உலகம்

விளையாட்டாக குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் : 1 கோடி ரூபாய் அளவு அபராதம் ? பின்னணி என்ன ?

கடந்த 2022-ம் ஆண்டு இந்திய வம்சாவளியும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான 18 வயதான செஸ் விளையாட்டு வீரர் ஆதித்யா வர்மா விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது ன்னுடைய நண்பர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் "நான் தாலிபான் அமைப்பை சேர்ந்தவன், நான் இப்போது செல்லும் விமானத்தை தற்போது வெடிக்க வைக்க போகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள் இதுகுறித்து போலிஸாரிடம் கூறியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த போலிஸார் உடனடியாக, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விமான நிலைய பெயர் பட்டியலை பார்த்தபோது அதில் ஆதித்யா வர்மாவின் பெயர் இருந்துள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உடனே விரைவாக செயல்பட்ட ராணுவம், இரண்டு போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள் ஆதித்யா வர்மா சென்றுகொண்டிருந்த விமானத்தை தரையிறங்க கூறியுள்ளனர். ராணுவத்தால் அனுப்பப்பட்ட போர் விமானங்களும் இந்த விமானத்தை பத்திரமாக தரைஇறங்க வைத்துள்ளன.

பின்னர் விமானத்தில் நுழைந்த அதிகாரிகள், ஆதித்யா வர்மாவிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, "என்னை மன்னித்துவிடுங்கள் நான் நண்பர்களிடம் விளையாடுவதற்காக இந்த குறுஞ்செய்தியை அனுப்பினேன்" என்று கூறியுள்ளார்.எனினும் அவரை பிடித்த விமான நிலைய அதிகாரிகள், அவரை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆதித்த வர்மா பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார். ஸ்பெயின் போலீசார், அவர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை குறித்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பகுதிகள் குறித்தும் தகவல்களை தேடி இருக்கும் விவகாரங்கள் குறித்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல, அவரின் மெசேஜ் காரணமாக விமான பாதுகாப்புக்கு இரண்டு ஜெட் விமானங்களை அனுப்பப்பட்டதற்கு சுமார் ரூ. 85 லட்சம் செலவீனமாக அவரிடம் கேட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: அரசியலமைப்பின் முன்னுரையில் நீக்கப்பட்ட மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் : ஒன்றிய பாஜக அரசு அடாவடி !