உலகம்

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.250 கோடி வழங்கிய மர்ம மனிதர்.. நெட்டிசன்கள் பாராட்டு !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தற்போது துருக்கியில் கடும் குளிர் வாட்டிவருவதால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், நிலநடுக்கத்தால் கடுமையாக துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு பல்வேறு நாடுகளும், தொண்டு நிறுவனங்களும்,தனி நபர்களும் நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கிட்டத்தட்ட 30 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் 250 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், அந்த நன்கொடையை வழங்கியவர் பாகிஸ்தானின் குடிமகன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு பல்வேறு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?