உலகம்

பாகிஸ்தானில் நடந்த பிரம்மாண்ட பேரணி : இம்ரான் கான் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு - திட்டமிட்ட சதியா?

பாகிஸ்தான் இதுவரை கண்டிருக்கும் பிரதமர்களில் யாருமே 5 ஆண்டு பதவிகாலத்தை நிறைவு செய்ததில்லை. முதல் பிரதமரில் ஆரம்பித்த இந்தச் சோகம் இன்று வரை தொடர்கிறது. பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் முழுமையாக பதவி வகித்ததில்லை. பாதியிலேயே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். அல்லது ராணுவப் புரட்சி நடந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும்.

1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார். இந்தியா மீது போர் தொடுக்க மறுத்ததால் ராவல்பிண்டியில், 1951 அக்டோபர் 16ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின்னர் பாகிஸ்தான் 7 ஆண்டுகளில் கவாஜா நசிமுதீன், முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி, ஹுசைன் சஹீத் சுரதி, இப்ராகிம் இஸ்மாயில் சந்திரிகர், பெரோஷ் கான் நூன் என 6 பிரதமர்களைக் கண்டது.

பின்னர் 1958 முதல் 1971 வரை நாடு ராணுவ ஆட்சிக்கு சென்றது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 8வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவர்தான்.

பின்னர் 1973 ஆகஸ்ட் மாதம் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ, பிரதமராக 4 வருடங்களை நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது. 1977 முதல் 1988 வரையில் ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய 1999 வரையில் 5 பிரதமர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற முகமது கான், பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் என யாரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெனாசிர் பூட்டோ. பிரதமராக இவர் பதவிவகித்த 2 முறையும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது படுகொலை செய்யப்பட்டார்.

ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், 2012 ஆண்டு முதல் 2018 நாடாளுமன்ற தேர்தல் வரையில் 7 பேர் பிரதமர் பொறுப்பேற்றனர். ஜபருல்லா கான் ஜமாலி, சவுத்ரி ஹுசைன், சௌகாட் அஜிஜ், யூசுப் ராசா கிலானி, பர்வேஸ் அஸ்ரப், நவாஸ் செரீப், ஷாஹித் ககன் அப்பாசி பிரதமரான நிலையில், யூசுப் ராசா கிலானி மட்டும் 4 ஆண்டுகள் 86 நாட்கள் பிரதமராக பதவியிலிருந்தார்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த சூழலில் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் இம்ரான் கானின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டும் என பி.டி.ஐ கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி பாகிஸ்தானில் உள்ள வாசிராபாதில் இன்று பேரணி துவங்கியது. இந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்துக்கொண்டு பேரணியாக மக்களை சந்தித்து வந்ததார். அப்போது பேரணியில் மர்ம நபர்கள் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். மேலும் அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மீதும் குண்டு பாய்ந்ததில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்த இம்ரான் கான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான போலிஸார் பாதுகாப்பில் இருந்தபோதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!