உலகம்

நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் வரலாறு காணாத கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி.. பலர் மாயம் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த மாதம் 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தின் கோர பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் துருக்கியில் தற்போது பயங்கர மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள அதியமான் மாகாணம் மற்றும் சான்லியுர்ஃபா மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கடும் மழை பெய்துவருவதால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதியமான் மாகாணத்தில் 136 மிமீ மழையும், சான்லியுர்ஃபாவில் 111 மிமீ மழையும் ஒரே நாளில் பெய்ததாக துருக்கி அரசு அறிவித்துள்ளது.

அதன் வருடாந்திர மழையில் மூன்றில் ஒரு பகுதி மழை, இப்போது அங்கு சில நாட்களில் பெய்துள்ளதாகவும், இது துருக்கியில் வரலாறு காணாத மழைபொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துவருகின்றனர். இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Also Read: அமெரிக்காவில் கோடாரியால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகர்.. மர்மநபர் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !