உலகம்

திவாலானது பிரிட்டனின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்.. பிர்மிங்காம் நகராட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சி !

ஐரோப்பிய யூனியனின் அங்கமாக இருந்த பிரிட்டன் மக்களின் பிரெக்சிட் ஓட்டெடுப்புக்கு பிறகு அதிலிருந்து விலகி தற்போது தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த விலகலுக்கு பிறகு பிரிட்டனின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பொருளாதார சிக்கலை தீர்க்க அந்த நாட்டரசு பல தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான பிர்மிங்காம் நகரசபை தான் திவாலானதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனுக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக பிர்மிங்கான் இருந்து வருகிறது. அதிலும் இங்குள்ள பெரும்பாலான மக்கள் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த நகரம் பிரெக்சிட்டுக்கு பின்னர் கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. உலகளாவிய பணவீக்கம் பிரிட்டன் நகரங்களின் வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், நிதிக் கையிருப்பு கிட்டத்தட்ட வெகுவாக சரிந்து விட்டதால் தான் திவாலாகி விட்டதாக பிர்மிங்கான் நகரசபை அறிவித்துள்ளது.

இது குறித்து பிர்மிங்கான் நகர சபையின் தலைவர் ஜான் காட்டன் கூறும்போது, "நாடு முழுவதும் உள்ள உள்ளூர் நகரங்களை போலவே, பர்மிங்காம் நகர சபையும் நிதி சவால்களை எதிர்கொள்கிறது. வயது வந்தோருக்கான சமூகப் பாதுகாப்புத் தேவையின் அதிகரிப்பு, வணிக வருமானம் குறைவு, பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது "எனக் கூறியுள்ளார்.

அதே நேரம் அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை கேட்டு போராடி வரும் நிலையில், இது குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஆண்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி பெண்கள் தொடர்ந்த வழக்கில் சமஊதியம் வழங்க பிர்மிங்காம் நகர நிர்வாகத்துக்கு இங்கிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்தே பர்மிங்காம் நகர சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: ஜி-20 மாநாடு.. பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த மறுத்த மோடி.. அமெரிக்கா கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசு !