உலகம்
இஸ்மாயில் ஹனியேவைத் தொடர்ந்து முகமது தைஃப் : ஹமாஸின் முக்கிய தலைவரை வீழ்த்தியதாக அறிவித்த இஸ்ரேல் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஹமாஸ் மீதான தாக்குதலை அறிவித்தபோதே ஹமாஸை முழுவதுமாக அழித்துவிட்டுதான் இந்த போரை முடிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். அதன்படி இந்த தாக்குதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
இதனிடையே ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் அக்டோபர் 7 தாக்குதலில் மூளையாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் முகமது தைஃப் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 13ம் தேதி பொதுமக்கள் அதிகம் இருந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பொதுமக்கள் பலியான நிலையில், உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் அப்போது கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், தற்போது இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளது போர் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. மேலும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!