சினிமா

‘Avengers: End Game’ - இறுதிமூச்சுவரை போராடும் ஹீரோஸ்.. சொடக்கில் கதைமுடிக்கும் தானோஸ்!

இழப்பதற்கு எதுவுமின்றி அத்தனையும் இழந்து நிற்கும் சூப்பர் ஹீரோக்கள் ஒரு பக்கம், உலகத்தையே சொடக்கில் காற்றில் கரைத்துவிட்ட வில்லன் மறுபக்கம். இறுதி விளையாட்டில் வெற்றி யார் பக்கம்? #SpoilerAlert

avengers end game 
google  avengers end game 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

#SpoilerAlert

கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விடையாக அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் இறுதி பாகமான ‘எண்ட் கேம்’ இன்று வெளியாகியிருக்கிறது. முந்தைய பாகமான ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்’ படத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் படம் இருக்கிறது. முதலில் முந்தைய பாகம் குறித்த ஒரு சுருக்கத்தை நினைவூட்டிக்கொள்ள டைம் டிராவல் செய்து திரும்பலாம்.

இந்த பிரபஞ்சத்தில் பல உலகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உலகத்திலும் பல உயிர்கள் வாழ்கின்றன. அப்படி பிரபஞ்சத்தில் ஆறு இடங்களில் ஆறு சக்திவாய்ந்த இன்ஃபினிட்டி கற்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்றாக்கினால் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க முடியும். அப்படியான ஆறு சக்தி வாய்ந்த கற்களை வசப்படுத்துகிறான் சூப்பர் வில்லன் தானோஸ். தானோஸூக்கு எதிராக அயர்மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், பிளாக் விடோ, ஹாக் ஐ , டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்கிறார்கள். தானோஸை எதிர்த்து உலகத்தைக் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் நிலைமையோ தலைகீழ். தானோஸ் ஒரே சொடக்கில் உலகத்தில் பாதியை அழித்துவிடுகிறான். சூப்பர் ஹீரோக்களும் சருகாகி மறைகின்றனர். நிக் ஃப்யூரியும் காற்றில் கரைகிறார். நிக் அந்த நேரத்தில் கேப்டன் மார்வெலுக்கு சிக்னல் அனுப்புவதோடு படம் முடியும். இப்படத்தின் தொடர்ச்சியாக ‘எண்ட் கேம்’ தொடங்குகிறது.

விண்வெளியில் எங்கேயோ சிக்கி மடிந்து கொண்டிருக்கிறார் அயர்மேன். கேப்டன் மார்வெல், தோர், பிளாக் விடோ ஒரு பக்கம் என்ன செய்ய என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் அயர்ன்மேனை காப்பாற்றி பூமிக்கு அழைத்துவருகிறார் கேப்டன் மார்வெல். தானோஸை தேடிக் கண்டுப்பிடித்து இன்ஃபினிட்டி கற்களை அழிக்கத் திட்டமிடுகிறார்கள் அவெஞ்சர்ஸ். பூமியை மயானமாக்கிவிட்டு, வேறு ஒரு கிரகத்தில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தானோஸைத் தேடிப் பிடித்து கற்களை அழிக்கச் செல்கிறார்கள் சூப்பர் ஹீரோக்கள். ஆனால் இன்ஃபினிட்டி கற்கள் அவனிடம் இருக்காது. கோவத்தில் தானோஸை கொன்றுவிட்டு பூமிக்குத் திரும்புகிறது டீம். அத்தோடு ஐந்து வருடங்கள் ஓடிவிடுகிறது.

எதிர்பாரா நேரத்தில் குவாண்டம் கோரில் சிக்கியிருக்கும் ஏன்ட்மேன் வெளியே வருகிறான். வெளியே வந்தவனுக்கு ஐந்து வருடத்துக்கு முன்பு உலகம் தானோஸால் அழிந்துவிட்டதும் தெரிகிறது. நேரடியாக அவெஞ்சர்ஸை நோக்கி நடையைக் கட்டுகிறான். கடந்தகாலத்துக்குச் சென்று தானோஸூக்கு முன்னர் கற்களை நாம் எடுத்துவிட்டால் தானோஸூம் இருக்கமாட்டான், உலகமும் அழிந்திருக்காது எனும் அற்புத திட்டத்தைச் சொல்கிறான் ஏன்ட் மேன். டைம் டிராவல் செய்து இழந்ததை சரி செய்ய மிச்சமிருக்கும் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்து செல்கிறார்கள் அவெஞ்சர்ஸ். அதன்பிறகான சம்பவங்களே மீதிக்கதை.

