உலகம்

ஒரே வாரம்தான்.. 1.28 லட்சம் கோடியை இழந்து நடுத்தெருவுக்கு வந்த உலகப் பணக்காரர்.. நடந்தது என்ன ?

டிஜிட்டல் உலகில் அடுத்தகட்ட புரட்சியாக கருதப்படுவது கிரிப்டோ கரன்சிகள்தான். எந்த நாட்டுக்கும் எந்த வங்கிக்கும் கட்டுப்படாத இந்தவகை கரன்சிகள் கள்ளமார்கெட்டுக்கு பெரும் உபயோகமாக இருக்கின்றன. பிட்காய்ன், டெதர், எத்ரியம், பினன்ஸ் போன்ற கிரிப்டோ கரன்சிகள் உலகளவில் பிரபலமாக இருக்கும் நிலையில், சிறியவகை கிரிப்டோ கரன்சிகளும் புழக்கத்தில் இருக்கின்றன.

இதன் ஆரம்பகட்ட வளர்ச்சி காரணமாக இதில் பலர் முதலீடு செய்தனர். இதன் காரணமாக இதன் வளர்ச்சி பெரும் அளவில் இருந்தது. இதில் முதலீடு செய்த பலர் திடீர் பணக்காரராக மாறினர். அவர்களில் ஒருவர்தான் சாம் பேங்க்மேன் ப்ரைட்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த இவர் கடந்த 2019ம் ஆண்டு தனது 30-வது வயதில் FTX எனும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கினார். இதில் பலர் முதலீடு செய்த நிலையில், இவரின் நிறுவனம் அபரீத வளர்ச்சி கண்டது. இதனால் இரண்டே ஆண்டில் சாம் பேங்க்மேன் உலக பணக்காரர் வரிசையில் இடம்பெற்றார்.

இவரின் சொத்து மதிப்பு ₹2 லட்சம் கோடியை தாண்டிய நிலையில், ப்ளூம்பெர்க்கின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் சாம் பேங்க்மேன் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து இவர் தனது சொத்தை பிற நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் அதனை தனது நிறுவனத்திலேயே மீண்டும் முதலீடு செய்தார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக உலகளவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இவரின் நிறுவனமும் தடுமாற்றத்தை கண்டது. இதன் காரணமாக இவர் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப்பெற்றனர். இதனால் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து சாம் பேங்க்மேன் விலகினார்.

மேலும், தனது நிறுவனம் திவாலானதாகவும் அறிவித்தார். இதனால் ஒரே வாரத்தில் அவரின் ₹1.28 லட்சம் கோடி சொத்துக்கள் பறிபோகியுள்ளது. உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த நபரும் இவ்வளவு சொத்துக்களை இழந்ததில்லை என ப்ளூம்பெர்க் தளம் அறிவிக்கும் அளவு இவரின் நிலை மோசமாகியுள்ளது.

Also Read: "இஷ்டம் இருந்தா வாங்க,, இல்லை ராஜினாமா செய்துட்டு போங்க" - TWITTER ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மிரட்டல் !