சினிமா

‘வெயில்’ தந்த இசை ‘டார்லிங்’குக்கு ஹேப்பி பர்த்டே! #HBDGVPrakash

ஜி.வி.பிரகாஷ் தன் காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடிய அத்தனை டூயட்களும் மனதையும், ப்ளேலிஸ்டையும் எப்போதும் நிரப்புபவை. இவரது குரல் மென்மைக்கு மேல் போர்த்தப்படும் மெல்லிய பட்டுப்புடவை.

‘வெயில்’ தந்த இசை ‘டார்லிங்’குக்கு ஹேப்பி பர்த்டே! #HBDGVPrakash
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களில் குழந்தைக் குரலாக அறிமுகமாகி, சமீபத்திய மெர்சல் அரசனில் தெறித்த குரல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாஷுடையது.

தனது 31 வருட வாழ்க்கையில் விரைவில் வெளியாகவிருக்கும் 'அசுரன்' இசையமைப்பாளாராக இவருக்கு 61-வது திரைப்படம்.

இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் மிளிர்ந்த ஜி.வி.பிரகாஷ் டார்லிங்கில் தொடங்கி ரஹ்மான் இசையமைத்த ‘சர்வம் தாளமயம்’, இளையராஜா இசையமைத்த ‘நாச்சியார்’ வரையில் பல படங்களில் நடிகராகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அதற்கு எடுத்துக்காட்டு, இவர் நடிப்பில் எட்டு திரைப்படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.

‘வெயில்’ தந்த இசை ‘டார்லிங்’குக்கு ஹேப்பி பர்த்டே! #HBDGVPrakash

சரியாகச் சொன்னால் ஜி.வி.பிரகாஷுக்குள்ளிருந்த இசையாற்றலை இனம்கண்டதில் ரஹ்மான் முதல் இடத்தில் இருப்பார். ஜிக்குபுக்கு ரயில் தொடங்கி, அழகான ராட்சஷி வரை இடையிடையில் ஒலித்த ஜி.வி.பிரகாஷின் மழலைக்குரலை ஒரு இசைக்கருவியைப் போலவே பயன்படுத்தியிருப்பார் ரஹ்மான். அதே ரஹ்மான் ‘மெர்சல்’ படத்திற்காக இவரைப் பாடவைத்த மெர்சல் அரசனின் வேகம் ஜி.வி.பிரகாஷின்ன் குரலிற்கு புது அடையாளத்தைத் தந்தது.

இதைப்போலவே எஸ்.ஏ.ராஜ்குமார் தொடங்கி ஹாரிஸ் ஜெயராஜ், என்.ஆர்.ரகுநந்தன், பிரேம்ஜி அமரன் வரை பல இசையமைப்பாளர்களுக்குப் பாடியிருக்கிறார். இது அத்தனையும் பெரும் வெற்றிபெற்றவை. குறிப்பாக ரகுநந்தன் அவருடைய பெரும்பாலான படங்களில் ஏதேனும் ஒரு பாடலையேனும் ஜி.வி.பி-யின் குரலால் நிரப்புவார். அதில் மெகாஹிட் அடித்தது 'கோணக் கொண்டக்காரி'.

‘வெயில்’ தந்த இசை ‘டார்லிங்’குக்கு ஹேப்பி பர்த்டே! #HBDGVPrakash

மற்ற இசையமைப்பாளர்களுக்கு பாடியதைப்போல தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்காக ஒரு மெலடியை விட்டுவைத்திருப்பார். அதிலும் தன் காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து இவர் பாடிய அத்தனை டூயட்களும் மனதையும், ப்ளேலிஸ்டையும் எப்போதும் நிரப்புபவை. இவரது குரல் மென்மைக்கு மேல் போர்த்தப்படும் மெல்லிய பட்டுப்புடவை.

பாடகராக அறிமுகமாகி, பின் நடிகராகவும் ஆகிவிட்டாலும் கூட இசையமைப்பாளர் என்ற அடையாளத்தில்தான் ஜி.வி.பிரகாஷ் முழுமை பெறுகிறார். இதற்குக் காரணம் இவர் நன்றாக இசையமைத்தது மட்டுமல்ல, ஒரு தலைமுறைக்கான இயக்குனர்கள் அத்தனை பேரின் திரைப்படங்களும் இவர் இசையையே தனக்கான அடையாளமாக ஆக்கிக்கொண்டது.

வெற்றிமாறன், செல்வராகவன், வசந்தபாலன், ஏ.எல்.விஜய், அட்லீ என இந்த லிஸ்ட் இன்னும் நீள்கிறது. அதிலும் வெற்றிமாறன் - ஜி.வி.பி இணை தமிழ் சினிமாவின் பிண்ணணி இசைக்கான நோட்ஸ்களை மாற்றி எழுதியது. வெற்றிமாறன் தன் திரைமொழியின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற பரிசோதனை முயற்சிகள் செய்தபோது, அதற்கு மிகச்சரியாக துணை நின்றவர் ஜி.வி.பிரகாஷ் கொஞ்சம் தவறினாலும் ஆவணப்படம் போன்ற உணர்வைக் கொடுத்துவிடக்கூடிய வெற்றிமாறனின் காட்சிகளுக்கு, சினிமாவைச் சரியாகச் சேர்த்தது ஜி.வி.பிரகாஷின் இசை.

‘வெயில்’ தந்த இசை ‘டார்லிங்’குக்கு ஹேப்பி பர்த்டே! #HBDGVPrakash

இதற்கு இணையான இன்னொரு கூட்டணி வசந்தபாலன் - ஜி.வி.பி கூட்டணி. ‘வெயில்’ ஜி.வி.பி-யின் அறிமுகப் படம். ஆனால் அதன் பாடல்கள் 50 படங்களைக் கடந்த ஒரு இசையமைப்பாளருக்கு இணையானதாக அமைந்தது. வெயிலோடு விளையாடி பாடல் ஒரு நிலத்தின் அடையாள இசை. அருவா மினுமினுங்க பாடலில் ஜி.வி.பிரகாஷ் பதிவு செய்தது பலதரப்பட்ட கிராமிய இசைகளின் தொகுப்பு.

இந்த இருவர் கூட்டணி அடுத்து உருவாக்கிய ‘அங்காடித் தெரு’ படத்தின் பாடல்களும் தரமானதாக இருந்தது. அதிலும் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடல் தமிழ் மண்ணின் அத்தனை பாமர காதல்களுக்குமான தேசிய கீதமாகிப் போனது. இந்த இடத்தில் இன்னொரு கூட்டணியையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதுதான் நா.முத்துக்குமார் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி. நா.முத்துக்குமார் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு சொல்ல ஆசைப்பட்ட பல செல்லச் செய்திகளுக்கு ஜி.வி.பிரகாஷின் இசையை பயன்படுத்திக்கொண்டார்.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் என்றென்றைக்கும் மறக்கமுடியாத இரண்டு பொக்கிஷங்களாக மாறிப்போனது செல்வராகவனோடு இணைந்து ஜி.வி.பிரகாஷ் தந்த ‘மயக்கம் என்ன’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ‘மயக்கம் என்ன’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் தந்த பிண்ணணி இசையும், பாடல்களும் செல்வராகவன் படங்களுக்கான ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டியும் படத்தைக் கொண்டுசேர்த்தது. ஒரு வெற்றிக்காக போராடுபவனின் வாழ்க்கையில் இருக்கும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்த வேண்டிய இசையைக்கோரி நின்றபோது அதை மிக அழகாகத் தந்தார் ஜி.வி.பிரகாஷ்.

இதே கூட்டணியில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’, தமிழ் சினிமாவிற்கே புதிதான ஒரு இசை ரசனையைக் கொண்டிருந்தது. அதுவரையில் பழமையான தமிழ் இசை என்று கூறிவந்த அனைத்தையும் உடைத்து வரலாற்றுரீதியான ஒரு பதிவையே தந்து சென்றார்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பி-யின் இன்னொரு முக்கியமான படைப்பு ‘காக்காமுட்டை’. ஒரு குறுகிய நிலப்பரப்பைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆனால் உலக சினிமா விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்த இடைவெளியை மிகச்சரியாக நிரப்பினார் ஜி.வி.பிரகாஷ். இந்த அடையாளங்கள் அனைத்தையும் தாண்டி சமூகவெளியில் அரசியல் உணர்வுடன் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் சமரசமின்றி வரவேற்கப்பட வேண்டியவர்.

ஆனாலும், இன்னும் இன்னும் நிறைய 'இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்' தேவைப்படுகிறார். வாருங்கள் 'இசை டார்லிங்'.

- இனியவன்

banner

Related Stories

Related Stories