உலகம்

துருக்கியைத் தொடர்ந்து ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என அச்சம் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த மாதம் 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் ரிக்டர் அளவில் 6.8 என்ற பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 12 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், சேதம் அதிகரிக்கும் என்றும், உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சம் எழுந்துள்ளது. பெருவின் எல்லைக்கு அருகில் உள்ள ஈக்வடார் பாலாவோவில் பூமிக்கு 66 கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கலாச்சாரத்துக்கு எதிரானது.. பெண்கள் கூடும் நிகழ்வை தடுத்து நிறுத்திய பஜ்ரங் தள்.. கர்நாடகாவில் பரபரப்பு !