உலகம்

560 சடலங்களை அறுத்து உடல் உறுப்புகள் விற்பனை.. அமெரிக்காவை அதிரவைத்த மோசடி.. தாய், மகள் கைது !

அமெரிக்காவின் கொலராடாவை சேர்ந்தவர் மேகன் ஹெஸ் (வயது 46). இவரும் இவரின் தாய் ஷெர்லி கோச் (வயது 69) என்பவரும் சேர்ந்து இறுதி சடங்கு செய்யும் வேலையையும் 'டோனர் சர்வீசஸ்' என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் உரிமையாளர்களின் அனுமதியின்றி இறந்தவர்களின் உடல்களை அறுத்து அவற்றின் உடல்பாகங்களை பிறருக்கு விற்பனை செய்ததாக தண்டிக்க பட்டுள்ளனர். இவர்கள் தங்களிடம் வரும் சடலங்களை போலியான நன்கொடை படிவத்தின் மூலம் இறந்தவர்களின் உடல் பாகங்களை மருத்துவமனை மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கி மோசடி செய்துள்ளனர்.

அமெரிக்க சட்டங்களின்படி இதயங்கள், சிறுநீரகங்கள் மற்றும் தசைநாண்கள் போன்ற உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் மட்டுமே செய்யமுடியும் அதனை விற்பது சட்டவிரோதமானது. அதேநேரம் மருத்துவ கல்லூரிகளுக்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது சில மாகாணங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கள் உடல் உறுப்பு தான மையத்த்தை வைத்து விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த சம்பவம் தனியார் நிறுவனத்தின் புலனாய்வின் மூலம் வெளிவந்த நிலையில், அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய அனுமதியின்றி 560 சடலங்களின் உடல் பாகங்களை இவர்கள் விற்பனை செய்தது தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மேகன் ஹெஸ்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவரின் தாய் ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் இது போன்ற பல்வேறு மோசடிகள் நடந்திருக்கலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.

Also Read: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் ஏன்? - அதற்கு பின்னால் உள்ள அரசியலை உடைத்த முதலமைச்சர் !