உலகம்

"பூமிக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்.." 65 வயது மூதாட்டியை மோசடி செய்த போலி விண்வெளி வீரர்!

ஜப்பான், ஷிகா மாகாணத்தில் வசித்து வருபவர் 65 வயதுடைய மூதாட்டி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இருவரும் பழகி வந்த நிலையில், அப்போதில் இருந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

அப்போது அந்த நபர் தன்னை ஒரு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் ரஷ்ய விண்வெளி வீரரார் என்று கூறியுள்ளார். மேலும் தான் விண்வெளியில் தான் அதிக நேரம் செலவழிப்பதாகவும் கூறி வந்துள்ளார். இவையனைத்தையும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார். மேலும் மூதாட்டியிடம் இருந்து அவ்வப்போது பண உதவியும் பெற்று வந்துள்ளார் அந்த நபர்.

இதையடுத்து இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளார். இதனால் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அவரிடம் அவரை ஜப்பானுக்கு பறக்க விடக்கூடிய ராக்கெட்டுக்கு தரையிறங்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பணம் கேட்டுள்ளார். அதனையும் நம்பிய மூதாட்டி அவர் கேட்ட தொகையான 4.4 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 24.8 லட்சம்) கொடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 5 வரை ஐந்து தவணைகளில் அந்த நபருக்கு மொத்தம் 4.4 மில்லியன் யென்களை அனுப்பியுள்ளார் மூதாட்டி. இதையடுத்து தான் இப்பொது விண்வெளியில் இருந்து பூமி திரும்பியதும் திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த அழைப்பும் , குறுஞ்செய்தியும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அந்த மர்ம நபரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மர்ம நபரின் இன்ஸ்டா ஐ.டி-யை சோதனை செய்ததில், விண்வெளி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் அதிகமாக காணப்பட்டதால் அவையனைத்தையும் மூதாட்டி முழுவதுமாக நம்பியுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!