உலகம்

பாகிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிப் அலி ஜர்தாரி : முடிவுக்கு வந்த அரசியல் குழப்பம் !

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்பட்டது. இதில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 தொகுதிகளும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

shahbaz sharif

இதன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தின . அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில், 201 ஓட்டுகள் பெற்று பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கத்தியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.இம்ரான் கான் கட்சியின் ஆதரவு சுயேச்சைகள் நிறுத்திய ஒமர் அயூப் கான் என்பவருக்கு ஆதரவாக 91 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், சுயேச்சைகளின் ஆதரவுடன் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அதிபர் வேட்பாளர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி போட்டியிட்டார். இந்த வாக்கெடுப்பில் ஆசிப் அலி ஜர்தாரிக்கு 255 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முகமது கானுக்கு 119 வாக்குகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானில் அதிபரை விட பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேர்தல் பத்திர விவகாரம் : காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் - SBI தீர்ப்பின் முழு விவரம்!