உலகம்

டெல்லியை விட பரப்பில் இரண்டு மடங்கு பெரியது: 37 ஆண்டுகளுக்குப் பிறகு நகரும் உலகின் மிகப்பெரும் பனிப்பாறை!

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் வாயுக்களால் புவி மண்டலத்தின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருகிறது.

பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதால் கடல் மட்டம் அதிகரிப்பதால் கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில், அண்டார்டிகாவில் இருந்து 4,000 சதுர கிமீ பனிப்பாறை நகரத்தொடங்கியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 1986 ஆம் ஆண்டில் மேற்கு அண்டார்டிகாவில் A23a என்று பெயரிடப்பட்ட பனிப்பாறை ஒன்று உடைத்து கடலில் நகரத் தொடங்கியது. பின்னர் இது ஏடென் கடல்பகுதியில், நகரமுடியாமல் தரைதட்டியது.

சுமார் 37 வருடங்களாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த பனிப்பாறை தற்போது மீண்டும் நக்கத்தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமார் ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பாறையானது, பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களின் உதவியால் நகரத்தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

4,000 சதுர கிமீ (1,500 சதுர மைல்கள்) பரப்பரளவு கொண்ட இந்த பனிப்பாறை, நியூயார்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரியதாகும். அதே போல டெல்லி, லண்டன் மாநகரை விட இரண்டு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. இந்த A23a பாறை தெற்கு ஜார்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், இதன் காரணமாக ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: பழுதடைந்த துளையிடும் இயந்திரம்: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணியில் பின்னடைவு- வரவழைக்கப்பட்ட ஆஸ். நிபுணர்!