உலகம்

“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் மே 7ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடித்து வந்த போரை, அணுஆயுத போராக மாறாமல் நான் தான் தடுத்தேன்” என 80வது முறையாக இதே கருத்தை கூறியுள்ளார்.

2025ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே இந்தக் கருத்தை டிரம்ப் கூறிவரும் நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு விளக்கமளித்த ஒன்றிய மோடி அரசு அமெரிக்கா இதில் மத்தியஸ்தம் செய்யவில்லை என கூறியிருந்தது. 

ஆனால் டிரம்ப் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்காமல், இந்தியா - பாகிஸ்தான் மட்டுமல்ல மொத்தம் 8 உலக நாடுகளின் போரை நான்தான் முயற்சி செய்து நிறுத்தியுள்ளேன் என கூறிவருகிறார். 

மேலும், இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகிறது. ஜூலை 2025 இல், "5  ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று அவர் கூறினார். செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள், "7 விமானங்கள்" சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் நவம்பரில், "எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று டிரம்ப் கூறினார். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. தற்போது "10 விமானங்கள்" சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார். 

இதுகுறித்து மேலும் கூறிய டிரம்ப், “தான் நிறுத்திய 8 போர்களில் குறைந்தது 6 போர்களை வரி மூலமாகவே நிறுத்தினேன். போரில் ஈடுபட்டுவரும் நாடுகளிடம் நீங்கள் இப்போது போரை நிறுத்தாவிட்டால் உங்கள் மீது அதிகப்படியான வரிகளை அமெரிக்கா விதிக்கும் என கூறினேன். அதன்பின் சில நாட்களில் போர் நின்றுவிட்டது, இதன்மூலம் ஒருகோடி மக்களின் உயிரை நான் காப்பாற்றியுள்ளேன் தெரிவித்துள்ளார்.

இப்படியாக உலகம் முழுவதும் போரை நிறுத்தியுள்ள தனக்கு ‘அமைதிக்கான நோபல் பரிசு’ வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கூறி வருகிறார். இந்தக்கருத்துக்கு பாகிஸ்தானும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், அவருக்கு நோபல் பரிசு வழங்குவது பற்றிக்கூட, நோபல் கமிட்டி சிந்திக்கவில்லை. 

குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போர் நின்றுவிட்டதாக இரு நாடுகளுக்கு முன்பே தனது சமூக வலைதளத்தில் அறிவித்தது டிரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தகவலின்படி தனது சுயபுகழ்ச்சிப் பேச்சில், மே 10, 2025 முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் 80 முறைக்கு மேல், இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறியுள்ளார். அதற்கான உரிய பாராட்டு தனக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

தற்போது ஏற்கனவே அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை இந்திய எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடியை நோக்கி கேட்டு வரும் நிலையில். இதற்கே உரிய விளக்கம் அளிக்காத பிரதமர், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சுக்காவது விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுத்துள்ளது.