avengers
avengers

மார்வெலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இது 22-வது படம், அவெஞ்சர்ஸ் பாகங்களில் நான்காவது படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படமாவது கடந்த பத்துவருட மார்வெல் ரசிகர்களின் காத்திருப்புக்கான ஒற்றை விடை. அவெஞ்சர்களின் இறுதி சாகசங்கள் இந்தப் படத்தில் பல ஆச்சரியங்களுடன் நிகழ்ந்தேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் அயர்மேனாக லீட் ரோல் செய்த டோனி ஸ்டார்க்கிற்கு தமிழ் டப்பிங்கில் குரலுதவி செய்திருப்பவர் விஜய்சேதுபதி. கடந்த பத்து வருடமாக ஒரு குரலைக் கேட்டுவிட்டு, திடீரென இன்னொரு குரலை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனால் பிளாக் விடோவுக்கான ஆண்ட்ரியா குரல் பொருத்தம். முடிந்த வரைக்கும் ஆங்கிலத்திலேயே படத்தைப் பார்ப்பது நல்ல அனுபவத்தைத் தரும்.

குடி போதைக்கு அடிமையாகி தொப்பையுடன் இன்ட்ரோ கொடுக்கும் தோர், இனி அயர்ன் சூட்டை தொடமாட்டேன் என கறார் காட்டும் அயர்ன்மேன், ஆற்றாமையால் கில்லராக மாறியிருக்கும் ஹாக் ஐ, எப்போதுமே ஒழுக்க சிந்தனையோடு இருக்கும் கேப்டன் அமெரிக்கா என இண்ட்ரோ சீனிலேயே படம் கவர்கிறது.

பொதுவாக சூப்பர் ஹீரோ படமென்றாலே வில்லன் தோற்பான், ஹீரோ ஜெயிப்பான் என்பதே எழுதப்படாத விதி. ஆனால் என்னதான் செய்தாலும் அழிக்கமுடியாத தானோஸ் ஒரு சூப்பர் வில்லன். எத்தனைமுறை வீழ்த்த நினைத்தாலும் அழிக்கமுடியாத ஒற்றை திமிங்கலம். நடிப்பிலும், வசனத்திலும், ஆக்‌ஷனிலும் ஈர்க்கிறான் தானோஸ். தானோஸாக நடித்த ஜோஸ் புரோலினுக்கு வாழ்த்து.

இறந்துவிட்ட தானோஸ் மீண்டும் வரும் இடமாகட்டும், அயர்ன்மேனின் க்ளைமேக்ஸ் காட்சி, கேப்டன் அமெரிக்கா இன்னொரு கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் காட்சி, ஸ்டார்க் தன்னுடைய தந்தையை சந்திக்கும் இடம், அஸ்கார்டுக்கு டிராவல் செய்யும் இடம், கேப்டன் அமெரிக்கா தன்னுடைய காதலியை சந்திக்கும் இடம் என மார்வெல் ரசிகர்களுக்கு எக்கச்சக்க ஸ்வீட் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

thanos 
thanos 

முந்தைய பாகங்கள் தெரிந்தால் மட்டுமே, இந்தப் பாகத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். புதிதாக செல்பவர்களுக்கு படம் சிக்கலே. முதல் பாகத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் பல இடங்களில் நம்மைச் சோதிக்கும். படத்தின் கடைசி அரை மணிநேர க்ளைமாக்ஸ் தான் படத்தை முழுமையாகத் தாங்குகிறது. வழக்கமான டைம் டிராவல் கதை, வில்லனை அழித்து பூமியை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ என தெரிந்த கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள் இயக்குநர்கள் அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ.

மார்வெல்லின் கிளாசிக் கிராஃபிக்ஸ், த்ரில்லிங் ஒளிப்பதிவு, மிரட்டல் எடிட்டிங் என படத்தில் அனைத்துமே கச்சிதம். ஏன்ட்மேனின் கவுன்ட்டர்கள், அயர்ன்மேனின் காமெடிகள் ஓரளவுக்குக் கைகொடுக்கிறது. நிறைய விஷயங்களை ஒரே படத்தில் எடுத்துவரும்போது சில குறைகள் தோன்றும். இப்படமும் அந்தக் குறைகளிலிருந்து தப்பவில்லை. ஆனால் உணர்வுகளால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு படத்தை வேறு தளத்துக்கு நகர்த்தியும் விடுகிறது. நிறைய நாஸ்டால்ஜிக் நினைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஒற்றைச் சொடக்கு செய்யும் மேஜிக்குகளும் ஏராளம்.

avengers 
avengers 

மார்வெல்லை கொண்டாடுகிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஸ்டான் லீ தான். அவரை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவேண்டியதும் அவசியம். அவர் திரையில் தோன்றாமல் வெளியாகும் முதல் படமும் இதுதான் என்பது வருத்தம். அவெஞ்சர்ஸை தந்த ஸ்டான்லீக்கு ஒரு ராயல் சல்யூட்.

இறுதியாக, ‘அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ ஒரு தரமான சம்பவம் தான். சில இடங்கள் உங்களைச் சோதித்தாலும் ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோ அதுவும், எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் பார்த்துவிட நிச்சயம் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories