உலகம்

அமெரிக்காவில் டிரம்ப்க்கு பெருகும் ஆதரவு - முக்கிய மாகாணங்களில் ஆதரவை இழக்கும் பைடன் அரசு !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இது தவறு வயது முதிர்வு காரணமாக பைடன் அடிக்கடி தடுமாறி விழுவது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் ஹார்வர்ட்-ஹாரிஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போது தேர்தல் நடந்தால் டிரம்ப் பைடனை விட 5% வாக்குகளை அதிகம் பெற்று வெற்றிபெறுவார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக முக்கிய மாகாணங்களில் பைடனை விட டிரம்ப் அதிக ஆதரவு பெற்றுள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தி ஹில் இதழ் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், யார் அதிபர் என தீர்மானிக்கும் ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் பைடனை விட டிரம்ப் அதிக ஆதரவு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சில மாகாணங்கள் வழக்கமாக ஜனநாயக கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் வாக்களிக்கும் வழக்கம் உடையது. ஆனால், சில மாகாணங்கள் மட்டுமே அப்போதைய சூழலை பொறுத்து வாக்களித்து வருகிறது. அந்த மாகாணங்களில் தற்போது டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு : களத்தில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க MPக்கள்!