித்தாக வேண்டும்.

கமல் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ் செல்வா. ‘ஸ்லீப்லெஸ் நைட்’ எனும் பிரெஞ்ச் படத்தின் ரீமேக் தான் தூங்காவனம். இந்த முறை,   ‘பாயிண்ட் பிளாங்க்’ எனும் பிரெஞ்ச் படத்தை கடாரம் கொண்டானாக கொண்டு வந்திருக்கிறார் ராஜேஷ்.

பைக் சேசிங், எதிர்பாராத ட்விஸ்ட், ஆக்‌ஷன் ப்ளாக் என ஹாலிவுட் தரத்தில் ஒரு   படத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், திரைக்கதையில் வலு இல்லை. கதை சொன்ன விதத்தில் தெளிவு இல்லை என்பவை படத்துக்கு மைனஸாகிவிடுகிறது. முன்பாதியில் விறுவிறுப்பாகச் செல்லும் படம், இடைவேளைக்குப் பிறகு சில குழப்பங்களுடன் நகர்கிறது.

“ஆமா.. இந்தப் படத்துக்கு எதுக்கு விக்ரம்?” : ‘கடாரம் கொண்டான்’ விமர்சனம்!

போலீஸ் அதிகாரியாக வரும் லீனா, விகாஸ், செர்ரி மர்டியா என நடிகர்கள் படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஹீரோவுக்கு ஓப்பனிங் பாடல் இல்லை, சென்டிமென்ட் இல்லை, விக்ரமுக்கு ஜோடி இல்லை என க்ளிஷேவான பல இல்லைகள் படத்தில் இல்லை.

விக்ரமின் இந்தக் காட்சி இதில் புதிதாக இருந்தது என்று கூற படத்தில் ஏதும் இல்லை என்பது வருத்தம். டெக்னிக்கலாக படம் நச். ஸ்ரீனிவாஸ் குப்தாவின் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்-ன் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றிருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக படத்தை மனதில் நிறுத்துகிறது. ஸ்ருதியின் குரலில் கடாரம் கொண்டானும், சித் குரலில் தாரமே பாடலும் படத்தின் மற்றுமொரு ப்ளஸ்.

மீண்டும் ஒரு தூங்காவனமாகவே இந்தப் படம் இருப்பதை தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும் ஒரு டீசெண்டான த்ரில்லர் படம் தான். விக்ரம் ரசிகர்கள் கடாரம் கொண்டானை ரசிக்கலாம்.

banner

Related Stories

Related Stories