உலகம்

மற்றொரு வழக்கில் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு : ரூ. 2900 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பெண்களும் டிரம்ப் மேல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை எழுப்பினர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல் (E Jean Carroll), டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு அவருக்கு 65 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக மற்றொறு வழக்கில் டிரம்புக்கு 355 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தனது சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் அவர் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவரது நிறுவனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்று வரும் டிரப்புக்கு இவ்வாறு நீதிமன்றத்தில் வெளிவரும் தீர்ப்புகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செல்ஃபியால் ஏற்பட்ட கலவரம் : மணிப்பூர் வன்முறையில் 2 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி !